இந்தியாவில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், இனி ஒவ்வொரு நாளும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸிற்கும் மேல் அதிகரித்து உடலெங்கும் அனல் பறக்கும். கோடை காலத்தில் நமக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டாலும், பெரும்பாலானோர் நீரிழப்பினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கோடை காலம் வந்துவிட்டாலே இந்தப் பிரச்சனை தலை தூக்கிவிடும். உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் மயக்கம், தலைசுற்றல், சோர்வு, நாள் முழுதும் களைப்பு போன்றவை வரக்கூடும்
ஆகையால் கோடை காலத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம் டயட்டில் நீரிழப்பை தடுக்க உதவும் சில உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் தேவையற்ற உடல்நலக் கோளாறுகளிலிருந்து தப்பிக்கலாம். அந்த 5 சூப்பர் உணவுகள் இதோ..
தர்பூசணி: நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தில் அதிகமான ஊட்டச்சத்துகள் உள்ளது. இந்தப் பழத்தில் அதிகமான நீர் இருப்பதால், குறைவான கலோரிகளே இதில் இருக்கின்றன. அப்படியென்றால் தர்பூசணி பழத்தை நிறைய சாப்பிட்டாலும் குறைவான கலோரிகளே உங்கள் உடலில் சேரும். அதேசமயத்தில் உங்கள் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இதை ஜுஸாகவோ, சாலடாகவோ உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
வெள்ளரிக்காய்: இதுவும் நீர்ச்சத்து நிறைந்த பழம்தான். கோடை காலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் வெள்ளரிக்காய், உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையவிடாமல் பார்த்துக்கொள்வதோடு உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றும். அற்புதம் நிறைந்த இந்த வெள்ளரிக்காயை சாலடாகவோ, சாண்ட்விச்சில் சேர்த்தோ அல்லது சூப்பாகவோ வறுத்தோ சாப்பிடலாம்.
பால் : ஒரு க்ளாஸ் பாலில் புரதம், கார்போஹைடரேட், கொழுப்பு மற்றும் நீர்ச்சத்து உள்ளது. கோடை காலத்தில் ஒருவர் ஆரோக்கியமாக இருக்க பால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நம் உடலில் இழந்த நீர்சத்தை பெற பால் சிறந்த உணவாகும். உங்களுக்கு உடல்நலப் பிரச்சனை இருந்தால், உங்கள் டயட்டில் பாலை சேர்த்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். உடற்பயிற்சி முடித்து தண்ணீர் குடிப்பதற்குப் பதிகாக ஒரு க்ளாஸ் பால் குடிப்பது உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
யோகர்ட்: யோகர்டில் அதிகளவு நீர்ச்சத்தும் நம் உடலுக்கு தேவையான சத்துகளும் உள்ளது. இது பல வழிகளில் நம் ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது. சுவை நிறம்பிய யோகர்டிற்குப் பதிலாக எதுவும் சேர்க்காத ப்ளெய்ன் யோகர்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் சுவைமிகுந்த யோகர்டில் சர்க்கரை சேர்க்கப்படிருக்கும். இவை நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காலை அல்லது மதிய உணவிற்குப் பின் ஒரு கப் யோகர்ட் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.
தக்காளி: நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளியில் பல ஊட்டச்சத்துகளும் வைட்டமின் மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளது. இதை அப்படியே பச்சையாக கடித்து சாப்பிடலாம். அல்லது ஜூஸாகவோ, கொஞ்சம் மிளகு தூள், உப்பு சேர்த்து சாலடாகவோ சாப்பிடலாம்.
🔻🔻🔻
No comments:
Post a Comment