அவசர வாழ்க்கையில் செல்லும் இடங்களில் கிடைக்கும் உணவுகளையும், தின்பண்டங்களையும் எடுத்துக் சாப்பிடுவது நம்மிடத்தில் பரவலாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஓய்வின்றி இருந்த இடத்தில் உழைப்பு, போதிய உடற்பயிற்சி இல்லாதது போன்றவற்றால் நம் உடலில் தேவையற்ற கொழுப்பு தங்கி, பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
இப்படி உடலுடன் பசை போல ஒட்டிப்பிடித்திருக்கும் கெட்டக் கொழுப்பு எனப்படும் எல்டிஎல் அளவைக் குறைத்தால் தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். இல்லையென்றால் உடலுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். முக்கியமாக இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாயில் தடையை ஏற்படுத்தி, மாரடைப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் உயிர் போகும் அபாயம் அதிகம் என்கிறது மருத்துவம் குறிப்புகளும், அதன் வரலாறுகளும்!
சரி. இதை சீர்செய்ய ஏதேனும் வழிகள் இருக்கிறதா என்றால், உணவு கட்டுப்பாடு தான் முன்னிலையானதாக இருக்கும். எனவே, அதிகளவு தேவையில்லாத கொழுப்பு சேர்வதை எப்படி கண்டறிவது, அதன் வளர்ச்சியை எப்படி தடுப்பது என்பதை பார்க்கலாம்.
உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை அதாவது எல்டிஎல் அளவை கண்டுபிடிப்பது எப்படி? : உடலில் அதிகளவு கெட்டக் கொழுப்பு சேரும்போது எந்தவித அறிகுறிகளையும் அவை ஏற்படுத்துவதில்லை. இதன் காரணமாகத் தான் மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள கூறுகின்றனர். அப்படி செய்யும்போது ரத்தத்தில் சேர்ந்துள்ள சரியான நல்லக் கொழுப்பு (எச்.டி.எல் / HDL) மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அதன்படி நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பழக்கவழக்க மாற்றங்கள் குறித்து மருத்துவரை அணுகித் தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் கெட்டக் கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
வாழ்க்கைமுறை - பசிக்கும் போது சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரையில் தவிர்க்க வேண்டும். மேலும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை உடனே நிறுத்தி விடுங்கள்.
கொழுப்புள்ள உணவுகள் - கெட்டக் கொழுப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பொரித்த உணவுகள் எடுத்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். தினசரி உணவில் பொரித்த உணவுகளை சேர்த்துக் கொண்டால், அவை நம் உடலில் அநாவசிய கொழுப்பு சேர காரணமாகி விடும்.
உடற்பயிற்சி - தினமும் சில நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது நம் இதயத்தை வலுவாக்கிறது. ரத்த நாளங்களை துடிப்புடன் செயல்படுத்துகிறது. அலுவலகம் மற்றும் வெளியே செல்லும்போது மாடிப் படிகளைப் பயன்படுத்துங்கள். மின்தூக்கிகளை தவிர்த்து வருவதே நம் ஆரோக்கிய வாழ்க்கை முறையில் முதல் படியாக இருக்கும்.
மருந்துகள் - ரத்தத்தில் உள்ள கெட்டக் கொழுப்பின் அளவை பரிசோதனை வாயிலாக தெரிந்துகொண்டு, அப்படி அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி குறுகிய காலத்திற்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் பெரிய பிரச்னைகள் இருந்தால், மருத்துவர் அறிவுரைப்பட ரத்த நாளங்களில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை சிறிய அறுவை சிகிச்சை வாயிலாக நீக்குவது நல்லது.
No comments:
Post a Comment