மேகமலை தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் ஒரு சிறிய பிரமிக்க வைக்கும் பகுதி. தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து 45 கிலோ மீட்டர் மலைப்பாதை வழியாகச் சென்றால் மேகமலையை அடைந்து விடலாம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அழகான மேகமலை.
இங்கு தாவரங்கள், வனவிலங்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. காணும் திசையெல்லாம் பசுமையான காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள், இதமான சூழல் என மேகமலை நம்மை கட்டி போடுகிறது. ஊட்டி, கொடைக்கானலுக்கு மற்றாக கம்மி செலவில் மலை பகுதிக்கு டூர் போக விரும்புபவர்களுக்கு மேகமலை வரபிரசாதம் என சொல்லலாம்.
இயற்கையின் அழகை கண்டு களிக்கவும், அமைதியாக நேரத்தை கழிக்கவும் ஏற்ற இடம். இங்கு காப்பி, தேயிலை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தேயிலைத் தோட்டங்கள், பசுமையான மலைத்தொடர்களை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
18 ஹேர்பின் வளைவுகள் வழியாகச் சென்றாலும், இருபுறமும் உள்ள தேயிலை மற்றும் ஏலக்காய் பண்ணைகள் வழியாகச் சென்றாலும், மேகமலைக்கு வாகனம் ஓட்டுவது சலிப்பை தராது. தேனிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் முதல் தேர்வாக மேகமலை இருக்கும். அதிகமான வெயிலும் அதிகமான குளிரும் இல்லாமல் இதமான சூழல் எப்போதும் காணப்படும். புலிகள் சரணாலயத்துக்குட்பட்ட பகுதி என்பதால் இங்கே கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மேகமலைக்கு செல்ல முடியும்.
மணலாறு அணை : மணலாறு அணை மேகமலை பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குகள் மற்றும் குடியிருப்புகளை மேலிருந்து பார்க்க முடியும். மூடுபனி படர்ந்த மலை சிகரங்கள், பசுமையான பள்ளத்தாக்குகள, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து கிடக்கும் வனப்பகுதி நல்ல அனுபவத்தை தரும்.
மேகமலை காட்சி முனை : மேகமலைப் பேருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேகமலை காட்சி முனை. அமைதியான சூழல் மற்றும் பசுமையான தாவரங்களால் சூழப்பட்ட இந்த இடம் பிரமிப்பை ஏற்படுத்தும். சமவெளிகள், ஏரிகள், பெரிய தேயிலை தோட்டங்கள் மற்றும் மூடுபனி மூடிய மலைகளின் காட்சிகளை அனுபவிக்க முடியும்.
வனவிலங்கு சரணாலயம் : மேகமலை வனவிலங்கு சரணாலயம் பாதுகாக்கப்பட்ட காப்பகமாகும். 63,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயம் வனவிலங்கு பிரியர்களுக்கு சொர்க்கமாக உள்ளது. இது கேரளாவின் பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு ஒரு பாதுகாப்பு மண்டலமாக செயல்படுகிறது.
இரவங்கலாறு அணை : இரவங்கலாறு அணை மேகமலை பேருந்து நிலையத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நீர்த்தேக்கம். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி இருக்கும். இந்த அணை அருகில் இரவங்கலாறு அருவி உள்ளது. இரவங்கலாறு பகுதியில் உள்ள ஏரியில் வன விலங்குகள் நீர் அருந்தி செல்லும் அழகை ரசிக்கலாம்.
மஹாராஜா மெட்டு : இரவங்கலாறு அணையிலிருந்து 1 கிமீ தொலைவிலும், மேகமலை பேருந்து நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் மஹாராஜா மெட்டு அமைந்துள்ளது. மேகமலை பயணத்தின் ஒரு பகுதியாக, கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இங்கு அமைந்துள்ள மகராசியம்மன் கோவில் வரலாற்று சிறப்பு பெற்றது.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment