கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் ஏற்படக்கூடிய நோய் ஃபேட்டி லிவர் திசீஸ் (fatty liver disease) எனப்படும் கொழுப்பு கல்லீரல் நோயாகும். இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பொழுது, நமது ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில் எளிதாக குணப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருக்கும்.
எனினும், நோய் தீவிரமடைய தொடங்கும் பொழுது கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு ஆரோக்கியமான திசுக்கள் சேதமடைந்த திசுக்களால் மாற்றப்பட்டு கல்லீரலின் செயல்பாட்டில் பின்னடைவு ஏற்படும். இதனால் கல்லீரல் மோசமான சேதத்திற்கு உள்ளாகி லிவர் செர்ஹோசிஸ் (liver cirrhosis) ஏற்பட வழிவகைக்கிறது. இந்த நிலை நீடிக்கும் பொழுது கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய் உண்டாகலாம்.
ஃபேட்டி லிவர் என்பது அதிகப்படியான மதுபானங்கள் அருந்துவதால் ஏற்படக்கூடியதாகவோ அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட பிரச்சினைகளால் உண்டாகும் மது அல்லாத ஃபேட்டி லிவர் நோயாகவும் இருக்கலாம்.
உடற்பருமான நபர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது உயர் ரத்த அழுத்தம் கொண்ட நபர்களில் கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்பு படியும்போது அது வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய MAFLD அல்லது ஹெப்பாடிக் ஸ்டியாடோசிஸ் -ஐ ஏற்படுத்தலாம். ஃபேட்டி லிவர் நோய் லிவர் செர்ஹோசிஸாக மாறிவிட்டால் அதனை குணப்படுத்தவே முடியாது. எனவே இதற்கான அறிகுறிகளை ஒருவர் கட்டாயமாக தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அவை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்:
- அடிவயிறு (Ascites) : கல்லீரல் நோய் தீவிரம் அடைவதை நமக்கு உணர்த்தக்கூடிய முக்கியமான அறிகுறிகளில் அடிவயிற்றில் ஏற்படும் வீக்கம் அடங்கும். அடி வயிற்றுப் பகுதியில் உள்ள அப்டாமினல் கேவிட்டியில் ஒருவித திரவம் சேகரிக்கப்படும். ஃபேட்டி லிவர் நோய் தீவிரமடைந்த கட்டத்தை எட்டும் பொழுது, கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு அங்குள்ள ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் அந்த திரவம் வெளியேற்றப்பட்டு, அடி வயிற்றில் வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படும்.
- கால்கள் மற்றும் கணுக்கால் பகுதி (Edema) : கல்லீரலுக்கு குடல் மற்றும் பிற பகுதிகளில் இருந்து ரத்தத்தை கொண்டு வரும் போர்டல் நரம்பில் அழுத்தம் அதிகரிக்கும் பொழுது அங்குள்ள திரவமானது திசுக்களை சூழ்ந்து கால்கள் மற்றும் கணுக்கால் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது எடிமா என்று அழைக்கப்படுகிறது.
- பாதங்கள் : கொழுப்பு கல்லீரல் நோய் தீவிரமடைந்து விட்டால் கால்கள் மற்றும் கணக்கால் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை தவிர பாதங்களிலும் வீக்கம் ஏற்படலாம்.
- கைகள் : போர்டல் நரம்பில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் பொழுது கைகள் உப்பி, வீக்கத்துடன் காணப்படும்.
- நெஞ்சு பகுதி மற்றும் மார்பகங்கள் : ஆண்களில் ஃபேட்டி லிவர் நோய் மோசமடையும் போது, மார்பக திசுக்கள் பெரிதாகக் கூடிய கைனகோமாஸ்டியா (gynecomastia) ஏற்படலாம். இது ஹார்மோன் சமநிலையின்மையால் உண்டாகிறது. இதனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு இழத்தல் மற்றும் மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படலாம்.
எனது உடல் உறுப்புகளில் ஏற்படக்கூடிய வீக்கம் ஃபேட்டி லிவர் நோயின் காரணமாக தான் ஏற்படுகிறது என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்வது?
மேலே கூறப்பட்ட உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கம் கல்லீரலில் உள்ள நோயின் காரணமாக ஏற்படலாம். இது தவிர இதயம் அல்லது சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாகவும் இதே போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். எனவே காரணமில்லாமல் திடீரென்று ஏற்படும் வீக்கம் குறித்து மருத்துவரை உடனடியாக அணுகுவது அவசியம். உங்களுக்கு வீக்கம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை ரத்த பரிசோதனை, இமேஜிங் மற்றும் உங்களின் மருத்துவ வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மருத்துவர் உங்களுக்கு அளிப்பார்.
ஃபேட்டி லிவர் நோயை எவ்வாறு நிர்வகிப்பது?
ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் அதன் பிறகான முறையான சிகிச்சை ஃபேட்டி லிவர் நோய் தீவிரமடைவதை தவிர்க்க உதவும். ஆரோக்கியமான உணவு, அன்றாட உடற்பயிற்சி மற்றும் மது அருந்துவதை தவிர்த்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம். ஃபேட்டி லிவர் நோய் தீவிரமடைந்து விட்டால் அதனை குணப்படுத்த முடியாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் எனினும், இதனை நினைத்து பதட்டப்படாமல் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் நடந்து கொள்வது நோயை திறம்பட எதிர்த்து போராடுவதற்கு உதவும்.
0 Comments:
Post a Comment