ஒரு மனிதர் உடல் அளவில் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறாரோ அதே அளவிற்கு அவரது மன ஆரோக்கியமும் இன்றியமையாதது ஆகும். மனதளவிலும், உடலளவிலும் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது அது அவர்களது வாழ்விலும் அவர்களது செயல்களிலும் எதிரொலிக்கும். எனவே ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
ஆன்மீகத்தை கைக்கொள்ளுங்கள்: ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மனதளவில் மிகப் பெரும் நன்மைகள் ஏற்படும். முக்கியமாக வாழ்வில் கடினமான சூழல்கள் ஏற்பட்டாலும் அவற்றை ஏற்றுக் கொண்டு அவற்றிலிருந்து எவ்வாறு பக்குவமாக வெளிவருவது போன்றவை ஆன்மீக வாழ்வில் இருப்பவர்களுக்கு இயற்கையாகவே கைவந்த கலையாக இருக்கும். யோகாசனம், தியானம் ஆகியவற்றின் மூலம் நீங்கள் பெரும் மன அமைதியானது சவாலான சூழல்களில் சிறப்பாக செயல்பட உதவும்.
சமூகத் தொடர்புகள்: மனிதர்கள் தனியாக இருப்பதற்கு படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சிலருக்கு தனியாக இருந்தால்தான் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது போலவே இருக்கும் ஆனாலும் கூட எப்போதுமே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தனிமையில் இருந்து வெளிவந்து மற்றவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களோடு பழகுவது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அது குடும்பமும், நண்பர்களும் அல்லது வேறு யாராக இருந்தாலும் கூட உங்களது மனதில் உள்ள வெற்றியை அவர்களோடு பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
நன்றி உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்: உங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் ஏற்பட போகின்ற நன்மைகள் தற்போது உங்களுக்கு வசதி ஆகியவற்றிற்கு மனதார கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். இது வாழ்வின் மீது ஒரு பிடிமானத்தை ஏற்படுத்துவதோடு நேர்மறை எண்ணத்தை வளர்க்கும்.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்: இன்று நவீன யுகத்தில் அதிலும் இணையம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து முற்றிலுமாக வெளிவருவது என்பது முடியாத காரியம் ஆகும். ஆனாலும் கூட நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வதன் மூலம் நமது மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
நிகழ்காலத்தில் வாழ பழக வேண்டும்: மனிதர்களின் பெரும்பாலானோர் கடந்த கால நிகழ்வுகளையும் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதையும் மனதில் வைத்து பயந்து கொண்டே நிகழ்காலத்தை அனுபவிக்க தவறி விடுகின்றனர். நாம் எப்போதுமே நிகழ்காலத்தில் முழுமையாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். தற்போது நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தி அவற்றை முழுமையாக அனுபவித்து ஏற்றுக் கொள்வது மனதை பக்குவப்படுத்தும்.
போதைப் பொருட்கள் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்: வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ஒருவர் போதை பொருட்கள் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதை தாண்டி போதைப்பொருட்களை பயன்படுத்துவது என்பது நீண்ட கால அடிப்படையில் சரி செய்யவே முடியாத சேதத்தை உண்டாக்கி விடும். குறிப்பாக இளம் வயதினர் தற்போது போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்: ஒரு மனிதர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில் முடிந்த அளவு தன்னுடைய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்வதும் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவதும் தினசரி உடற்பயிற்சி செய்வதும் இன்றி அமையாத ஒன்றாகும். இவற்றை தொடர்ந்து செய்து வருவதின் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.
No comments:
Post a Comment