சாதாரண வயிற்று வலிக்கும் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? - Agri Info

Adding Green to your Life

January 24, 2024

சாதாரண வயிற்று வலிக்கும் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

 உலகில் அதிகமானோரை தாக்கும் புற்றுநோய்களில் ஐந்தாம் இடத்தில் வயிற்றுப் புற்றுநோய் உள்ளது. அதுமட்டுமின்றி புற்றுநோய் இறப்புகளில் மூன்றாம் இடத்தில் வயிற்றுப் புற்றுநோய் உள்ளது. பொதுவாக வயிற்றுப் புற்றுநோய், வயிற்றின் மென்படலத்தில் உருவாகத் தொடங்கும்.

இந்த புற்றுநோய் குறித்து மக்களிடம் முறையான விழிப்புணர்வு இருந்தால், இந்நோயை ஆரம்பகட்டத்திலேயே குணப்படுத்திவிடலாம். வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை, வயிற்று வலி போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். அதெல்லாம் சரி, நமக்கு வந்திருப்பது வெறும் வயிற்று வலியா அல்லது புற்றுநோயா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் : 

ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, உடல் பருமன், புகைபிடிக்கும் பழக்கம், குடிப்பழக்கம், குடும்பத்தில் வேறு யாருக்காவது இதற்கு முன் வயிற்றுப் புற்றுநோய் வந்திருப்பது போன்றவை இந்த கேன்சருக்கான ஆபத்து காரணிகளாகும். சில சமயங்களில் ஹெலிகோபேக்டர் பைலோரி பாக்டீரியா புற்றுநோய் அல்லாத அல்சர் நோயை உருவாக்கக் கூடும். நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம், அடிவயிற்றில் வலி, குமட்டல், பசியின்மை போன்றவை வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். செரிமானமின்மைக்கும் வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

வயிற்றுப் புற்றுநோய்க்கு இதுதான் அறிகுறி என குறிப்பிட்டு எதையும் கூற முடியாது. ஆகையால் மேற்கூறிய அறிகுறிகள் யாருக்காவது இருந்தால், அவர்கள் மருத்துவமனை சென்று எண்டோஸ்கோபி உதவியுடன் தனக்கு புற்றுநோய் இருக்கிறதா என்பதை கண்டறிந்துவிடலாம். வயிற்றுப் புற்றுநோய் முற்றிய பின் உடல் எடையிழப்பு, மஞ்சள் காமாலை, ரத்த வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதை வைத்து நமக்கு வந்திருப்பது வயிற்றுப் புற்றுநோய் என்பதை ஓரளவு கணிக்க முடியும். எனினும் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே இதை எளிதாக குணபடுத்த முடியும் என்பதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

சாதாரண வயிற்று வலிக்கும் வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது?

சாதாரணமாக நமக்கு ஏற்படும் வயிற்று வலி அஜீரணக் கோளாறு காரணமாக வரக்கூடும். இவை சீக்கிரமாகவே சரியாகிவிடும். ஆனால் வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் கடுமையான வலியை ஏற்படுத்துவதோடு சீக்கிரம் குணமாகாது. மேலும் காரணமில்லாத எடையிழப்பு, தொடர்ச்சியான குமட்டல் மற்றும் ரத்தத்துடன் வாந்தி மற்றும் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறும். இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாகவும் அதே சமயத்தில் கடுமையாகவும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. எனினும், இந்த அறிகுறிகள் இருந்தால் அது புற்றுநோய் தான் என்ற முடிவிற்கு வந்துவிடக்கூடாது. முறையான பரிசோதனை மூலம் மட்டுமே இதனை கண்டறிய முடியும்.

வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் :

உங்கள் டயட்டில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். புகையிலை, மதுப்பழக்கம் போன்றவற்றை கைவிடுங்கள். சீரான உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள். உங்கள் குடும்பத்தில் இதற்கு முன் யாருக்காவது வயிற்றுப் புற்றுநோய் வந்திருந்தால், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன செய்ய வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சை என்று பார்த்தால் கீமோதெரபி, ரேடியோதெரபி, அறுவை சிகிச்சை போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. வயிற்றுக்குள் மட்டும் புற்றுநோய் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். அதுவே மற்ற உறுப்புகளுக்கும் பரவி விட்டால் கீமோதெரபி அல்லது ரேடியோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படும். சில சமயங்களில் நோயின் தீவிரத்தை குறைப்பதற்காக அறுவை சிகிச்சைக்கு முன்பு கீமோதெரபி செய்யப்படுவதும் உண்டு.

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment