நம் எல்லாருக்குமே நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. ஆனால் நாம் சாப்பிடும் நொறுக்கு தீனிகள் பெரும்பாலும் கலோரிகள் மற்றும் கார்போஹைடரேட் அதிகமுள்ளதாகவும் நன்கு எண்ணெயில் வறுக்கப்பட்டதாகவுமே இருக்கும். இதன் காரணமாக தேவையில்லாமல் நம் உடல் எடை அதிகரிக்கிறது. இதனால்தான் ஆரோக்கியமான, குறைவான கலோரிகள் கொண்ட ஸ்னாக்ஸை சாப்பிடுமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பலரும் விரும்பி உண்ணும் ஸ்னாக்ஸான தாமரை விதை (மக்கானா) அல்லது வேர்க்கடலை ஆகிய இரண்டும் சத்து நிறைந்ததோடு உடலுக்கு ஆற்றலையும் வயிறு நிறைந்த திருப்தியையும் தருகிறது. ஆனால் உடல் எடை குறைப்பிற்கு இந்த இரண்டில் எது அதிக பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வி இப்போது நம்முன் இருக்கிறது. வாருங்கள், அதைப்பற்றி விளக்கமாக பார்ப்போம்.
வேர்க்கடலை :
வேர்க்கடலை மிகவும் மலிவான விலையில் கிடைக்க கூடியது. இதில் அதிகளவு ஆரோக்கிய கொழுப்புகள், புரதங்கள் உள்ளது. இவை செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும் என்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. வேர்க்கடலையை அளவாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்காமல் பசியை கட்டுப்படுத்தலாம் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இது உங்களின் மெடபாலிக் விகிதங்களை அதிகரித்து மலச்சிக்கல் வராமல் தடுத்து, நாள்பட்ட இதய நோய் வரும் ஆபத்திலிருந்து தடுக்க உதவுகிறது.
வேர்க்கடையில் உள்ள ஊட்டச்சத்துகள் :
100 கிராம் வேர்க்கடலையில் 587 கலோரிகள், 28.5 கிராம் புரதம் மற்றும் 49.2 கிராம் கொழுப்புகள் உள்ளது.
தாமரை விதை (மக்கானா) :
தாமரை விதைகளை எடுத்துகொண்டால், அதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், புரதம், மாக்னீசியம் ஆகியவை அதிகமுள்ளது. உடல் எடை குறைப்பிற்கும் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் இவை அனைத்தும் முக்கியமாகும்.
மேலும் மக்கானாவில் அழற்சி எதிர்ப்பு மற்றும் இளமை தோற்றத்தை தரும் பண்புகள் உள்ளது. உணவு சாப்பிடுவதற்கு முன் தாமரை விதையை சாப்பிடுவதால் பசி அடங்குகிறது. அதுமட்டுமின்றி இதயப் பிரச்சனை, தூக்கமின்மை, கருவுறுதல் பிரச்சனை, டயாபடீஸ் போன்ற பிரச்சனைகளை கையாளவும் தாமரை விதைகள் உதவுகிறது.
மக்கானாவில் உள்ள ஊட்டச்சத்துகள் :
100 கிராம் மக்கானாவில் 347 கலோரிகளும், 9.7 கிராம் புரதமும் 0.1 கிராம் கொழுப்பும் உள்ளது.
இந்த இரண்டில் எது ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்?
இரண்டிலுமே ஏறக்குறைய ஒரே அளவு ஊட்டச்சத்துகளையே கொண்டிருக்கின்றன. மேலும் தேவையற்ற நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தடுத்து வயிறு நிறைந்த திருப்தியை இரண்டுமே தருகிறது.
வேர்க்கடலை அல்லது மக்கானாவை பயன்படுத்தி சாட், சாலட், ஷேக், ஸ்மூதிஸ் ஆகியவற்றை செய்யலாம். இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்து மதிப்பீடை பார்த்தோமென்றால், கலோரியில் தான் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. மக்கானாவில் குறைவான கலோரிகளும் வேர்க்கடலையில் அதிக கலோரிகளும் உள்ளது. ஒருவேளை நீங்கள் அதிக கலோரிகள் உட்கொள்வதை குறைக்க வேண்டுமென நினைத்திருந்தால், வேர்க்கடலையை விட மக்கானா தான் உங்களுக்கு சரியான ஸ்னாக்ஸ் தேர்வாக இருக்கும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment