கலை, அறிவியல் கல்லூரிகளில் இனி ஒரே நேரத்தில் பருவத் தேர்வுகள்: முதல்முறையாக வருடாந்திர அட்டவணை வெளியீடு - Agri Info

Adding Green to your Life

June 30, 2024

கலை, அறிவியல் கல்லூரிகளில் இனி ஒரே நேரத்தில் பருவத் தேர்வுகள்: முதல்முறையாக வருடாந்திர அட்டவணை வெளியீடு

 1272300

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான கல்வியாண்டு கால அட்டவணையை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே காலத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.


இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு, அரசு உதவி, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் வெவ்வேறு விதமான வேலைநாட்கள், பருவத்தேர்வு, விடுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதனால் கல்லூரிகளின் முறையான கல்விச் சூழல் பாதிக்கப்படுகிறது.


பருவத்தேர்வு முடிவுகளும் தாமதமாக வெளியிடப்படுகின்றன. இதன் காரணமாக முதுநிலை படிப்புக்கான சேர்க்கையில் விரைந்து சேர முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். இதுதவிர உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் உரிய காலத்துக்குள் மாணவர்கள் செல்ல முடியாத நெருக்கடியும் உருவாகிறது. இதை பெரிய கால இடைவெளிகள் இல்லாத பொதுவான வரைவு கால அட்டவணை தேவைப்படுகிறது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும் பின்பற்றும் வகையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான வரைவு கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன.


ஒற்றை (1, 3, 5) பருவங்களில் பயிலும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு தேர்வுகள் செப்டம்பர் மாதத்திலும், செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 9 முதல் 17-ம் தேதி வரையும், மாதிரித் தேர்வுகள் அக்டோபர் 18 முதல் 28-ம் தேதி வரையும் நடைபெறும். பருவத் தேர்வுகள் அக்டோபர் 31-ல் தொடங்கி நவம்பர் 25-ம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் 16-ம் தேதிக்குள் வெளியாகும்.

இதேபோல், இரட்டை பருவங்களுக்கான (2, 4, 6) வகுப்புகள் டிசம்பர் 4 முதல் 2025 ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறும். மேலும், செய்முறைத் தேர்வுகள் மார்ச் 24 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும். இதுதவிர பருவத் தேர்வுகள் ஏப்ரல் 15 முதல் மே 10-ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 31-ம் தேதிக்குள் வெளியாகும். எனவே, பல்கலைக்கழக தேர்வுத் துறைகளும், கல்லூரி நிர்வாகங்களும் மாணவர் நலன்கருதி, இந்த வருடாந்திர கால அட்டவணையை பின்பற்றி செயல்பட வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment