உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் உணவுப் பழக்கத்தை முறைப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காலை முதல் இரவு வரையில் உணவுகளை முறைப்படுத்தி எடுத்துக் கொள்ளும் அதே சமயத்தில், நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதையும் உறுதி செய்தாக வேண்டும். எந்த உணவை சாப்பிடுவது, எதை தவிர்ப்பது என்ற தடுமாற்றம் ஏற்படும்.
குறிப்பாக மிகுதியான உடல் எடைக்கு வித்திடுவதாகக் கருதப்படும் மாவுச்சத்து உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை குறைப்பது குறித்துதான் குழப்பமே வரும். இதில் எந்த உணவை குறைத்தால் உடல் எடை குறைப்பு முயற்சிக்கு உதவியாக அமையும் என்பதுதான் நம் முன்னால் எழுகின்ற கேள்வியாகும்.
குறை மாவுச்சத்து உணவுமுறை : மாவுச்சத்து உணவுகளை குறைத்துக் கொள்ளும் முறைக்கு பெயர் கீட்டோ டயட் திட்டமாகும். மேலும் இதை அட்கின் டயட் திட்டம் என்றும் கூறுவார்கள். இந்த உணவு முறையில் மிகுதியான கொழுப்பு உணவுகளையும், புரத உணவுகளை மிதமான அளவிலும் எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்புகளை ஆற்றலாக மாற்றும் கீடோசிஸ் முறைக்கு உடலை தயார் படுத்த இவ்வாறு செய்கின்றனர்.
பலன்கள் : குறைவான மாவுச்சத்து உணவு முறையை கடைப்பிடிப்பதால் உடலில் உள்ள கிளைகோஜன் மற்றும் நீர்ச்சத்து ஆகியவை குறையத் தொடங்கும் நிலையில், உடல் எடை வேக, வேகமாக குறையத் தொடங்கும். பசி உணர்வு வெகுவாகக் கட்டுப்படுகிறது என்று இதை பின்பற்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கிறது என்றும், சோர்வு ஏற்படுவதில்லை என்றும் கூறுகின்றனர்.
எதிர்மறை விளைவுகள் : நமக்கான உணவுப் பட்டியல் சுருங்கும். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டியிருக்கும். உடலில் கீட்டோ அளவுகள் அதிகரிக்கும்போது சிலருக்கு காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம். மாவுச்சத்து உணவை குறைத்துக் கொள்ளும் பழக்கத்தை நீண்டகாலம் கடைப்பிடிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.
குறைகொழுப்பு உணவு முறை : கொழுப்புள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, மாவுச்சத்து உணவுகள் மற்றும் புரத உணவுகளை எடுத்துக் கொள்ளும் முறையாகும். கலோரிகளை மிகுதியாக கொண்ட கொழுப்பு உணவுகளை தவிர்ப்பதன் மூலமாக கலோரிகளை குறைப்பது இதன் நோக்கமாகும்.
பலன்கள் : செறிவூட்டப்பட்ட கொழுப்பு வகைகளை நாம் தவிர்ப்பதால் இதய நலனுக்கு இது உகந்தது. கொழுப்பு அல்லாத பிரிவில் நிறைய உணவுகள் இருப்பதால், சாப்பிடுவதற்கு நிறைய வகைகள் கிடைக்கும். பெரும்பாலும் இந்த வகை உணவுகளில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசியமான புரதச்சத்து போன்றவை கிடைக்கும்.
எதிர்மறை விளைவுகள் : குறைவான கொழுப்பு உணவுகளை சாப்பிடும் நிலையில், சிலருக்கு உடனுக்குடன் பசி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். கொழுப்பை குறைக்கிறோம் என்ற எண்ணத்தில் சிலர் மாவுச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வார்கள். அது உடல் எடை குறைப்பு முயற்சிக்கு தடையாக அமையும். உங்கள் உடலுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆரோக்கியமான கொழுப்பு வகைகள் கிடைக்காமல் போகும்.
No comments:
Post a Comment