12ஆம் வகுப்பு முடித்த பின்னர் பல மாணவர்கள், குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக, கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடர முடியாத நிலைக்கு ஆளாகிறார்கள். சிலர் உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
அப்படி குடும்பச் சூழல் காரணமாகக் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத மாணவர்களின், எப்படியாவது உயர்கல்வியைப் படிக்க வேண்டும் என்ற தாகத்தைத் தீர்த்துக்கொள்ளத் தொலைதூரக் கல்வி ஒரு மாற்றுப் பாதையைத் திறந்து விட்டிருக்கிறது.
தொலைதூரக் கல்வி மூலமே படித்து ஐஏஎஸ் போன்ற குடிமைப்பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இருக்கிறார்கள். தொலைதூரக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளையும் பல்கலைக்கழகங்களில் நேரடியாக ஆய்வுப் படிப்பையும் படித்து பேராசிரியர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள்.
இளநிலைப் படிப்பைத் தொலைதூரக் கல்வி மூலம் படித்துவிட்டு, முதுநிலைக் கல்வியை நேரடியாகக் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களும் இருக்கிறார்கள். வழக்கமான கல்லூரி அல்லது பல்கலைக்கழகப் படிப்புக்கு நிகரானதுதான் தொலைதூரக் கல்விப் படிப்பு.
இதில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடைபெறும். வேலை பார்த்துக் கொண்டோ அல்லது வீட்டிலிருந்தோ கூட படிக்கமுடியும். இங்கு சேர்க்கை பெறுவதும் எளிது. சராசரி மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் இங்கு இடம் கிடைத்துவிடும்.
சில படிப்புகளுக்கு மட்டுமே நுழைவுத்தேர்வு இருக்கும். நேரடியாகக் கல்லூரிகளில் படிப்பதைவிட, தொலைதூரக் கல்வி மூலம் படிப்பதற்கு ஆகும் செலவினம் குறைவு. நேரடியாகக் கல்லூரிகளில் படித்த மாணவர்களைப் போலவே, தொலைதூரக் கல்வி மூலம் படித்த மாணவர்களுக்கும் அவர்களின் திறமையைப் பொறுத்தே வேலை கிடைக்கும்.
கவனிக்க வேண்டியவை: எந்தக் கல்வி நிறுவனம் நடத்தும் தொலைதூரக் கல்விப் படிப்பாக இருந்தாலும் சரி, அந்தப் படிப்பிற்குத் தொலைதூரக் கல்விக் குழுமத்தின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா? எனப் பார்க்க வேண்டியது அவசியம். இளநிலைப் பட்டப்படிப்பை முடிக்காமல் நேரடியாக முதுநிலைப் பட்டப்படிப்பைப் படிப்பதோ அல்லது 12ஆம் வகுப்பு படிக்காமல் இளநிலை அல்லது முதுநிலைப் படிப்பைப் படிப்பது அரசு வேலைகளில் சேர உதவாது.
பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு +2 படிப்பை முடித்த மாணவர்கள், இளநிலைப் பட்டப்படிப்புகளை முடித்த பிறகு தான் முதுநிலைப் படிப்பைப் படிக்கவேண்டும். அப்போது தான் அரசு வேலைகளில் சேர முடியும் என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தொலைதூரக் கல்வி மூலம் சில தொழிற் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. அதுபோன்ற படிப்புகளுக்குச் செய்முறைப் பயிற்சி எந்த அளவுக்கு வழங்கப்படுகிறது? என்பதையும், அதற்காகப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் தரமானவையா? என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தற்போது இணையவழி (Online) படிப்புகளும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஆனால் அதை வழங்கும் கல்வி நிறுவனத்தின் தரத்தையும், அது அங்கீகரிக்கப்பட்டதா? என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். தொலைதூரக் கல்வி மூலம் நடத்தப்படும் சட்டம் சார்ந்த பட்டப் படிப்புகளைப் படித்து வழக்கறிஞராக முடியாது. அதனை இந்திய பார் கவுன்சில் ஏற்பதில்லை.
நாட்டில் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்பட 14 திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களிலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் தொலைதூரக் கல்விப் படிப்புகளைப் படிக்கலாம். 1,000க்கும் அதிகமான படிப்புகளைத் தொலைதூரக் கல்வி மூலம் படிக்க வாய்ப்புகள் உள்ளன.
🔻🔻🔻
Click here to join TNPSC STUDY whatsapp group
No comments:
Post a Comment