நீண்ட ஆயுளை பெறுவது எப்படி என்று எப்பொழுதாவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? இதற்கு நீங்கள் ஜப்பானியர்கள் பின்பற்றும் சில விஷயங்களை தெரிந்து கொண்டாலே போதும். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளை பெறுவதற்கு ஜப்பானியர்கள் பின்பற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.
வானவில் நிற தட்டு : நீங்கள் சாப்பிடக்கூடிய உணவு பல நிறங்களிலும், சுவைகளிலும் இருக்க வேண்டும். பச்சை நிற கீரைகள், ஆரஞ்சு நிற கேரட்டுகள், பெர்ரி பழங்கள் போன்ற பல்வேறு நிறங்கள் அடங்கிய காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் சாப்பிடுங்கள். இது உங்கள் உடலுக்கு போஷாக்கு வழங்கும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்களை வழங்குவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெற்று தரும்.
கிரீன் டீ பருகவும் : ஜப்பானில் கிரீன் டீ வெறுமனே ஒரு பானமாக மட்டும் கருதப்படவில்லை. ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் மற்றும் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கிரீன் டீ ஜப்பானிய கலாச்சாரத்தில் முதன்மையான பானமாக பயன்படுத்தப்படுகிறது. சூடாகவோ அல்லது குளிர்ந்த நிலையிலோ வழக்கமான முறையில் கிரீன் டீயை சேர்ப்பது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயங்களை குறைக்கிறது. இதனால் நீங்கள் நீண்ட ஆயுளை பெறலாம்.
எளிமையான உடற்பயிற்சிகளை தினமும் செய்யவும் : ஜப்பானில் உடற்பயிற்சி என்பது ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்வதையும் தாண்டி, அன்றாட வாழ்க்கையில் பிணைந்த ஒன்றாக அமைகிறது. காலையில் செய்யக்கூடிய நீட்சி பயிற்சிகள் முதல் மாலை நேர நடை பயிற்சிகள் வரை ஜப்பானியர்கள் தங்களை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்துக் கொள்வதற்கு சில பயனுள்ள வழிகளை பின்பற்றுகின்றனர். தினமும் நடைபயிற்சிக்கு செல்வது, யோகா பயிற்சி செய்வது போன்றவற்றை உங்களது அன்றாட வழக்கத்தில் பின்பற்றுவதன் வாயிலாக உங்களுடைய இதய ஆரோக்கியம் மேம்படும், நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும் மற்றும் நீண்ட ஆயுளை பெறுவீர்கள்.
உணவு அளவு கட்டுப்பாடு : ஜப்பானியர்கள் உணவு சாப்பிடும் பொழுது என்ன சாப்பிடுகிறோம் என்பதிலும், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதிலும் எச்சரிக்கையாக இருப்பார்கள். இது சமநிலையை ஊக்குவிக்கிறது. நீங்கள் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு வாய் உணவையும் கவனமாக நன்கு மென்று கூழாக்கி விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வது நீங்கள் அதிகப்படியாக சாப்பிடுவதை தவிர்த்து, உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. மேலும் உடற்பருமன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படும் அபாயமும் குறைகிறது.
கடல் சார்ந்த உணவுகளை தினமும் சாப்பிடுவது : கடல் சார்ந்த உணவுகள் புரோட்டீனின் மூலமாக மட்டுமல்லாமல் நமது இதய ஆரோக்கியம் மற்றும் அறிவு திறன் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. எனவே ஆரோக்கியமான நீண்ட ஆயுளை பெறுவதற்கு உங்களது உணவில் கடல் சார்ந்த உணவுகள் வழக்கமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் : புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் ஜப்பானிய டயட்டின் பிரதான ஒன்றாக அமைகிறது. இவற்றில் ப்ரோ பயாடிக் பண்புகளும் செரிமான பலன்களும் நிறைந்துள்ளது. புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகிறது. எனவே இட்லி, தயிர், ஊறுகாய் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடவும்.
மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவதன் மூலமாக நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட ஆயுளை பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment