இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது. தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலையைக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் ஐபோன்களின் பெரும்பங்கினை தயாரித்து வழங்குகிறது. இந்த சூழலில் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் நாட்டில் தனது முதலீட்டை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது.
ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் ஐபோன் தொழிற்சாலையில் தற்போது 40 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடகாவில் 600 மில்லியன் டாலர் அளவுக்கு நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதில் இரண்டு தொழிற்சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஐபோன் தயாரிக்கவும், மற்றொன்று மைக்ரோ சிப்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.
உலகின் புதிய உற்பத்தி மையமாக இந்தியா உருவாகும் என ஃபாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யங் லியூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையமாக மாறுவதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளும் இந்தியாவில் பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார். சீனாவை விட இந்தியாவில் விநியோகச் சுற்றுச்சூழல் அமைப்பு வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருவதாகக் கூறினார். இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மின்சார வாகன உற்பத்தி மையங்களை அமைக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் பரீசிலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி வரும் பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியை செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களையும் அனுப்பி வருகிறது.
சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த ஐபோன் உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் இனி அனைத்து ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தற்போது கிடைத்த தகவல்கள் உறுதி செய்துள்ளன. இதேபோன்று நத்திங் நிறுவன ஸ்மார்ட்போன்களையும் ஃபாக்ஸ்கான் சென்னை உற்பத்தி ஆலை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி என்று வரும்போது இந்தியாவிற்கும் தைவானுக்கும் இடையில் ஒரு பரஸ்பர பந்தம் வளர்ந்து வருவதை தன்னால் உணர முடிவதாக ஃபாக்ஸ்கான் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மின்சார வாகனங்களின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னை இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கிடையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்பு கூடுதல் வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
Click here for latest employment news
No comments:
Post a Comment