ஜூன் மாதம் கிட்டத்தட்ட முடிய போகும் கட்டத்தை அடைந்திருந்தாலும் வெப்பநிலை இன்னும் குறைந்த பாடில்லை. வெளியே சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. வெப்பமானது நம்மை சோர்வடையச் செய்வது மட்டும் அல்லாமல், ஒரு சிலரை நோய் வாய்பட வைக்கிறது.
இரவு நேரத்தில் கூட வெப்பம் நிறைந்த காற்று வீசுவதால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கே பயமாக இருக்கிறது. எந்நேரமும் வியர்வை மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் தடிப்புகள், வியர்க்குரு, போன்றவை நம்மை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தில் நம்மில் பெரும்பாலானவர்கள் விரைவாக சோர்வடைந்து விடுகிறோம்.
சூரிய கதிர்கள் மனநிலையை மேம்படுத்துவது மற்றும் அத்தியாவசியமான வைட்டமின் D வழங்குவது போன்ற பல்வேறு நன்மைகளை அளித்தாலும், அது கட்டாயமாக நம்மை சோர்வடையச் செய்து விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் இதற்கான காரணத்தை என்றைக்காவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? சூரிய கதிர்கள் நம்மை ஏன் சோர்வடைய செய்கிறது என்பதற்கான ஒரு சில காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்.
நீர்ச்சத்து இழப்பு :
சூரியன் நம்மை சோர்வடைய செய்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று டிஹைட்ரேஷன். நாம் சூரிய கதிர்களுக்கு கீழ் அதிகப்படியான நேரத்தை செலவிடும் பொழுது, நமது உடலானது தன்னை குளிர்விக்கும் செயல்முறையில் ஈடுபடுவதற்கு அதிகம் போராட வேண்டி உள்ளது. அதிகப்படியான வியர்வை நமது உடலில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு திரவ இழப்பை ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு சோர்வு மற்றும் ஒரு வித சோம்பேறித்தனம் உண்டாகிறது.
வெப்பத்திற்கு உடலின் பதில் விளைவு :
நம்மை அதிகப்படியான வெப்பநிலைக்கு நாம் வெளிப்படுத்தும் பொழுது உட்புற வெப்பநிலையை பராமரிப்பதற்கு நமது உடல் அதிகம் வேலை செய்ய வேண்டி இருப்பதாக ஒரு ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வியர்வை மற்றும் அதிகப்படியான ரத்த ஓட்டம் மூலமாக செய்யப்படுகிறது. இந்த கூடுதல் முயற்சிக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் நாம் விரைவில் சோர்வாகி விடுகிறோம்.
நோய் எதிர்ப்பு பதில் விளைவு :
ஓரளவு சூரிய கதிர்களுக்கு நம்மை வெளிப்படுத்துவதால் நமது மனநிலை மேம்படுத்தப்பட்டு, செரடோனின் அளவுகள் அதிகமாகி வைட்டமின் D கிடைக்கிறது. எனினும் அதிகப்படியாக சூரிய கதிர்களுக்கு கீழ் நேரத்தை செலவிடும் பொழுது UV கதிர்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது வீக்கத்தை ஏற்படுத்தி, நமது உடலின் நோய் எதிர்ப்பு விளைவை தூண்டி சரும செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோய் எதிர்ப்பு பதில் விளைவு நம் ஆற்றலை உறிஞ்சி நம்மை சோர்வாக்குகிறது.
எலக்ட்ரோலைட் சமநிலையின்மை :
வியர்வை என்பது திரவ இழப்பை மட்டும் ஏற்படுத்தாமல் சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளின் அளவுகளை குறைக்கிறது. தசை செயல்பாடு மற்றும் ஆற்றல் அளவுகளை பராமரிப்பதில் இந்த தாதுக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில் சமநிலையின்மை ஏற்படும் பொழுது தசை வலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.
சன்பர்ன் மற்றும் சரும சேதம் :
சூரிய கதிர்களுக்கு நம்மை அதிகப்படியாக வெளிப்படுத்திக் கொள்வதற்கான மிகத் தெளிவான ஒரு அறிகுறி என்றால் அது சன்பெர்னாக இருக்கும். நமது சருமம் சூரிய கதிர்களால் எரிச்சல் அடையும் பொழுது வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இது சன்பெர்ன் எனப்படும். இந்த சேதமடைந்த சரும செல்களை ஆற்றுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. இதனால் நாம் வழக்கத்தை விட அதிக சோர்வாக உணர்கிறோம்.
உடல் செயல்பாடு :
நீச்சல், விளையாட்டு போன்ற வீட்டிற்கு வெளியே சூரியனின் கீழ் செய்யக்கூடிய ஒரு சில செயல்பாடுகள் நமக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அதனால் நமக்கு அதிகப்படியான சோர்வு உண்டாகிறது. இந்த செயல்பாடுகளின் பொழுது ஏற்படும் சுவாரசியத்தில் நாம் இடையே இடைவெளி எடுத்துக் கொள்வதற்கும், போதுமான அளவு தண்ணீர் பருகுவதற்கும் மறந்து விடுகிறோம்.
தூக்க சீர்குலைவு :
பளிச்சென்ற சூரிய வெளிச்சமானது நமது தூக்க அட்டவணையில் குறிக்கிடலாம். இதனால் இரவு நேரத்தில் தூங்குவதற்கு நீங்கள் சிரமத்தை அனுபவிக்க நேரிடுகிறது. மோசமான தூக்க தரம் காரணமாக அடுத்த நாள் சோர்வாக உணருவீர்கள்.
சூரிய கதிர்கள் காரணமாக ஏற்படும் சோர்வை தவிர்ப்பது எப்படி?
முடிந்த அளவு வெயிலில் அதிகப்படியான நேரம் செலவிடுவதை தவிர்க்கவும்.
ஒருவேளை வேறு வழி இல்லாத பட்சத்தில் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருக மறக்க வேண்டாம்.
அவ்வப்போது பிரேக் எடுத்துக்கொண்டு நிழலில் அமர்ந்து, உடலை குளிர்ச்சிப்படுத்தி உடலுக்கு ஓய்வு கொடுங்கள்.
லேசான, காற்று உள்ளே எளிதாக செல்லக்கூடிய வகையில் ஆடைகளை அணியவும். தொப்பி அணிவது உதவக்கூடும்.
சன்பர்னை தவிர்ப்பதற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.
எலக்ட்ரோலைட் நிறைந்த உணவுகள் அல்லது பானங்களை சாப்பிடவும்.
0 Comments:
Post a Comment