அரசுப் பள்ளிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகங்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. அனைத்து செயல்பாடுகளும் மானிட்டரில் 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் 2022-2023, 2023-24-ம் கல்வியாண்டில் தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Class) ஏற்படுத்தவும் மற்றும் 2021-22, 2022-23, 2023-24-ம் கல்வியாண்டுகளில் நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HiTech Lab) அமைப்பதற்குமான பணிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து டிஜிட்டல் வடிவிலான கற்றல் கற்பித்தல் (Digital Contem) வளங்களை தயாரித்து திறன்மிகு வகுப்பறைகள் மூலம் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலை வழங்குவதுடன், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வகுப்பறையில் சிறப்பாக செய்வதற்கு உறுதுணையாகவும் இருக்கும்.
இதற்கிடையே, நடப்பு கல்வியாண்டில் (2024-25) முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள 493 பள்ளிகளில் 634 திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், ஆரம்பப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும், நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களும் நடப்பு கல்வியாண்டில் இருந்து முறையாக செயல்படுத்துவதற்கும் மற்றும் பராமரிப்பு செய்வதற்கும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்படுகின்றன.
அதன்படி திறன்மிகு வகுப்பறையை கையாள பள்ளிக்கு ஒரு ஆசிரியரை சார்ந்த தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்காக மட்டுமே திறன்மிகு வகுப்பறையை தினமும் பயன்படுத்த வேண்டும். பொறுப்பாசிரியர் இல்லாமல் திறன்மிகு வகுப்பறையை மாணவர்கள் கையாளுவதை தவிர்க்க வேண்டும்.
தினமும் ஒரு மணி நேரம் திறன்மிகு வகுப்பறையை பயன்படுத்துவதை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும். மேலும், டிஜிட்டல் பாடப்பொருட்கள் காணொலிகளாக தனித்தனியே இடம் பெற்றிருக்கும். அதேநேரம் பாதுகாப்புக்காக கணினியில் உள்ள யுஎஸ்பி போர்ட்கள் (USB Port) முடக்கப்பட்டுள்ளன. எனவே கணினியில் பென் டிரைவ் போன்ற எந்த தகவல் சேமிப்பானையும் இணைக்கக்கூடாது. பணியாளர்கள் தங்கள் சொந்த செயல்பாடுகளுக்கு கணினி மற்றும் இணையதள வசதியை பயன்படுத்தக் கூடாது.
அனைத்து செயல்பாடுகளும் 24 மணி நேரமும் மானிட்டரில் பதிவு செய்யப்படும். அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் நாற்காலி, மேஜைகள் போன்ற பொருட்கள் சேதமடையக்கூடாது. ஆய்வகத்துக்குள் எந்தவொரு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவோ, அங்கு வைத்து சாப்பிடவோ அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
0 Comments:
Post a Comment