மனம் உறுதி பெற 10 வழிகள்! - Agri Info

Adding Green to your Life

December 15, 2023

மனம் உறுதி பெற 10 வழிகள்!

 னதை அலையவிட ஆயிரம் விஷயங்கள் இந்த உலகில் வந்துவிட்டன. தேவையற்றவற்றைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தில் மனநலனைப் பாதுகாக்க மறந்து விட்டோம்.

முடிவில், மனமகிழ்ச்சியின்றி இருக்கின்றோம். வாழ்வின் பொருள் மற்றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான். மன மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி, நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளேயும் மன மகிழ்ச்சி மற்றும் மனநலனுக்கான வாசல்கள் திறந்தே
உள்ளன. அந்த வழிகள் இதோ:

இயற்கையோடு இணையலாம்

பூங்கா, காடு, வயல் போன்ற பச்சை நிறம் கொண்ட இடங்களில் மற்றும் ஏரி, கடல் போன்ற நீலநிறம் கொண்ட இடங்களில் நம்முடைய நேரத்தைச் செலவிடும்போதோ, வசிக்கும்போதோ மன அழுத்தம்(stress) மற்றும் மனச்சோர்வு (depression) ஆகியவை குறைவதாகவும் மேலும், கவலையும் அச்சமும் கலந்த மனநிலை(anxiety) கொண்டவர்கள் தெளிவான மனநிலையைப் பெறுகிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே கான்கிரீட் காடுகள் என்று அழைக்கப்படும் நகரங்களுக்கு வெளியே வந்து செயற்கை கருவிகளான கைபேசி, மடிக்கணினி ஆகியவற்றுக்கு விடுப்பு வழங்கிவிட்டு இயற்கையின் அழகை ரசிக்கப் பழகுவோம்.

உங்களிடம் நீங்களே அக்கறை காட்டுங்கள்

மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. அத்தகைய சவால்களை எதிர்கொண்டு பாதிக்கப்படும்போது, சிக்கலுக்கு ஆளாகின்றபோதும் நம்மை நாமே குறை விமர்சனம் கூறிக் கொண்டு சுருங்கிவிடக் கூடாது. வாழ்க்கைப் பாடங்கள்தான் நம்மை முழு முனிதனாக ஆக்குகின்றன என்பதை அறிந்து, நீங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டாலோ, உங்களிடம் குறைகளைக் கண்டறிந்தாலோ அடுத்தமுறை இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து உங்களை நீங்களே மன்னிக்கப் பழகுங்கள். உங்கள் நண்பன் பிரச்னையில் உள்ளபோது உதவுவதைப் போல அக்கறை. அன்பு மற்றும் புரிதலுடன் உங்களை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள்.

மற்றவர்களுக்கு உதவலாம்

தன்னார்வ சேவை செய்யும்போதும், பிறருக்கு உதவி செய்யும்போதும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் தூண்டப்பட்டு மனமகிழ்ச்சியை நமக்கு கொடுப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும், அன்பு மற்றும் உதவி செய்யும் குணத்துடன் இருப்பதால் நாம் வாழ்வின் நோக்கமான நற்பெயரையும் அடையலாம்.

நிகழ்காலத்தில் வாழ்வோம்

நேற்றிலிருந்து கற்றுக் கொள், இன்றைய நாளில் வாழ், நாளை மீது நம்பிக்கை கொள் என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய பொன்மொழி. கடந்தகால தவறுகள், கசப்புகளை நினைத்துப் பார்க்காமல், எதிர்காலம் பற்றி பயப்படாமல், தேவையில்லாமல் பிரச்னைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் இருப்பதன் மூலம், நிகழ்காலத் தருணங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழமுடியும். மாற்ற முடியாதவற்றையும், வேண்டாதவற்றையும் அடிக்கடி மனதில் அசைபோடுவது மனநலனுக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து நிகழ்காலத்தில் வாழப் பழகுவோம்.

உறவுகள் இனிமை தரும்

நமக்கு எது மகிழ்ச்சியும், உடல் நலனும் தருகின்றது என்று 80 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் கூறும் ஒரே பதில் என்ன தெரியுமா இனிமையான உறவுகள் என்பதுதான். அந்த ஆய்வு முடிவுகள் தி குட் லைஃப் என்ற நூலாகவும் வெளிவந்துள்ளது. இனிய உறவுகளுடன் நாம் நேரம் செலவிடும்போது மகிழ்ச்சியைப் பெறுகின்றோம். அப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதால் நல்ல உடல் நலம் கிடைக்கின்றது. அவ்வாறு, நல்ல உடல் நலம் நம்முடைய வாழ்நாளை அதிகரிக்கின்றது என்பது அறிவியல் ரீதியாக மேற்கண்ட ஆய்வின் வழியே உறுதியாகி உள்ளது. தனிமையில் இருப்பவர்களின் மகிழ்ச்சியும் வாழ்நாளும் குறைகின்றன. ஆகவே, இனிமையான உறவுகளைப் போற்றிப் பாதுகாப்போம்.

அறிவை வளர்க்கலாம்

ஓவியம், இசை, எழுத்து போன்ற கலைகளில் ஈடுபடுதல், புத்தகம் வாசித்தல், கலை மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், புதிய திறன்கள் மற்றும் மொழிகளைக் கற்றல், மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளை ஆடுதல் போன்ற செயல்பாடுகளால் நம் மூளை தூண்டப்படுகின்றது. அதனால் இன்பம், அமைதி, பெருமிதம் போன்ற நேர்மறை உணர்ச்சிகளை அனுபவிக்கின்றோம் மற்றும் மனநிறைவையும் உணர்கின்றோம்.

உடம்பை உறுதியாக்கலாம்

தினமும் உடற்பயிற்சிகள் செய்வது, சரிவிகித உணவு உண்பது, போதுமான தண்ணீர் குடிப்பது, நல்ல தூக்கம், மன அழுத்தம் குறைக்கும்விதம் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்வது, தீமை விளைவிக்கும் புகை மற்றும் மதுப்பழக்கம் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகளால் நமது உடல்நலனை அதிகரிக்கலாம். உடல் நலம் மேம்படும்போது மனநலனும் சேர்ந்தே மேம்படும். இலக்குகள் இருக்கட்டும் வாழ்விலேஉடல் எடையைக் குறைப்பது, தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது, தொழிலில் வெற்றிபெறுவது என ஒவ்வொருவருக்கும் ஓர் இலக்கு இருக்கும்

வாழ்வின் நோக்கத்தை உணர்ந்து அதை நோக்கிப் பயணிக்கும் நமக்கு இலக்குகள் இருப்பது அவசியம். முதன்மையானவற்றிற்கு முக்கியத்துவம் தந்து, நேரம் மற்றும் ஆற்றலை சரியான முறையில் ஒதுக்கி வாழ்வில் சமநிலையைப் பேன இலக்குகள் உதவுகின்றன.

சமூக உறவுகளை உருவாக்கவும், வலுப்படுத்தவும் இலக்குகள் உதவுகின்றன. பிரச்னைகளைக் கையாளுவதற்கான ஊக்கம் மற்றும் கவனத்தை இலக்குகள் கொடுக்கின்றன. வாழ்க்கை மீதான நேர்மறைப் பார்வையை உருவாக்கி நம்பிக்கைப் பாதையில் நாம் நடக்க இலக்குகள் உதவும். நம் சுயமேம்பாட்டிற்கு இலக்குகள் வாய்ப்பு தருகின்றன. சாதிக்கும் உணர்வையும், மனநிறைவையும் இலக்குகளை அடையும்போது நாம் பெறுகின்றோம்.

இலக்குகளை ஏற்படுத்திக் கொள்வதால் நன்மைகள் பல. எனவே, தெளிவான மற்றும் நடைமுறைக்கு பொருத்தமான இலக்குகளை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை நோக்கி உற்சாகமுடன் முன்னேறுங்கள். பெரிய அளவில் இருக்கும் இலக்குகளை சிறிது சிறிதாகப் பிரித்து பணிகளை எளிமையாக்குங்கள். ஒவ்வொருநாள் காலைப் பொழுதையும் உற்சாகமுடன் துவங்க இலக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

நேர்மறைக் கண்ணோட்டம் வேண்டும்

வாழ்வில் இன்பமும் துன்பமும் இயற்கையே. துன்பங்களில் இருந்து மீண்டெழுவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். தடைக்கற்களை படிக்கற்களாக பார்க்கப் பழகுங்கள். உங்களிடம் இல்லாதவற்றை நினைத்து வருத்தப்படாமல், உங்களிடம் இருப்பவற்றை நினைத்து நன்றியுணர்வுடன் இருங்கள். எதிர்மறையான செய்திகள், உறவுகள் மற்றும் சுழல்களை தவிர்த்துவிடுங்கள்.

உங்களைச் சுற்றிலும் நேர்மறை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொண்டிருங்கள். 

மனதை ஒருமுகப்படுத்தி செயல்களை ரசித்துச் செய்யுங்கள். அது அந்த நாளுக்கு நாம் காட்டும் நன்றியாகும். நேர்மறையான விஷயங்கள் மீது கவனம் செலுத்தி நேர்மறைப் பார்வையில் வாழ்க்கையை நோக்கி, வாழும் வாழ்க்கைக்கு நன்மைகளை ஈர்த்து மனமகிழ்ச்சி பெறுவோம்,உதவி கேட்க தயங்காதீர்கள்நீங்கள் உணர்ச்சிகளைத் கையாளத் தெரியாமல் போராடிக் கொண்டிருந்தாலோ அல்லது மனநலப் பிரச்னைகளுடன் இருந்தாலோ உங்கள் அருகில் இருக்கும் மனநல மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சந்தித்து வழிகாட்டுதலும் உதவியும் பெறுங்கள்.


🔻 🔻 🔻 

No comments:

Post a Comment