College Guidance : உயர்கல்வி பெற இனி பணம் ஒரு தடையில்லை... கல்வி கடனை பெற உதவும் வித்யா லட்சுமி இணையதளம்... - Agri Info

Adding Green to your Life

May 15, 2024

College Guidance : உயர்கல்வி பெற இனி பணம் ஒரு தடையில்லை... கல்வி கடனை பெற உதவும் வித்யா லட்சுமி இணையதளம்...

 நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி, வீட்டின் பொருளாதாரம் மேம்படவும் கல்வி மிகவும் அவசியம். உயர்கல்வியைத் தொடர குறிப்பாகப் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்குக் கல்விக் கட்டணம் ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தினருக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது. நிதிச் சூழலைக் காரணம் காட்டி உயர்கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக வங்கிகள் கடன் வழங்குகின்றன. மத்திய அரசின் நிதி அமைச்சக சேவைப் பிரிவு, உயர்கல்வி அமைச்சகம், இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியன ஒன்றிணைந்து வித்யா லக்ஷ்மி எனும் இணையதளத்தை உருவாக்கிச் செயல்படுத்துகின்றன.

இந்த இணையதளத்தில் மாணவர்கள் எங்கிருந்தும் விண்ணப்பிக்க முடியும். உரிய வழிமுறைகளோடு செயல்படுத்துவதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு அனைத்து வங்கிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் கிராமப்பகுதியில் உள்ள மாணவர்களும் வங்கிகளில் கடன் பெறுவது எளிதாகியுள்ளது. https://www.vidyalakshmi.co.in இந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மூன்று வங்கிகளைத் தேர்வு செய்யலாம். பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறுவோரில் 100-க்கு 15 பேர் மட்டுமே உயர்கல்வியைத் தொடர்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில்தான் உயர்கல்விக்குக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்கள். ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் உயர்கல்வி பயில வங்கிகளில் கடன் பெற முடியும். வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் வங்கிகள் முன்வந்துள்ளன. கலை, வணிகம், அறிவியல், பொறியியல், மருத்துவம். பல் மருத்துவம். கணினி அறிவியல், நிர்வாகவியல், பட்டயக் கணக்காளர், விமானி, கப்பல் பொறியாளர், செவிலியர் பணி உள்ளிட்ட வேலைவாய்ப்பு உறுதிப் படிப்புகளுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. இத்துடன் ஐஐடி, ஐஐஎம் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி பயில்வதற்கான கடனுதவியை இந்த வங்கிகளிலிருந்து பெற முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.


இந்தியாவிலோ, வெளிநாட்டிலோ உயர்கல்வி பயில எந்தவித உச்சவரம்புமின்றி தேவைக்கேற்ப வங்கிகளில் கடன் பெறலாம் என கூறப்படுகிறது. 4 லட்ச ரூபாய் வரையான கடனுக்கு மார்ஜின் தொகை செலுத்த வேண்டியதில்லை. அதற்கு மேலான தொகைக்கு 15% முதல் 20% வரை முன் தொகை செலுத்த வேண்டும். வெளிநாட்டில் பயிலச் செல்லும் மாணவர்கள் பெறும் கடன் தொகையில் 15 சதவீதத்தை முன் தொகையாக செலுத்த வேண்டும்.

கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம், புத்தகம் வாங்குவதற்கும் விடுதிக் கட்டணம், போக்குவரத்து செலவு, படிப்புக்குத் தேவையான கருவிகள் வாங்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் வங்கியிலிருந்து கடன் பெற முடியும். அவசியமான படிப்புகளுக்குக் கணினி வாங்குவதற்கும் கடன் பெற முடியும். சிறப்புத் தகுதி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை கிடைக்கும்பட்சத்தில் மொத்தக் கல்வி கட்டணத் தொகையில் உதவித்தொகை போக மீதமுள்ள தொகையை வங்கியில் கடனாகப் பெற முடியும்.


தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கிடைத்திருப்பின், அரசுக் கல்லூரிகளில் அந்தப் படிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதத்தை வங்கிகள் கடனாக வழங்கும். ரூ. 4 லட்சத்துக்கு மேல் ரூ. 7.5 லட்சம் வரையான கடன் தொகை பெற வேண்டுமெனில் அதற்கு ஒருவரின் உத்தரவாதம் (Security) அளிக்க வேண்டும். ரூ. 7.5 லட்சத்துக்கு மேலான தொகை கடனாகத் தேவைப்படின் அதற்குரிய சொத்துகளைப் பிணையாக வங்கிகளில் தாக்கல் செய்ய வேண்டும். வீடு, நிலம் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பத்திரங்கள், தேசிய சேமிப்புப் பத்திரங்கள், பரஸ்பர முதலீட்டுத் திட்டங்கள், நிறுவனக் கடன் பத்திரங்கள். வங்கி வைப்புத்தொகை போன்றவை பிணையாக ஏற்கப்படும்.


படிப்புக் காலம் முடிந்த பிறகு ஓராண்டு வரை கடனைத் திரும்பச் செலுத்த அவகாசம் அளிக்கப்படுகிறது. ரூ. 7.50 வட்சம் வரை கடன் பெற்றவர்கள் அதைத் திரும்பச் செலுத்த 10 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்படுகிறது. ரூ. 7.5 லட்சத்திற்கு மேல் பெற்றவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது.



உயர்கல்வி பெற வங்கிக்கடன் பெறும் போது அதில் சில விதிமுறைகளும் வைக்கப்பட்டுள்ளது. பெறப்படும் கடன் தொகைக்கு ஈடான மதிப்பில் காப்பீட்டு பாலிசி மாணவர் பெயரில் எடுக்கப்பட வேண்டும். படிப்புக் காலம், கடனைத் திரும்பச் செலுத்த எடுத்துக்கொள்ளும் காலம் வரை இந்தக் காப்பீடு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கல்விக் கடனுக்குப் பரிசீலனைக் கட்டணம் கிடையாது. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களும் கல்விக் கடன் பெறலாம். பெற்றோர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்றவை இருந்தாலும், கல்விக் கடன் வழங்கலாம் என்ற விதிமுறையும் உள்ளது. சமீபகாலமாக ஐடிஐ, பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. குறுகிய காலத் தொழில்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 1.5 லட்சம் வரை கல்விக் கடன் படிப்பின் கால அளவிற்கேற்ப அளிக்கப்படுகிறது. இந்தக் கடன் தொகைக்குப் பிணைத் தொகை செலுத்த வேண்டியதில்லை. இந்தக் கடனுக்குச் செலுத்தும் வட்டித் தொகைக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

இவ்வளவு விவரங்களை பார்த்த நாம், கல்விக்கடனை பெற தேவையான ஆவணங்கள் என்ன என்பதையும் பார்க்கலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம். இணைய வழியில் விண்ணப்பித்திருந்தால் படிவத்தை நகல் எடுத்து இணைக்கலாம். மேற்படிப்புக்கான பல்கலைக்கழகம், கல்லூரி அளித்துள்ள சேர்க்கைக் கடிதம். கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர். இணை விண்ணப்பதாரரான பெற்றோர் ஆகியோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் தலா இரண்டு இணைக்கப்பட வேண்டும். இருவரது புகைப்படத்துக்கான அடையாளச் சான்று அளிக்கப்பட வேண்டும்.இதற்கு நிரந்தரக் கணக்கு எண் (PAN card), பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம். ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலைப் புகைப்பட ஆதாரமாக அளிக்கலாம். இருப்பிட சான்று அளிக்கப்பட வேண்டும். கல்வி சார்ந்த ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். வெளிநாட்டில் பயில்வதாயிருப்பின் GRE, GMAT, TOEFL, IELTS தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் சான்றின் நகலையும் இணைக்க வேண்டும். வங்கிக் கணக்கு தொடர்பான 3 மாத அறிக்கையும் அத்துடன் இணைக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு இருப்பின் அனைத்து வங்கிகளின் விவரங்களையும் அளிக்க வேண்டும். பெற்றோரின் சம்பளக் கணக்கு. தொழில்முறை கணக்கு, வருமான வரி தாக்கல் செய்பவராயிருப்பின் மூன்று ஆண்டு விவரங்கள் உள்ளிட்டவற்றையும் வருமான வரிச் சான்றையும் அளிக்க வேண்டும். கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்துவதற்கான நிதி வசதியை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் கடன் பெற விரும்பும் வங்கியில் சேமிப்புக் கணக்கு இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. பிறகுகூடக் கணக்கைத் தொடங்கிக்கொள்ளலாம். இத்தனை சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இனி உயர்கல்வி பயில பெற்றோர் கவலை கொள்ள தேவையில்லை .



🔻🔻🔻

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employmenT News

No comments:

Post a Comment