சிபிஎஸ்இ உட்பட அனைத்துவித பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரும் கல்வியாண்டில் கட்டாயம் தமிழ் பாடத்தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, 2015–16-ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. 2016–17-ம் கல்வி ஆண்டில் 2-ம் வகுப்புக்கும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமலானது. அதன்படி 2023–24-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக நடைமுறைக்கு வந்தது.
தொடர்ந்து வரும் 2024–25-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. இது மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்து விதமான பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இந்த மாணவர்கள் பொதுத்தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையே பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டும் சுமார் 6 ஆயிரம் பேர் வரை தமிழ் தாய் மொழி அல்லாத மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதர கல்வி வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகள் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment