தூக்கம் என்பது நமது வாழ்வில் அன்றாட அவசியத் தேவைகளில் ஒன்றாகும். ஆனால் நீங்கள் ஒரு மணிநேர தூக்கத்தை இழந்தால், அதிலிருந்து மீள 4 நாட்கள் ஆகலாம், என்று நரம்பியல் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். மணிப்பால் மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் துறையின் தலைவரும், மூத்த ஆலோசகருமான மருத்துவர் சிவ குமார் ஆர், ஒரு மணிநேரம் போன்ற, சிறிய அளவிலான தூக்கம் குறையும் போது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
ஸ்லீப் ரிசர்ச் சொசைட்டியின் ஆய்வின்படி, ஒரு மணிநேர தூக்கத்தை இழந்தால் அதிலிருந்து மீள 4 நாட்கள் ஆகும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார். முடிவெடுத்தல் மற்றும் கவனம் உள்ளிட்டவற்றிற்கு தூக்கம் முக்கியமானது என்று ஆராய்ச்சி எடுத்துரைக்கிறது. மேலும், தூக்கம் இழந்தால் மூளையின் திறனும் பலவீனமடைகிறது. உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவை. தூங்காமல் இருப்பது உடலின் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது, தலைவலி, எரிச்சல், மோசமான முடிவெடுப்பது மற்றும் கவனமின்மை போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
பல நாட்கள் தொடர்ச்சியாக சிறிய அளவிலான தூக்கத்தை இழப்பதன் ஒட்டுமொத்த எதிர்மறை விளைவு என்பது, ஒரே இரவில் பல மணிநேரங்கள் தூங்காமல் இருப்பதால் அறிவாற்றல் திறன்களில் ஏற்படும் கணிசமான தாக்கங்களை போல இருக்கலாம். எனவே சீரான தூக்கத்தை பின்பற்றி நமது உடலை பராமரிக்க வேண்டும்.
கூடுதலாக, உறங்குவதற்கு முன் காஃபின் மற்றும் அதிக உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தூக்கத்தின் இழப்பை தவிர்க்கலாம். மேலும், வழக்கமான பிஸிக்கல் ஆக்ட்டிவிட்டி செய்வது, சிறந்த தூக்கத்தை மேம்படுத்தும். சிறிய அளவிலான தூக்கம் பாதிக்கப்பட்டால் கூட, ஒருசிலருக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு அதிக தூக்கம் தேவைப்படுகிறது, மேலும் ஒரு சிறிய தூக்கமின்மை கூட அவர்களின் கற்றல் திறனை பாதிக்கலாம். மற்றும் தூக்கமின்மை காரணமாக வயதானவர்களும் எளிதில் பாதிக்கப்படலாம். மூச்சுத்திணறல் அல்லது மனநலக் கோளாறுகள் போன்ற நாள்பட்ட உடல்நலக் குறைபாடுகள், தூக்கமின்மையின் அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.
பல்வேறு நபர்கள் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து டாக்டர் சுதீரிடம் ஆலோசனை கேட்டனர். ஒரு நபர், மெலடோனின் மாத்திரைகள் தூக்கமின்மைக்கு பாதுகாப்பானதா? என்று கேட்டதற்கு, “பென்சோடியாசெபைன்கள் மற்றும் சோல்பிடெமை விட மெலடோனின் பாதுகாப்பானது, இருப்பினும், ஒரு மருத்துவரை அணுகிய பின்னரே அவற்றை எடுத்துக்கொள்வது நல்லது என்று கூறியுள்ளார்.
மற்றொருவர், “ஒருவர் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? வயது வாரியாக தயவு செய்து சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, மருத்துவர் விரிவான விளக்கத்தை வழங்கினார்.
ஒருவர் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?
புதிதாகப் பிறந்த குழந்தைகள் (3 மாதங்கள் வரை): 14 முதல் 17 மணி நேரம் தூங்க வேண்டும்.
குழந்தைகள் (4 முதல் 12 மாதங்கள் வரை): 12 முதல் 16 மணிநேரம் தூங்க வேண்டும்.
சிறு குழந்தைகள் (1 முதல் 5 வயது வரை): 10 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும்.
பள்ளி வயது குழந்தைகள் (6 முதல் 12 வயது வரை): 9 முதல் 12 மணி நேரம் தூங்க வேண்டும்.
டீனேஜர்கள் (13 முதல் 18 வயது வரை): 8 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும்.
- பெரியவர்கள் (18 வயது மற்றும் அதற்கு மேல்): 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment