சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வர இருக்கின்றன” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு தொடக்க விழா மற்றும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்ட தொடக்க விழா சென்னை ஆலந்தூர் ஏ.ஜெ.எஸ்.நிதி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை காலை நடந்தது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாணவர்களுக்கான அஞ்சல் சேமிப்பு கணக்கு திட்டத்தையும், ஆதார் பதிவு மையத்தையும் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியது:“கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறந்துள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்க உள்ளது. அதில், மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன..
மாணவர்கள் இந்த வயதில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் கஷ்டப்பட்டு தங்களைப் படிக்க வைக்கின்றனர் என்பதை உணர்ந்து மாணவர்கள் படிக்க வேண்டும். அவர்கள் நல்ல குழந்தைகளாக வளர வேண்டும். மதிப்பெண் என்பது அடுத்ததுதான். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு இந்திய மாநிலத்திலும் பள்ளிக் கல்வித் துறைக்கு இவ்வளவு அதிக ஒதுக்கீடு கிடையாது.
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் புதிய திட்டங்கள் படிப்படியாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்கள் படிப்புடன் விளையாட்டு, என்சிசி, என்எஸ்எஸ், இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் காட்ட வேண்டும். ஒட்டுமொத்த திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயண வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறோம். அந்த வகையில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 25 மாணவர்கள் லண்டன் செல்ல உள்ளனர்” என்று அவர் கூறினார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, “கல்வித் துறையில் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. முதல்வர் ஸ்டாலின் பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார். பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமரகுருபரன் பேசுகையில், “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது. இந்த உதவிகளை மாணவ, மாணவிகள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி வரவேற்றார். நிறைவாக தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நன்றி கூறினார். விழாவில், தனியார் பள்ளிகள் இயக்குநர் எம்.பழனிசாமி, அஞ்சலக முதுநிலை மேலாளர் கார்த்திகேயன், ஆதார் ஆணையத்தின் திட்ட மேலாளர் தினேஷ் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
0 Comments:
Post a Comment