கழுத்தில் சிறியதாக இருக்கும் ஆனால் மிக முக்கிய சுரப்பியான தைராய்டு சுரப்பி பாதிக்கப்படும் போது குழந்தைகளுக்கு தைராய்டு கோளாறுகள் ஏற்படுகின்றன. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் இந்த தைராய்டு சுரப்பி குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு காரணமான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
தைராய்டு கோளாறுகள் பெரியவர்களை விட குழந்தைகளை குறைந்த அளவே பாதித்தாலும், ஆரம்பத்திலேயே இதன் அறிகுறிகளை கண்டறிவது அவசியமாகும். தைராய்டு கோளாறுகளில் ஹைபோ தைராய்டிஸம் மற்றும் ஹைபர் தைராய்டிஸம் என இரண்டு வகைகள் உள்ளது. பிறப்பிலேயே வரும் ஹைபோ தைராய்டிஸத்தை முறையாக குணப்படுத்தாவிட்டால் மனநல குறைபாடு ஏற்படுவதற்கு காரணமாக அமையக்கூடும்.
குழந்தை பிறந்தவுடன் தேவையான பரிசோதனை செய்வதன் மூலம் ஆரம்பத்திலேயே இதற்கான சிகிச்சை எடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளிடத்தில் ஹைபர் தைராய்டிஸம் பாதிப்பு அரிதாக இருந்தாலும், உடல் எடை இழப்பு, எரிச்சல், வேகமான வளர்ச்சி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.
தைராய்டு கோளாறுகள் கவலைக்குரிய விஷயம் என்றாலும் முறையான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதை எளிதாக குணப்படுத்த முடியும். அடிக்கடி பரிசோதனை மற்றும் குழந்தை நல மருத்துவரின் அறிவுரையை ஒழுங்காக பின்பற்றுவது மட்டுமே இப்போதைய தேவை.
தைராய்டு செயல்பாடுகளை கவனமாக கண்காணிப்பது, மருந்து மாத்திரைகள் மூலம் சரி செய்வது, முக்கியமான சிக்கல்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்றவை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையாகும். குழந்தைகளின் வளர்ச்சி, அறிவாற்றல், ஒட்டுமொத்த ஆரோக்கியம் போன்றவற்றை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
ஊட்டச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். தைராய்டு செயல்பாடு சரியாக இருப்பதை உறுதி செய்ய உணவில் அயோடின் அளவு எவ்வுளவு சேர்க்கிறோம் என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
இதன் அறிகுறிகள் மற்றும் இதற்கான சிகிச்சை திட்டங்கள் குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளின் நிலை குறித்து புரிந்துகொள்ள, அவர்களிடம் வயதுகேற்ற உரையாடல்களை அவ்வப்போது பெற்றோர்கள் நிகழ்த்த வேண்டும்.
குழந்தைகளிடத்தில் தைராய்டு பிரச்னைகள் இருப்பதை எப்படி கண்டறிவது?
நடத்தையில் மாற்றம்: குழந்தைகளின் மனநிலை திடீரென மாறுகிறதா, எரிச்சல் அடைகிறார்களா அல்லது பதட்டம் அடைகிறார்களா என்பதை கவனியுங்கள்.
உடல் எடையில் மாற்றம்: எந்தவித காரணமும் இன்றி குறிப்பிடத்தகுந்த அளவு உடலின் எடை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, தைராய்டு பிரச்னையின் அறிகுறியாகும்.
சோர்வு: ஒழுங்காக தூங்கினாலும் காரணமேயில்லாமல் சோர்வாக, களைப்பாக உணர்வது.
மலம் கழிப்பதில் மாற்றம்: மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை தைராய்டு சுரப்பி ஒழுங்காக செயல்படவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.
வெப்பநிலை அலர்ஜி: குழந்தைகளை பாதிக்காத வகையில் குளிரான அல்லது சூடான வெப்பநிலை இருந்தாலும் கூட, அவர்களால் அதை சமாளிக்க முடியவில்லை என்றால் தைராய்டு பிரச்னையின் அறிகுறியாகும்.
சருமம் மற்றும் தலைமுடியில் மாற்றம்: வறண்ட சருமம், முடி உதிர்வு அல்லது முடியின் அடர்த்தியில் மாற்றம் போன்றைவை தைராய்டு பிரச்னைகளோடு தொடர்புடையவை.
வளர்ச்சியில் தாமதம்: குழந்தைகள் வளர்வதில், பருவம் அடைவதில் அல்லது வேறு ஏதாவது வளர்ச்சி மைல்கல்லில் மாற்றம் இருக்கிறதா என்பதை கண்காணியுங்கள்.
தைராய்டு கோளாறுகளுக்கான பரிசோதனை:
இந்த அறிகுறிகள் குழந்தைகளிடத்தில் தொடர்ச்சியாகவோ அல்லது கவலைக்குரியதாகவோ காணப்பட்டால் உடனடியாக பெற்றோர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். தைராய்டு செயல்பாடு டெஸ்ட், ரத்த பரிசோதனை, தைராய்டு ஹார்மோன் (T3, T4) மற்றும் தைராய்டை தூண்டும் ஹார்மோனின் அளவை கணக்கிடுதல் போன்ற பரிசோதனைகளை குழந்தை நல மருத்துவர் பரிந்துரைப்பார். சில சமயங்களில் தைராய்டு சுரப்பியின் ஸ்ட்ரக்ட்சரை மதிப்பிட அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment