Happy Manthras : நம் அனைவரின் வாழ்வின் ஒற்றை குறிக்கோள் என்றால், அது மகிழ்ந்திருப்பது மட்டும்தான். ஒருவருக்கு மகிழ்ச்சியென்றால், அது அவர்கள் செய்யும் வேலையை திறம்பட செய்வதாகும், அதுவே மற்றொருவருக்கு அது சுத்தமாக வேறுபடும்.
அது அவர்கள் நகரின் பரபரபான பஜாரில் ஷாப்பிங் செய்வதாக இருக்கலாம். ஒருவருக்கு மகிழ்ச்சி என்பது ஊர் சுற்றுவதாக இருக்கலாம். அதுவே மற்றொருவருக்கு வீட்டிலேயே இருப்பதாக இருக்கலாம்.
இவ்வாறு மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும் எனில், ஒரே விஷயத்தை நாம் பின்பற்றிக்கொண்டிருக்க முடியாது. ஆனாலும், நாம் மகிழ்ந்திருப்பது அடுத்தவர்களையோல அல்லது நமது குடும்பத்தையோ, சமூகத்தையோ பாதிக்கக்கூடாது. எடுத்துக்காட்டாக மது நமக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்று எனில், அது நிச்சயம் நமது சமூகத்துக்கும், குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும். எனவே அடுத்தவர்களை நாம் துன்புறுத்தாமல் காணுவதே இன்பம்.
இன்பமும், துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை எனில் அனைத்து சூழலிலும் இன்புற்றிருக்க உங்களுக்கு இவை உதவும்.
அனைத்து சூழலலிலும் உள்ள நல்லதை மட்டுமே பாருங்கள்
எந்த ஒரு சூழலிலும் உள்ள நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும். இன்பமோ, துன்பமோ அதில் நல்லது எது என்று பாருங்கள். அப்படி ஒரு நேர்மறை எண்ணத்துடன் நீங்கள் செல்லும்போதுதான் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. எதிர்மறை எண்ணங்களே உங்கள் வாழ்க்கையை அழித்துவிடும்.
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை புறக்கணியுங்கள்
உங்கள் குறித்த மற்றவர்களின் கருத்தை காதில் போட்டுக்கொள்ளாதீர்கள். ஏனெனில், அது உங்களை உற்சாகப்படுத்தாது, சோர்வடையச் செய்யும். எனவே மற்றவர்களின் சரியான விமர்சனங்களை மட்டுமே பரிசீலனை செய்யுங்கள். தவறான விமர்சனங்களை விட்டுவிடுங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழவேண்டும் எனில், சிலரிடம் கடுமை காட்டித்தான் ஆக வேண்டும். அதற்காக வருந்தாவிட்டால் உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில் இருக்கும்.
நன்றியுடன் இருக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள்
ஒருவர் செய்த நன்றியை வாழ்நாளில் என்றுமே மறந்துவிடாதீர்கள். ஏனெனில் நன்றி மறப்பது நன்றன்று என்றுதான் வள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார். அனைவரும் சிறிய நிலையில் இருந்து உச்ச நிலைக்கு செல்ல முடியும். நிச்சயம் அதற்கு பலர் உதவியிருப்பார்கள். எனவே அந்த நன்றியை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும்
முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். கடந்த கால கசப்புகள் எதுவும் நம்மை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டே இருக்கக்கூடாது. அதை கடந்துமுடித்துவிட வேண்டும். கடந்த காலத்தை எண்ணிக்கொண்டிருந்தால், நிகழ்காலமும் நரகமாவிடும் என்பதால் அதை மறப்பதே நல்லது.
கிசுகிசுக்களை கண்டுகொள்ளாதீர்கள்
உங்களை பற்றிய பல்வேறு கிசுகிசுக்கள் வந்துகொண்டேயிருக்கும். அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு சென்றுகொண்டிருங்கள். அவற்றிற்கெல்லாம் பதில் கொடுத்துக்கொண்டிருந்தால் உங்களால் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யமுடியாது.
உங்கள் வாழ்க்கையை நீங்களே வடிவமையுங்கள்
உங்கள் வாழ்க்கையை நீங்களே வடிவமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். மற்ற யாருடைய பாதிப்பும் அதில் இருந்துவிடக்கூடாது. உங்கள் மகிழ்ச்சிக்கும், துன்பத்துக்கும் நீங்களே காரணம். எனவே உங்களுக்கு எது மகிழ்ச்சி தருமோ அதையே நீங்கள் செய்ய வேண்டும்.
அதிகம் சிரியுங்கள்
அதிகம் சிரித்து பழகுங்கள். எவ்வளவு அதிகம் நீங்கள் சிரிக்கிறீர்களோ அவ்வளவு அதிகம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று பொருள் கிடையாது. ஒருமுறை நீங்கள் சிரித்தாலும் அது மன மகிழ்ச்சியில் சிரித்ததாக இருக்க வேண்டும். எனவே அதிகம் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள முயற்சி செய்து, மகிழ்ந்திருங்கள்.
இந்த 7 மந்திரங்களை மட்டும் கையில் வைத்திருந்தீர்கள் என்றால் போதும், உங்கள் மகிழ்ச்சி உறுதியாகிவிடும்.
0 Comments:
Post a Comment