Search

ஒருவருக்கு மாரடைப்பு அறிகுறி தெரிந்தால் அருகில் இருப்பவர் உடனே என்ன செய்ய வேண்டும்..?

 ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் இதயம்தான் உயிர். அப்படி இருக்கையில் அதற்கு ஏதேனும் சிறு கோளாறு இருந்தாலும் ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும். அது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். அப்படி பலரும் சமீப நாட்களாக இதய நோய்களால் பாதித்து வருகின்றனர். நேற்று நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென மறுநாள் மாரடைப்பால் இறந்துவிட்ட செய்தியை தினமும் கேட்க முடிகிறது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையும் காரணம் என்று கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை உங்கள் அருகில் இருக்கும் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உடனே நீங்கள் விரைந்து செய்ய வேண்டிய விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள். இதனால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அவருக்கு மாரடைப்புதான் என்பதை உறுதி செய்யக்கூடிய அறிகுறிகள் : 10 நிமிடங்களுக்கு மேல் கடுமையான அழுத்தம் அல்லது நெஞ்சு வலி இருக்கும். அசௌகரியமான உணர்வு, நெஞ்சை கசக்கி பிழிவது போன்ற உணர்வு, அளவுக்கு அதிகமான வியர்வை வெளியேறுதல், மூச்சு விடுவதில் சிரமம், உடலின் இயக்கம் நின்றது போன்ற உணர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும். அதுமட்டுமன்றி இரண்டு தோள்பட்டை மற்றும் கைகளில் வலி, கழுத்து, முதுகு, வயிறு, தாடை ஆகிய இடங்களிலும் கடுமையான வலி இருக்கும். இப்படியான அறிகுறிகளை ஒருவர் அனுபவிக்கிறார் எனில் அவருக்கு மாரடைப்பு வந்திருப்பது உறுதி என்கிறால் ஏசியன் மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் சுப்ரத் அகோரி.

நாடித்துடிப்பை கவனியுங்கள் : உங்கள் அருகில் இருக்கும் ஒருவர் மூச்சு விட சிரமப்படுகிறார் எனில் முதலில் அவருடைய நாடித்துடிப்பை பரிசோதனை செய்யுங்கள். இதற்கு அவருடைய கையின் மணிக்கட்டு பகுதி அல்லது கழுத்தின் இடையில் இரண்டு விரல்களை வையுங்கள். அதன் துடிப்பு நிலையாக மற்றும் சீரான இடைவெளியில் துடிக்கிறதா என கவனியுங்கள். இல்லையெனில் அவரின் நெஞ்சருகில் காதை வைத்து இதயத்துடிப்பை கவனியுங்கள். அவருக்கு துடிப்பு இல்லை எனில் உடனே சிபிஆர் சிகிச்சை கொடுக்க வேண்டும். அதாவது நெஞ்சில் இரு கைகளை வைத்து அழுத்த வேண்டும்.

அருகில் இருக்கும் மருத்துவமனையை தொடர்பு கொள்ளுங்கள் : அருகில் இருப்பவர் மாரடைப்பு அறிகுறிகளை அனுபவிக்கிறார் எனில் உடனே ஆம்புலன்ஸுக்கு தொடர்பு கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுங்கள். நீங்கள் கழிக்கும் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு ஏற்ப விரைந்து செயல்பட வேண்டும். ஒருவேளை ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் என நினைத்தால் உடனே வேறு ஏதேனும் வாகனத்தை தயார் செய்து அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள்.

Automated External Defibrillator கருவியை பயன்படுத்தலாம் : இது திடீர் கார்டியாக் அரெஸ்ட் பாதிப்பின்போது பயன்படுத்தினால் அவரின் உயிரையே காப்பாற்றும் கருவியாகும். Automated External Defibrillator என்று சொல்லப்படும் இந்த கருவியை இதயத்தில் வைத்து ஷாக் கொடுப்பதாகும். இதை பல படங்களிலும் பார்த்திருக்கக் கூடும். இதயத்திற்கு ஷாக் கொடுக்கும்போது உடனே நின்றுபோன இதயம் துடிக்க ஆரம்பிக்கும். பின் மற்ற சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.

தொடர்ச்சியான சிபிஆர் சிகிச்சை : அவரின் இதயத்துடிப்பு சரியாக துடிக்கவில்லை அல்லது துடிப்பது நின்றுவிட்டது எனில் ஆம்புலன்ஸ் அல்லது மருத்துவர் வரும் வரை அவருக்கு சிபிஆர் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ச்சியாக உங்கள் முயற்சியை செய்துகொண்டே இருக்க வேண்டும். இதனால் அவரின் இதயம் மீண்டும் இயங்க தொடங்கலாம் அல்லது மருத்துவர் வந்து சிகிச்சை கொடுக்கும்போது இதய செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம்.

மேலே கொடுக்கப்பட்ட இந்த 4 குறிப்புகள் ஒருவரின் உயிரை காப்பாற்றுமேயானால் துரிதமாக விரைந்து செயல்படுங்கள். இந்த சூழ்நிலையில் உடனே நீங்களும் பதட்டமடையாமல் இருப்பதும் அவசியம். அவர் இயல்புநிலைக்கு திரும்பும் வரை அவருக்கான மருத்துவ உதவிகளை செய்துகொண்டே இருங்கள்.


0 Comments:

Post a Comment