நேரத்திற்கு நேரம் மாற்றமடைந்து வரும் பிசினஸ் சூழலில், நம்முடைய உற்பத்தி திறனுக்கும் வெற்றிக்கும் தகவல்களை திறமையாக பரிமாற்றம் செய்வதற்கான திறன் மிகவும் அவசியமாகும். சக பணியாளர்களோடு இணைந்து பணியாற்றுவதற்கோ, உயரதிகாரிகளிடம் திட்டங்களை கூறுவதற்கோ அல்லது வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடுவதற்கோ சிறந்த தகவல் பரிமாற்ற திறன் தேவைப்படும். இந்த திறமை இருந்தால் மட்டுமே பணிபுரியும் இடங்களில் நம் பெர்ஃபார்மன்ஸை உயர்த்த முடியும். உங்கள் தகவல் பரிமாற்ற திறனை எப்படி செம்மைப்படுத்தலாம் என்பதற்கு சில டிப்ஸ்களை இந்தக் கட்டுரையில் நாங்கள் தருகிறோம்
கவனமாக கேட்பது… பலரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இது மிகவும் அடிப்படையான விஷயம் என்பதை மறந்துவிடாதீர்கள். சிறந்த தகவல் பரிமாற்ற திறனுக்கு முதலில் அடுத்தவர்கள் பேசுவதை கவனமாக கேட்க வேண்டும். நாம் எப்போது பேசலாம் எனக் காத்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக நமக்கு முன் பேசுபவரின் சிந்தனைகள், கருத்துகள், கவலைகளை புரிந்துகொள்வதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கண்களை நேராக நோக்குங்கள், புரிந்துகொண்டதற்கு அத்தாட்சியாக சைகையை வெளிப்படுத்துங்கள். அடுத்தவர்கள் பேசுவதை கவனமாக கேட்பது இருவருக்கு இடையே நல்ல உறவுமுறையை வளர்ப்பதோடு உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
தெளிவும் சுருக்கமும்: நாம் கூறுவது தெளிவாகவும், அதே சமயத்தில் சுருக்கமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் தவறான புரிதல் ஏற்படுவதை தடுக்க முடியும். நமது எண்ணங்களை தெரிவிக்கும் போது சுற்றி வளைக்காமல் நேரடியாக கூற வேண்டும். அப்போதுதான் எல்லாருக்கும் எளிமையாக புரியும். தேவையற்ற விளக்கங்கள் அல்லது புரியாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். இல்லையென்றால் குழப்பமே மிஞ்சும். உங்கள் எண்ணங்களை சிறந்த முறையில் பகிர எப்போதும் எளிமையான மொழியை பயன்படுத்துங்கள்.
வெளிப்படையான தகவல் பரிமாற்றம்: அலுவலகத்தில் குழு உறுப்பினர்கள் தங்கள் எண்ணங்கள், கவலைகள், திட்டங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை வெளிப்படையாக தெரிவிக்கும் சூழலை உருவாக்குங்கள். அவர்களது கருத்துகளை கூற ஊக்கப்படுத்துங்கள். பரந்துபட்ட பார்வைகள் கொண்ட கருத்துகளையும் எண்ணங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருங்கள். குழு உறுப்பினர்களிடம் வெளிப்படைத்தன்மை நிறைந்த கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதால் இணைந்து பணியாற்றுவது எளிமையாவதோடு உறுப்பினர்களுக்கு இடையேயான நம்பிக்கையும் அதிகரிக்கும்.
பச்சாதாபம் : சிறந்த தகவல் பரிமாற்றத்திற்கு பச்சாதாபமும் ஒரு கருவியாக செயல்படுகிறது. இதனால் அடுத்தவர்களின் உணர்வுகள், அனுபவங்களை புரிந்துகொள்ள முடிகிறது. சக பணியாளர்களின் எண்ணவோட்டங்கள், சவால்கள், உணர்வுகளை புரிந்துகொள்வதற்கு அவர்களோடு நேரம் செலவழியுங்கள். அவர்களின் உணர்வுகள் மற்றும் கவலைகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள். மற்றவர்களிடம் பச்சாதாபம் கொள்வதால் அவர்களுடனான தொடர்பு வலுப்படும். ஆதரவான பணிச்சூழல் ஏற்படும். இது பணியாளர்களின் மன நலனை ஆரோக்கியப்படுத்தி உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்யும்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது : தகவல் பரிமாற்ற திறனை வளர்த்தெடுப்பதற்கு தொடர்ச்சியான மேம்படுத்தல் மிகவும் அவசியமாகும். உங்கள் சக பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் அல்லது ஆலோசகர்களிடம் இருந்து வரும் பின்னூட்டங்களை காதுகொடுத்து கேளுங்கள். இது உங்கள் தகவல் பரிமாற்ற ஸ்டைலை மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நேர்மறையான மாற்றங்களை நடைமுறைப்படுத்துங்கள். உங்களுக்கு வரும் பின்னூட்டங்களை ஏற்றுக்கொள்வது உங்களின் தொழில்முறை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment