Search

தமிழ் மொழியிலும் எஸ்எஸ்சி கான்ஸ்டபிள் தேர்வு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

 மத்திய ஆயுத போலீஸ் படைகளில் (சிஏபிஎஃப்) கான்ஸ்டபிள்களை சேர்ப்பதற்கான கான்ஸ்டபிள் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மத்திய ஆயுத படைகளில் (CAPFs) காலியாக உள்ள காவலர் (பொதுப் பணி) மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காலியாக உள்ள தலைமையாக காவல் படை மற்றும் ரைபிள் மேன்(பொதுப் பிரிவு) தேர்வு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்க்கும் பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) நடத்தும் முக்கிய தேர்வுகளில் கான்ஸ்டபிள் தேர்வும் ஒன்றாகும். இந்த ஆள்சேர்க்கையின் மூலம் 26146 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான, எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் 128 நகரங்களில் சுமார் 48 லட்சம் பேருக்கு 2024 பிப்ரவரி 20 முதல் மார்ச் 7 வரை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கான்ஸ்டபிள் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய ஆயுத போலீஸ் படைகளில் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் இந்த வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவின் படி, கான்ஸ்டபிள் தேர்வு வினாத்தாள்கள் இப்போது இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி மற்றும் கொங்கனி மொழிகளில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻

0 Comments:

Post a Comment