மாரடைப்பின் போது 'இசிஜி' நார்மலாக இருக்குமா..? மருத்துவர்கள் தரும் விளக்கம்..! - Agri Info

Adding Green to your Life

October 13, 2023

மாரடைப்பின் போது 'இசிஜி' நார்மலாக இருக்குமா..? மருத்துவர்கள் தரும் விளக்கம்..!

பிரபல இதயவியல் மருத்துவர் கவுரவ் காந்தி மாரடைப்பில் மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது. செவ்வாய் அன்று அதிகாலை இரண்டு மணிக்கு நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது எனக் கூறியுள்ளார். இசிஜி எடுத்துப் பார்த்த போது எல்லாம் நார்மலாகவே இருந்துள்ளது. சரி, ஏதாவது அசிடிட்டி பிரச்சனையாக இருக்கலாம் என நினைத்த மருத்துவர், அதற்குரிய மருந்தை மட்டும் எடுத்துள்ளார்.

மருத்துவமனையில் சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய கவுரவ், சரியாக காலை 6 மணிக்கு கழிவறையில் மயங்கி விழுந்து இறந்து போனார். இவரது இறப்பு பலருக்கு அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. மாரடைப்பின் போது இசிஜி நார்மலாக இருக்குமா என்பதே இப்போது பலரது கேள்வியாக உள்ளது.

மாரடைப்பின் போது கூட இசிஜி நார்மலாக இருக்குமா?

ஆமாம், அப்படியிருக்க வாய்ப்புள்ளது. திடீரென மாரடைப்பு வந்துள்ளதாக மருத்துவமணைக்கு வரும் 70 சதவிகிதத்தினருக்கு ஆரம்பத்திலேயே இசிஜி நார்மலாக இருக்காது. ஆனால் 30 சதவிகிதத்தினருக்கு இசிஜி நார்மலாகவே காண்பிக்கும். அவர்களும் நமக்கு ஆபத்து ஏதும் இல்லை என வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். ஆனால் அப்படி உடனடியாக செல்லக் கூடாது.

ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பவர்களுக்கோ அல்லது மாரடைப்பு வந்துள்ள நோயாளிகளுக்கோ முதல் முறை இசிஜி எடுக்கும் போது நார்மலாகவே இருக்கும். ஒவ்வொரு 15-30 நிமிட இடைவெளியில் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு தொடர்ந்து அவர்களுக்கு இசிஜி எடுக்க வேண்டும். மேலும் சில பரிசோதனைகளான எக்கோ, ரத்தம் போன்றவற்றிலும் நார்மலாக இருந்தால், ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தால் மட்டும் உண்மையான நிலவரம் தெரியும் என்கிறார் மருத்துவர் வினோத் குமார்.

மாரடைப்பின் போது, இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்தம் குறைகிறது அல்லது முழுவதும் தடைபடுகிறது. கரோனரி தமனியில் ரத்தம் உறைவதாலேயே இவ்வாறு அடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் மின்சார செயல்பாட்டை கணக்கிட உதவும் பரிசோதனையே இசிஜி (ஏலக்ட்ரோகார்டியோகிராம்). இதன் மூலம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் கண்டறிய முடியும். எனினும் சில சமயங்களில் மாரடைப்பின் போது கூட இசிஜி எந்த எச்சரிக்கையும் தெரிவிக்காது என்கிறார் மனிபால் மருத்துவமனையின் இதயவியல் மருத்துவர் தீக்ஸித் கார்க்.

மாரடைப்பின் போது ஏன் சில சமயங்களில் இசிஜி நார்மலாக இருக்கிறது என்பதற்கான காரணங்களை விளக்குகிறார் டாக்டர்.கார்க்

நேரம்:

மாரடைப்பின் ஆரம்பகட்டத்தில் தான் பெரும்பாலும் இசிஜி எடுக்கப்படுகிறது. அப்போது இதயத்தில் ஏற்படும் மாற்றங்களை இசிஜி-யால் முழுதும் கண்டறிய முடியாது. இதயத்தில் ஏற்படும் மின்சார மாற்றங்கள் இசிஜி-யில் தெளிவாக தெரிய கூடுதல் நேரம் எடுக்கும்.

இடம்:

மாரடைப்பின் போது இதயத்தின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க, இசிஜி-யை சரியான இடத்தில் பொறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தின் மாறுதல்களை இசிஜி குறைவாகவே காண்பிக்கும்.

அமைதியான மாரடைப்பு:

சில மாரடைப்புகள் எந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியாக தாக்கும். அந்த சமயத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது கூட நோயாளிக்கு தெரியாது. இதுபோன்ற சமயங்களில் இசிஜி நார்மலாகவே இருக்கும்.

கரோனரி தமனியின் துணை நாளங்கள்

சில அரிதான சமயங்களில், ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கும் நபருக்கு, அதற்கு மாற்றாக இன்னொரு நாளங்கள் வழியாக ரத்தம் செல்லும். இதனையே துணை நாளம் என அழைக்கப்படுகிறது. மாரடைப்பின் போது பாதிக்கப்பட்ட இதயத்திற்கு இதன் வழியாக ரத்தம் செல்கிறது. இதுபோன்ற சமயங்களிலும், மாரடைப்பு இருந்தும் கூட இசிஜி எடுக்கும் போது நார்மலாகவே இருக்கும்.

உங்களுடைய மூன்று தமனிகளில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலும் இசிஜி நார்மலாகவே இருக்கும். மாரடைப்பு வரும் என இசிஜி-யால் வெறும் 33% மட்டுமே கணிக்க முடியும். ஆகவே ஒருமுறை மட்டும் இசிஜி எடுக்காதீர்கள். இரண்டு மணி நேரத்திற்குள் நான்கைந்து முறை எடுத்தால் மட்டுமே, உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை உள்ளதா என மருத்துவரால் ஒரு முடிவுக்கு வர முடியும்.


🔻 🔻 🔻 

No comments:

Post a Comment