கடந்த 3 ஆண்டுகளில் 60 ஆயிரத்து 567 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 60 ஆயிரத்து 567 பேர் அரசுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலம் இந்த ஆண்டு ஜனவரி வரை 27 ஆயிரத்து 858 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்
பல்வேறு அரசு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 32 ஆயிரத்து 709 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. குறிப்பாக நீதித்துறையில் 5,981 பேரும், பள்ளிக்கல்வித்துறையில் 1,847 பேரும், வருவாய்த்துறையில் 2,996 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறையில் 4,286 பேரும், ஊரக வளர்ச்சித்துறையில் 857 பேரும், உயர்கல்வித் துறையில் 1,300 பேருக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்துறை, நகராட்சி, வேளாண்மை, சமூக நலம் உள்ளிட்ட துறைகளில் 15,442 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இவைதவிர, சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் படித்த இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment