வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட மாதிரியும் இருக்க வேண்டும்... அதேசமயம் அதிக வேலையும் வைக்கக்கூடாது என எதிர்பார்க்கும் பலரின் சாய்ஸ் 'ரெடி டு குக்' உணவுகள்.
சமைக்கப்படாத ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டாக்கள், இட்லி, தோசைக்கான பாக்கெட் மாவுப் பொருள்கள், பணியாரம், வடை, பஜ்ஜி மாவுகள் போன்றவற்றின் விற்பனை சூப்பர் மார்கெட்டுகளில் அமோகமாக இருக்கிறது. ஆனால், பதப்படுத்தப்பட்ட இத்தகைய உணவுப்பொருள்களை வாங்கி சமைப்பதால் ஏற்படும் கேடுகள் பல என்கின்றனர், ஊட்டச்சத்து நிபுணர்கள்.
பாக்கெட் உணவுகள் மற்றும் ரெடி டு குக் வகை உணவுப்பொருள்களால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைப் பட்டியலிடுகிறார் கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.பிளாஸ்டிக் பேக்கேஜ் அபாயம்!
* ''பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மாவுப் பொருள்கள், ரெடி டு குக் சப்பாத்தி, பரோட்டாக்கள் எல்லாம் பல நாள்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவற்றைப் பதப்படுத்தியிருப்பார்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிடும்போது, உடல் இயக்கம் பாதிக்கப்படும். உதாரணத்துக்கு, தாகம் குறைவது, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.
அதிக அளவு உப்பும் ஆபத்தே!
* பாக்கெட் உணவுகள் அனைத்திலுமே, சோடியம் அதிகமாகச் சேர்த்திருப்பார்கள். உணவு கெட்டுப்போய்விடக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்வார்கள். ஒரு நாளைக்கு ஒருவர் 2.300 மி.கிராம் அளவுக்குத்தான் உப்பு சேர்க்க வேண்டும் என்பது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் பரிந்துரை. நாள் ஒன்றுக்கு ஒரு டீஸ்பூன் உப்பு மட்டும் பயன்படுத்தவும் என்பதே, ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரையாகவும் இருக்கும். ஆனால் பதப்படுத்தப்பட்ட ரெடி டு குக் சப்பாத்தி ஒன்றில் மட்டுமே, நாங்கள் குறிப்பிடும் அளவைவிட அதிக உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். உணவில் உப்பு அதிகமாகச் சேர்ப்பதால், ரத்த அழுத்தப் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
எண்ணெய் அபாயம்!
* ரெடி டு குக் உணவுப் பொருள்கள் எல்லாம் எந்த எண்ணெயில், எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிய மாட்டோம். ஒருவேளை சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படவில்லை எனில், நீர் வழி நோய் ஏற்படலாம்.
சத்தில்லா உணவுகள்!
* ரெடி டு குக் உணவுகள் எதிலும், நார்ச்சத்து இருக்காது. அதே நேரம், கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். மற்ற ஊட்டச்சத்துகள் மிகக்குறைவாக இருக்கும். இதனால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல் போன்றவை அடிக்கடி ஏற்படும். தொடர்ச்சியாக ஏற்படும் இப்படியான பாதிப்புகள் சிறுநீரகப் பிரச்னைகள், குடல் சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றுக்கு வழி வகுக்கும்.
சோடா உப்பு எச்சரிக்கை!
* இன்ஸ்டன்ட் சப்பாத்தி, பரோட்டாக்கள் சமைக்கும்போது உப்பி வர வேண்டும் என்பதற்காக, தயாரிக்கும்போது அதில் சோடா உப்பு, பேக்கிங் பவுடர், மோனோசோடியம் குளுட்டமேட் போன்றவற்றைச் சேர்ப்பார்கள். இவை யாவும், சிறுநீரகப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
மைதா கலப்படம்
* பரோட்டாக்களைப் பொறுத்தவரை, வீட்டில் செய்து சாப்பிட்டாலே தீமைதான். காரணம், மைதா. மைதாவின் அளவுக்கதிகமான கலோரி, உடலை எளிதில் சோர்வடையச் செய்துவிடும். செரிமானச் சிக்கல்களையும் ஏற்படுத்தும். பாக்கெட் உணவுகளில் அதன் தீமை இன்னும் அதிகரிக்கும். சில பாக்கெட் கோதுமை உணவுப்பொருள்களிலும்கூட, மைதா கலப்படம் இருக்கலாம் என்பதால் கவனம் தேவை.
தேதிகளில் அபாயம்...
* பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதால், இதயப் பிரச்னைகள், சர்க்கரைநோய் போன்ற வாழ்வியல் சிக்கல்கள் எல்லாம் இள வயதிலேயே ஏற்படலாம்.
`எல்லாம் சரி. ஆனால், நாங்கள் விருப்பப்பட்டு இந்த உணவை நாடுவதில்லை. எங்களுக்கு நேரமில்லை. அதனால்தான் இதை வாங்கி உபயோகிக்கிறோம்' என்பார்கள் சிலர். இப்படியானவர்களுக்கான சில மாற்று யோசனைகள்,வாரக் கடைசியிலேயே ரெடி பண்ணிக்கோங்க!
* சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில், அடுத்த வார மெனுவுக்கான அடிப்படைத் தேவைகளைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு வாரத்துக்கான காய்கறிகளை வாங்கி, அவற்றில் தேவையானவற்றை வெட்டி ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்வது, இட்லி, தோசை, அடை, ராகி மாவு போன்றவைக்கு வீட்டிலேயே மாவு தயாரித்து ஃபிரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்வது, சப்பாத்திக்குத் தேவையான கோதுமை மாவைத் தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்வது...
சிறுதானியங்களுக்கு வெல்கம் சொல்லுங்க!
* ரெடி டு குக் உணவுகளுக்கு பதில், ரெடிமேட் சிறுதானியங்கள், சேமியா பாக்கெட்டுகள், ராகி மாவு, கம்பு மாவு போன்றவற்றை வாங்கி உபயோகப்படுத்தலாம். இவற்றையுமேகூட வீட்டில் வாங்கி அரைத்து உபயோகப்படுத்துவது நல்லது. இருப்பினும் நேரமில்லை என்பவர்களுக்கு, வேறு உணவுகள் இல்லை என வரும்போது, இவை பரிந்துரைக்கத்தக்கவை. குறைந்தபட்ச நன்மைகளாவது கிடைக்கும், தீமைகள் தவிர்க்கப்படும்.
வீட்டில் செய்து சாப்பிடுங்கள்!
* கோதுமை பரோட்டா உடலுக்கு நல்லது என நினைத்து, அதைத் தேடிப்பிடித்து வாங்கி சாப்பிடுவார்கள் சிலர். ரெடி டு குக் உணவுப் பொருள்கள், எந்த வகையிலும் பரிந்துரைக்கத்தக்கவை இல்லை. எனவே, கோதுமை சாப்பிட நினைப்பவர்களுக்கு ரெடிமேடு சப்பாத்தியோ, ரெடிமேடு கோதுமை பரோட்டாவோ அவர்கள் நினைப்பதுபோல நன்மையைச் செய்யாது. தரமான கோதுமை மாவை வாங்கி வீட்டிலேயே சப்பாத்தி, பரோட்டா செய்து சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கான வழி.''
0 Comments:
Post a Comment