அனைத்து தரப்பினருக்குமே குளிர்காலம் பிரச்சனை தரக்கூடியதகவே இருக்கிறது. அதுவும் இதயப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சமயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குளிர்காலத்தில்தான் மாரடைப்பு மற்றும் பக்கவாத சம்பவங்கள் அதிகமாக ஏற்படுகின்றன.
கோடை காலத்தை விட குளிர்காலத்தில் வரக்கூடிய மாரடைப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதேப்போல் குளிர்கால காலை நேரத்தில் மாரடைப்பு மற்றும் ஆஞ்சினா நெஞ்சு வலியும் அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
குளிர்காலத்தில் குறைவான வெப்பநிலை இருப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பொதுவான தொற்றுகள் அதிகமாக காணப்படும். ஏற்கனவே இதயப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த தொற்றுகளும் ஒன்றாக வரும் போது நிலைமை மோசமாகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான ரத்தத்தை விநியோகிக்கவும் உடலை வெப்பமாக வைத்துக்கொள்ளவும் நம்முடைய இதயம் வழக்கத்தை விட அதிகமாக வேலை செய்கிறது.
இந்தப் பருவத்தில் எங்கும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் நம்முடைய ரத்த நாளங்கள் சுருங்கி இதய தசைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்தின் அளவு குறைகிறது. இதன் காரணமாக ரத்த உறைந்து, உடலில் ரத்த அழுத்தமும் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கிறது. உடலில் ஏற்படும் இந்த மாற்றங்கள் காரணமாகவே குளிர்காலத்தில் நெஞ்சு வலியும் மாரடைப்பும், இதயம் சம்மந்தமான நோய்களும் அதிகமாக வருகின்றன.
இதுபோன்ற ஆபத்தைக் குறைக்கவும் குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். குளிரான சூழ்நியையை தாங்க முடியாதவர்கள் வெதுவெதுப்பை தரும் ஆடைகளை அவசியம் அணிந்திருக்க வேண்டும். வீட்டின் உள்ளேயே உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள யோகா, ஏரோபிக்ஸ், தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
வறுத்த உணவுகள், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்த்து குளிர்காலத்தில் ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் இதய பிரச்சனைகளை ஓரளவிற்கு தடுக்க முடியும். உங்கள் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை, ரத்தக்குழாய் தொடர்பான பிரச்சனைகளை அடிக்கடி பரிசோதனை செய்யுங்கள். ஏனென்றால் இவைதான் இதயப் பிரச்சனைகளை தீவிரமாக்கக் கூடியவை. இதய நோயாளிகள் அதிக வேலைப்பளுவை தவிர்க்கவும்.
சிகரெட் பழக்கம், குடிப்பழக்கம் ஆகியவற்றை கைவிட்டு வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதயப் பிரச்சனைகள் வரும் ஆபத்தைக் குறைக்கலாம். குளிர்காலத்தில் உணவை கொஞ்சம் சூடாக சாப்பிடுங்கள். அப்போதுதான் உடலுக்கு தேவையான வெதுவெதுப்பு கிடைப்பதோடு ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
முக்கியமாக, இதய நோயாளிகள் குளிர்காலத்தில் உங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலே கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடிவதோடு குளிர்காலத்தில் வரக்கூடிய இதயம் சம்மந்தமான பிரச்சனைகளையும் குறைக்கலாம்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment