பிரெட்டை ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா… நீங்க இதை கட்டாயம் வாசிக்கணும்!!! - Agri Info

Adding Green to your Life

June 24, 2024

பிரெட்டை ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா… நீங்க இதை கட்டாயம் வாசிக்கணும்!!!

 பிரெட் என்பது பெரும்பாலானவர்களின் வீடுகளில் காணப்படும் ஒரு தின்பண்டம் ஆகும். பசி எடுக்கும் சமயத்தில் வீட்டில் உணவு இல்லாத பொழுது அவசரத்திற்கு பிரெட் உதவும் என்பதற்காகவே பலர் வீட்டில் பிரெட் வாங்கி வைப்பதுண்டு.

ஆனால் பிரெட்டை நம்மால் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. நாம் பிரெட்டை சேமித்து வைக்கும் முறையானது அதன் தரம் மற்றும் அது கெட்டுப் போகாமல் இருப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு கொண்டுள்ளது. பலர் பிரெட்டை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அது எப்பொழுதும் ஃபிரஷாக இருக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில் ஃப்ரிட்ஜில் பிரெட்டை சேமித்து வைப்பதால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அது விரைவில் கெட்டுப் போகும், அதோடு அதனுடைய அமைப்பு மற்றும் சுவையும் மாறுபடுகிறது. பிரெட்டை ஏன் ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்க கூடாது என்பதற்கான ஒரு சில காரணங்களை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக பிரெட்டை தயாரிக்கும் பொழுது அதில் உள்ள ஸ்டார்ச் மூலக்கூறுகள் தண்ணீரை உறிஞ்சி கெட்டியாகிறது. இதன் காரணமாகவே பிரெட் மென்மையாகவும், புசுபுசுவென்ற அமைப்பையும் பெறுகிறது. எனினும் பிரெட்டை நாம் குளிர் சூழலில் வைக்கும் பொழுது அந்த ஸ்டார்ச் மூலக்கூறுகள் மீண்டும் கிரிஸ்டலாக மாறத் தொடங்கி அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றுகிறது. இதனால் பிரெட் உறுதியாக மாறி, வறண்ட அமைப்பையும் பெறுகிறது.

ஸ்டார்ச் கெட்டியாகும் விகிதத்தில் வெப்பநிலை ஒரு முக்கிய பங்கு கொண்டுள்ளது. குளிர்சாதன பெட்டியில் உள்ள வழக்கமான வெப்ப நிலையில் ஸ்டார்ச் விரைவாக மீண்டும் படிகமாகிறது. ஆகவே பிரெட்டை பிரிட்ஜில் சேமித்து வைப்பதற்கு பதிலாக சாதாரண அறை வெப்ப நிலையில் சேமித்து வைப்பது நல்லது.

பிரெட்டை பிரிட்ஜில் வைப்பதால் அது விரைவில் கெட்டுப் போவது மட்டுமல்லாமல், அதன் அமைப்பு மற்றும் சுவையிலும் மாற்றம் ஏற்படுகிறது. பெரும்பாலும் ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கப்பட்ட பிரெட்டை சாப்பிடும் பொழுது அது விழுங்குவதற்கு கடினமாக இருப்பதை நீங்கள் கட்டாயமாக உணர்ந்து இருப்பீர்கள். ஸ்டார்ச் மூலக்கூறுகளில் உள்ள ஈரப்பதமானது வெளியேற்றப்பட்டதே இதற்கு காரணம்.

அதே நேரத்தில் சுவையைப் பற்றி பேசுகையில் இந்த குளிர்ச்சியூட்டம் செயல்முறையின் பொழுது பிரெட்டானது பிரிட்ஜில் சேமித்து வைக்கப்பட்ட பிற உணவுகளில் இருந்து வரக்கூடிய வாசனைகளை உறிஞ்சி கொள்கிறது. இதனால் அது மோசமான சுவை கொண்டதாக மாறுகிறது. பலர் பிரெட்டில் பூஞ்சை வளராமல் இருப்பதற்காக அதனை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம் என்று கருதுவர். குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் பூஞ்சை வளர்ச்சி தாமதப்படுத்தப்பட்டாலும், அது கெட்டுப் போகும் செயல்முறை விரைவுப்படுத்தப்படுகிறது. எனவே பிரெட்டை அறை வெப்ப நிலையில் ஈரப்பதம் இல்லாத காற்று உள்ளே செல்ல இயலாத ஒரு டப்பாவில் சேமித்து வைப்பதன் மூலமாக அதில் பூஞ்சை வளர்ச்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் அதன் அமைப்பு மற்றும் சுவையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது.

அதே நேரத்தில் அறை வெப்ப நிலையில் நீங்கள் பிரெட்டை சேமிக்கும் பொழுது அதனை பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்க வேண்டாம். ஏனெனில் பிளாஸ்டிக் பைகள் ஈரப்பதம் நிறைந்த சூழலை உருவாக்கி, அதனால் பூஞ்சை வளர்ச்சி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருவேளை நீங்கள் பிளாஸ்டிக் பைகளில் பிரெட்டை சேமித்து வைக்கிறீர்கள் என்றால் அந்த பிரெட்டை விரைவாக சாப்பிட்டு விட முயற்சி செய்யுங்கள். ஆனால் ஒருபோதும் பிரெட்டை இனி ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கும் செயல்முறையில் ஈடுபட வேண்டாம். அது கட்டாயமாக அதன் தரத்தையும், சுவையையும் மாற்றிவிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.



No comments:

Post a Comment