உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கானு தெரிஞ்சுக்கனுமா..? இந்த 5 அறிகுறிகளை கவனிச்சு பாருங்க..! - Agri Info

Adding Green to your Life

September 15, 2023

உங்க இதயம் ஆரோக்கியமா இருக்கானு தெரிஞ்சுக்கனுமா..? இந்த 5 அறிகுறிகளை கவனிச்சு பாருங்க..!

 

உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் நிறைந்தவர்களை மட்டுமே தாக்கக்கூடும் என எண்ணப்பட்டு வந்த மாரடைப்பு, நெஞ்சுவலி, தமனி செயலிழப்பு போன்ற இருதய நோய்கள் இப்போது இளம் வயதினரையும் அதிக அளவில் தாக்கி வருகின்றனர். இதற்கு மாறி வரும் உணவுப்பழக்கம், அதிகம் நேரம் உட்காந்து கொண்டே வேலை பார்ப்பது, நொறுக்குத் தீனிகள் மற்றும் பதப்பட்ட உணவுகளை அதிக அளவில் உட்கொள்வது, உடற்பயிற்சி மற்றும் குறைவான உடல் செயல்பாடுகள், மன அழுத்தம், வேலைப்பளு ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.


குறிப்பாக இதய நோயின் அறிகுறிகளை கண்டுகொள்ளாமலோ அல்லது தெரியாமலோ இருப்பது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாகும். பொதுவாக அதிக அழுத்தம், நெஞ்சை வைத்து யாரோ அழுத்துவது போன்ற உணர்வு, எரிச்சல், இறுக்கம், மார்பின் மையப்பகுதியில் வலி ஏற்படுவது ஆகியவற்றை நெஞ்செரிச்சல் அல்லது வாயுத் தொல்லை என மக்கள் எளிதாக கடந்து செல்கின்றனர். எனவே தான் மக்கள் தங்களது இருதய ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டிய 5 முக்கிய அறிகுறிகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளோம்...

1. மார்பு வலி: பரபரப்பாக வேலை செய்யும் போதோ அல்லது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போதோ மார்பில் ஊசி குத்துவது போல் வலி எடுப்பது, நெஞ்சில் அதிக அழுத்தமான உணர்வு போன்ற மார்பு பகுதியில் திடீரென ஏற்படும் அசெளகரியங்கள் மாரடைப்பு ஏற்படுத்துவதை சுட்டிக்காட்டுகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் சில நிமிடங்கள் வரை நீடித்தால் கூட அது மாரடைப்பு நெருங்குவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

2. கைக்கு வலி பரவுதல்: மாரடைப்பு ஏற்படுவதற்கான மிகவும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று, தோள்பட்டையில் இருந்து உடலின் இடது கைக்கு வலி பரவுவதை உணர்வது ஆகும். இதுபோன்ற உணர்வை அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது கட்டாயம் ஆகும்.

3. தலைச்சுற்றல் அல்லது லேசான மயக்கம்: நார்மலாக இருக்கும் நபருக்கு திடீரென தலைசுற்றுவது அல்லது மயக்கம் வருவது போல் உணர்வு ஏற்படுவது ரத்தம் அழுத்தம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டும் அறிகுறியாகும். இது குறிப்பிட்ட நபரின் இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் தடுமாறுவதைக் குறிக்கிறது. இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. நேரம் தாழ்த்தாமல், ஆம்புலன்சை வரவழைத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும்.

4. தொண்டை அல்லது தாடை வலி: தொண்டை அல்லது தாடை வலி இதயத்துடன் தொடர்புடையது அல்ல என்றாலும், மார்பிலிருந்து தொண்டை அல்லது தாடைக்கு பரவும் வலி அல்லது அழுத்தம் இதய பிரச்சனையின் அறிகுறியாக மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது.

5. வியர்வை: ஓய்வாக அமர்ந்திருக்கும் போது அல்லது ரீலாக்ஸாக உறங்கிக்கொண்டிருக்கும் போது உடல் முழுவதும் குளிர்ச்சியான வியர்வை வெளியேறுவது மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறியாகும். எனவே திடீரென உடல் முழுவதும் வியர்த்து கொட்ட ஆரம்பித்தால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மேலே உள்ள அறிகுறிகளைத் தவிர, மூச்சுத் திணறல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, வாந்தி, அஜீரணம், கால் வலி அல்லது கை வலி, கணுக்கால் வீக்கம், தீவிர சோர்வு ஆகியவையும் இதய ஆரோக்கியத்தைக் குறிக்கக்கூடிய முக்கிய அறிகுறிகள் ஆகும். அறிகுறிகள் ஏதுமின்றி கூட திடீரென மாரடைப்பு ஏற்படலாம் என்பதால் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றுவதும், சரியான நேரத்தில் பரிசோதனைகளைச் செய்து கொள்வதும் கட்டாயமாகும். குறிப்பாக ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, புகை மற்றும் மதுப் பழக்கத்தை கைவிடுதல் ஆகியவற்றை கடைபிடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.


No comments:

Post a Comment