இணையவழியில் ஜூன் 14, 15-ல் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - Agri Info

Education News, Employment News in tamil

June 9, 2024

இணையவழியில் ஜூன் 14, 15-ல் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 14, 15-ம் தேதிகளில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: “உயர்நீதிமன்ற தீர்ப்பாணையை செயல்படுத்தும் வகையில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை(எமிஸ்) மூலமாக ஜூனில் நடைபெறும்.

அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நடப்பாண்டு மட்டும் மாநில முன்னுரிமையின்படி கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும்.

அதன்படி பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜூன் 10-ம் தேதி மாலை 6 மணிக்குள் எமிஸ் தளம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ஜூன் 11-ம் தேதி ஒப்புதல் வழங்க வேண்டும்.

அனைத்து வகை ஆசிரியர் பயிற்றுநர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல், காலிப் பணியிட விவரம் ஜூன் 12-ல் வெளியிட வேண்டும். தொடர்ந்து முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம், முறையீடுகள் ஏதும் இருப்பின் அதை ஜூன் 13-ம் தேதி சரி செய்து இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் வேண்டும்.

அதன்பின் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மாறுதல் வருவாய் மாவட்டத்துக்குள் ஜூன் 14-ம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஜூன் 15-ம் தேதியும் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment