கோடைக்காலம் வந்துவிட்டது என்பதை வெயில் கொளுத்துவதற்கு முன் இந்த தர்பூசணிகளின் வருகை உணர்த்திவிடும். எங்கு பார்த்தாலும் தர்பூசணி விற்பனை அமோகமாக இருக்கும். அதேசமயம் கோடை வெப்பத்தை தனிக்க தர்பூசணியை தவிர சிறந்த பழம் இருக்க முடியாது. காரணம் இதில் 95% தண்ணீர் மட்டுமே நிறைந்துள்ளது. இதனால் நம் உடலை எப்போதும் நீர்ச்சத்து நிறைவாக வைத்திருக்கும். எல்லம் சரிதான்.. ஆனால் இந்த பழத்தை வாங்குவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
ஆம்.. அதாவது வீட்டிற்கு ஆசையாக முழு தர்பூசணி பழத்தை விலை பேசி வாங்கி வந்தவுடன் அதை வெட்டி சாப்பிடும்போது சுவை இல்லாமல் இருக்கும் அல்லது பழுக்காமல் காயாக இருக்கும். பிறகுதான் தெரியும் விலை கொடுத்து பழுக்காத பழத்தை வாங்கி வந்திருக்கிறோம் என.. இப்படி நீங்களும் பல முறை எதிர்கொண்டிருக்கிறீர்கள் எனில் உங்களுக்கானதுதான் இந்த கட்டுரை.. இதில் பழுத்த நல்ல தர்பூசணியை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
பழத்தின் கோடுகள் : தர்பூசணி பழத்தை பார்க்கும் போது முதலில் அதன் மேல் உள்ள கோடுகளை கவனிக்க வேண்டும். அதாவது அதன் பச்சை மற்றும் மங்கிய பழுப்பு நிற கோடுகளை கவனித்தால் அதில் பச்சை நிற கோடுகள் அடர் நிறத்தில் இருக்கும். பழுப்பு நிற கோடுகள் மங்கிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். அவ்வாறு இருந்தால் அது பழுத்த பழம். அதுவே பச்சை நிறக்கோடுகள் மங்கிய நிறத்தில் பளபளப்பாக தெரிந்தால் அது பழுக்கும் நிலையில் இருக்கிறது என அர்த்தம்.
மங்கிய நிறம் : நீங்கள் பழத்தை நன்றாக கவனித்தால் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கோடுகள் அழிந்து ஸ்பாட் போல் மங்கிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். அவ்வாறு இருக்கும் பழங்கள் மண்ணிலிருந்து பிடுங்கும்போது பழுத்திருப்பதாக அர்த்தம். அதுவே கொஞ்சம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் கலந்தது போல் இருந்தால் நன்கு இனிப்பு சுவை கொண்ட பழுத்த பழம் என்று அர்த்தம். ஒருவேளை அந்த ஸ்பாட் வெள்ளை நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் பழம் சுவை இருக்காது என்று அர்த்தம்.
காம்பு தண்டை கவனிக்கவும் : தர்பூசணி பழத்தின் மீது இருக்கும் காம்பு நன்கு காய்ந்து பிரவுன் நிறத்தில் இருந்தால் பழுத்திருப்பதாக அர்த்தம். பச்சை நிறத்தில் இருப்பின் காயாக உள்ளது என அர்த்தம்.
தர்பூசணி பழத்தின் மீது தட்டவும் : நீங்கள் பழத்தை வாங்கி தட்டிப்பருங்கள் தட்டும்போது ஆழமான சத்தம் கேட்கும். அதாவது உள்ளே காலியாக இருக்கும்போது வரும் சத்தம் போல் கேட்கும். அவ்வாறு இருந்தால் பழம் பழுத்திருப்பதாக அர்த்தம். அதேசமயம் பழத்தை தட்டும்போது கடினமாக இருக்கும். சத்தத்தின் ஒலி அடர்த்தியாக கேட்கும் அவ்வாறு இருப்பின் அது காயாக உள்ளதென அர்த்தம்.
பழத்தின் மீது காயங்கள் : பழத்தின் மீது கீரல் அல்லது ஏதவாது வெட்டு காயங்கள் போல் இருந்தால் அது நன்கு பழுத்த சுவை கொண்ட பழம் என் அர்த்தம். பழத்தின் இனிப்பு வெளியேறுகிறது என அர்த்தம்.
வட்டமாக இருக்க வேண்டும் : நீங்கள் வாங்கும் தர்பூசணி பழம் வட்டமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் வட்டமான பழத்தில்தான் சுவை அதிகமாக இருக்கும். முட்டை போன்ற ஓவல் ஷேப்பில் இருந்தால் அதில் சுவை குறைவாக இருக்கும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment