ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருப்பது துளசி ஆகும். பலருடைய வழிபாட்டு முறைகளில் துளசி முக்கிய இடத்தை பெறுகிறது. அதே சமயம், இதை ஒரு மூலிகை எனக் கருதி, உடல் ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்பவர்களும் இருக்கின்றனர்.
துளசி நறுமனம் கொண்டது. அதே சமயம், சாப்பிடும்போது லேசான காரம் தென்படும். காலையில் எழுந்ததும் 4, 5 துளசி இலைகளை வாயில் மென்று விழுங்கும் பழக்கம் இன்றைக்கும் பலரிடம் உள்ளது. பல நூற்றாண்டுகளாகவே மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படும் துளசியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
துளசியின் ஊட்டச்சத்துக்கள்
100 கிராம் அளவு துளசியில் 23 கலோரிகள் உள்ளன. அதுபோக 5.32 கிராம் மாவுச்சத்து, 1.6 கிராம் நார்ச்சத்து, 0.3 கிராம் சர்க்கரை சத்து, 2.2 கிராம் புரதம், 0.6 கிராம் கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளன.
இது மட்டுமல்லாமல் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் கே, விட்டமின் பி-காம்ப்ளெக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மேங்கனீஸ் ஆகிய சத்துக்களும் துளசியில் உள்ளன.
ஆரோக்கிய நன்மைகள் :
1. துளசியில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்களும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. இதனால் தொற்றுகள் தவிர்க்கப்படும்.
2. துளசி சாப்பிட்டால் ஸ்ட்ரெஸ் ஏற்படக் கூடிய கார்டிசோல் ஹார்மோன் அளவு குறையும். அழற்சிக்கு எதிரான தன்மையை கொண்டுள்ளது.
3. நுண்ணுயிர்களுக்கு எதிரான தன்மை கொண்ட துளசியை சாப்பிட்டால் சுவாசம் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
4. நம்முடைய செரிமானம் மேம்படும். வயிறு உப்புசம் அல்லது செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் தீரும்.
5. துளசி கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைப்பதாகவும், இதய நலனை மேம்படுத்துவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் துளசி சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் நிச்சயமாக துளசி சாப்பிடலாம். அது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். அதேபோல, விட்டமின்கள் நிறைந்த துளசியை கர்ப்பிணி பெண்களும் எடுத்துக் கொள்ளலாம். எனினும் மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.
கட்டுக்கதைகள்…
அனைத்து வியாதிகளுக்குமான ஒரே தீர்வு துளசி எனக் குறிப்பிடுவது தவறு.
துளசி சாப்பிட்டால் மருத்துவ சிகிச்சை தேவையில்லை எனக் கூறுவதும் பொய்யான தகவல் ஆகும். அடிப்படையான ஆரோக்கிய பலன்களை துளசி தரக் கூடியதாகும். எனினும் மிகுதியாக சாப்பிட்டால் அலர்ஜி, வயிறு சார்ந்த இதர பிரச்சனைகள் போன்றவை உருவாகலாம்.தினசரி துளசி சாப்பிடுவதாக இருந்தால் அது உங்கள் உடலில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை கண்காணிக்க வேண்டும் மற்றும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
0 Comments:
Post a Comment