ஒரே இடத்தில் எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் பல உடல்நல பிரச்சனைகள் வருமென ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக 9 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்தே வேலை பார்பவர்களின் மூளையில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் நம் உடலுக்கும், மனதிற்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்ப்போம்
ரத்த ஓட்டம் குறைகிறது: நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் மூளை உள்பட உடல் முழுவதும் ரத்த ஓட்டம் குறைய தொடங்குகிறது. இதன் காரணமாக மூளை செல்களுக்கு செல்லக்கூடிய அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜன் தடைபடுகிறது. இதனால் உங்களின் அறிவாற்றல் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சிந்தனை தேக்கம் (பிரெயின் ஃபாக்): நீண்ட நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் போது, உங்கள் மனம் சோர்வடைந்து சிந்தனை தேக்கம் உருவாகும். இப்படி எந்த வேலையும் செய்யாமல் நீண்ட நேரத்திற்கு அமர்ந்திருந்தால், உங்களால் எதிலும் முழு கவனம் செலுத்த முடியாது, தெளிவாக யோசிக்க முடியாது.
மன அழுத்தம், கவலையை அதிகரிக்கிறது: சோம்பேறித்தனமான நடத்தைக்கும் மனச்சோர்வு, கவலைகள் போன்ற மனநல பிரச்சனைகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஒரே இடத்தில் அமராமல் நடப்பது, ஓடுவது எதையாவது செய்து கொண்டிருப்பது என தொடர்ந்து நம் உடல் இயக்கத்திலேயே இருந்தால், நம் மனதை உற்சாகப்படுத்தக் கூடிய செரொடோனின் மற்றும் எண்டோர்பின் தூண்டப்பட்டு நமது மனநிலையை ஒழுங்குப்படுத்தும்.
நினைவுகளை பாதிக்கிறது: நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்தே இருக்கும் போது, நம்முடைய அறிவாற்றல் குறைவதாகவும் நினைவுகள் பாதிக்கப்படுவதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. நம் மூளையின் ஆரோக்கியத்தையும் உங்கள் வயதுக்கேற்ற அறிவாற்றலையும் சீராக வைத்திருக்க வேண்டுமென்றால் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
மூளையின் கட்டமைப்பை மாற்றுகிறது: நம் மூளையின் கட்டமைப்பு மாற்றமடைவதற்கும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்திருப்பதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. சோம்பேறித்தனமான நடத்தையின் காரணமாக நம் மூளையில் நினைவுகளை சேமித்து வைக்கும் பகுதியான டெம்போரல் மடலின் அடர்த்தி குறையத் தொடங்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
மன அழுத்தம் அதிகரிக்கும்: எந்த வேலையும் செய்யாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரத்திற்கு அமர்ந்திருந்தால், உங்களின் மன அழுத்தம் அதிகரித்து உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் மூளைக்கும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
உடல் பருமன், மெடபாலிக் பிரச்சனைகள்: சோம்பேறித்தனமாக உட்கார்ந்தே இருப்பதுதான் நம் உடல் பருமனுக்கும் இன்சுலின் எதிர்ப்பு, டைப்-2 டயாபடீஸ் போன்ற மெட்டபாலிக் பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. இவை நம் மூளையை மறைமுகமாக பாதிக்கிறது. இதன் காரணமாக அறிவாற்றல் குறைகிறது; அல்சைமர் போன்ற நரம்புச் சிதைவு நோய் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.
நாற்காலியிலோ, காரிலோ அல்லது தொலைகாட்சியின் முன்போ இப்படி நீண்ட நேரம் அமர்ந்திருந்தால், அது உங்கள் உடல்நலத்திற்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும். ஆகவே அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நிற்பது, நடப்பது என உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment