பொறியியல் பாட பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி? - Agri Info

Adding Green to your Life

June 4, 2024

பொறியியல் பாட பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

 மருத்துவப் படிப்புக்கும் பொறியியல் கல்விக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளில் ஒன்று, MBBS-ல் படிப்புப்பிரிவுகள் (branches) இல்லை; BE/BTech படிப்புகளில் முப்பதுக்கும் அதிகமான படிப்புப் பிரிவுகள் உண்டு. ஒரே படிப்புப் பிரிவிலும், தன்னாட்சி (autonomous) கல்லூரிகளில் வழங்கப்படுவதற்குத் தனிப் பாடதிட்டம் இருக்கும் என்பதால் அதைத்  தனியாகக் கணக்கிடவேண்டும். இதைத் தவிர, 'SS' (Self Supporting) என்றும்,   'மதிப்பளிக்கப்பட்டது' (accredited) என்றும், 'Sandwich' என்றும் உள்பகுப்புகளும் உண்டு. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும், அண்ணா பல்கலைக் கழகக் கல்லூரிகளில் இல்லாத, பிரிவுகளும்  உண்டு. இக்காரணங்களால் பொறியியலில் எந்தப் படிப்புப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது பலருக்கும் எழக்கூடிய ஒரு முக்கியமான கேள்வி.


சில குறிப்பிட்ட பொறியியல் துறைகளில் சில மாணவர்களுக்கு இளமையிலிருந்து நாட்டம் (Aptitude) ஏற்பட்டிருக்கும். அது வெறும் கவர்ச்சியாலும்,('ஏரோநாட்டிகல் படித்தால் விமானி ஆகலாம்' என்பது போன்ற) தவறான தகவலாலும் அல்ல என்று உறுதி படுத்திக்கொண்டு, அதன்அடிப்படையில் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து, அப்படித்தேர்ந்தெடுத்த பிரிவுகளில் தமக்கு எட்டாக்கனியாக இருப்பவற்றை நீக்கிவிட வேண்டும். ('+2 தேர்வில் 50% சராசரி மதிப்பெண் பெறாதவர்கள் ஆர்கிடெக்சர் சேர முடியாது'; 'மரைன் இஞ்ஜினீரிங் சேரக் கட்டணம் அதிகம்' போன்றவை). மீதமுள்ளவற்றில், வேலை வாய்ப்பு, ஊதியம், முன்னேற்ற வாய்ப்பு ஆகியவற்றில் திருப்தியளிப்பனவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


பல மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மேற்சொன்னவற்றில் முதல்கட்டத் தேர்வே எளிதாக இருக்காது. உள்ள பல வகையான பாடப் பிரிவுகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொண்டு அலசுவதால் குழப்பம்தான் மிஞ்சும். மாறாக, அத்தனை பாடப்பிரிவுகளையும் பின்வரும் ஏழு பாடத் துறைகளில்/தொகுப்புகளில் அடக்கலாம் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

ஆங்கில அகர வரிசையில் அத்துறைகள்/தொகுப்புகள்:


1. உயிரித்தொழில்நுட்பம் (Biotechnology)

2. வேதிப்பொறியியல் / தொழில்நுட்பவியல் (Chemical Engineering/Technology)

3. குடிமைப் பொறியியல் (Civil Engineering)

4. கணினிப் பொறியியல் (Computer Engineering)

5. மின் மற்றும் மின்னணுப் பொறியியல் (Electrical and Electronics Engineering)

6. மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல் (Electronics and Communication Engineering)

7. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)


குழப்பத்தைத் தவிர்க்க, முதலில் இந்த ஏழு துறைகளில் தமக்கு நாட்டமுள்ள ஓரிரு துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு அத்துறை/ துறைகளுக்குள்ளேயே கவனம்செலுத்திப் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பதும் வரிசைப்படுத்தி முயற்சி செய்வதும் எளிதாக இருக்கும்.


இனி, இத்துறைகளில் ஒவ்வொன்றிலும் அடங்கும் பாடப் பிரிவுகளைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.


*உயிரித் தொழில்நுட்பம்*


உயிரியலில் தீராத மோகமும், அதே நேரத்தில் பொறியியலில் ஆர்வமும் கொண்டவர்களுக்கு இப்பிரிவுகள் ஏற்றவை. தாவர, விலங்கு செல்களையும் நுண்ணுயிரிகளையும் மனிதர் நலத்திற்குப் பயன்படுத்தும் பயோடெக்னாலஜி, உயிரியலும் வேதிப் பொறியியலும் இணைந்தது. வேளாண்மை, உணவியல், மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட பல துறைகளின் அடிப்படையில் இயங்குவது. பயோகெமிஸ்ட்ரி, செல்திசு வளர்ப்பு முதலிய துறைகளைப் பயன்படுத்தும் அறிவியல் என இதை The Euopean Federation of Biotechnology வரையறை செய்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் Industrial Biotechnology என்ற பாடப்பிரிவு வழங்கப்படுகிறது. மருந்தியல், உணவியல், வேதியியல், பிளாஸ்டிக்ஸ், பாலிமர்ஸ், வாசனைப் திரவியங்கள், அழகுசாதனத் தொழிற்சாலைகள் முதலியவற்றில் இத்துறை வல்லுனர்கள் பணியில் இருப்பதைக் காணலாம். தவிர, எம்.டெக்., பிஎச்.டி. படிப்புகளுக்கு உள்நாட்டிலும், உதவித்தொகையுடன் வெளிநாட்டிலும் வாய்ப்புகள் மிகுதி.

பயோமெடிகல் பொறியாளர்கள், மருந்துகளின் தரத்தை உயர்த்துவதிலும், சக்கரநாற்காலி உள்ளிட்ட, விபத்து, பிணி, மூப்பு ஆகியவற்றின் தாக்கத்தைத் தணிக்கும் கருவிகளைக் கண்டும் கையாண்டும் மனித வாழ்க்கையைச் செழுமைப் படுத்த உதவுகிறார்கள். பயோஇன்பர்மேடிக்ஸ் பிரிவு, கணினி அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட கணிதம், பொறியியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உயிரியல் தகவல்களைப் புரியவைக்கிறது. பயோமெடிகல் இன்ஸ்ட்ருமெண்ட்டேஷன் பாடப்பிரிவில் நோயாளிகளின் உடல்நிலை குறித்த தகவல்களை அளந்து பெறவும் சீர்படுத்தவும் உதவும் மின், மின்னணுக் கருவிகளைப் பேணுதல், இயக்குதல், வடிவமைத்தல் முதலிய பணிகள் அடங்கும். பயோமெடிகல் ஃபீல்டு பயன்பாட்டுப் பொறியாளர், எக்யுப்மென்ட் சப்போர்ட் ஸ்பெஷலிஸ்ட், இமேஜிங் பொறியாளர், மெடிகல் கோடர் ஆகிய பணிகளில் இவர்களுக்கு மிகுந்த வாய்ப்பு உண்டு.

வேதிப்பொறியியல் / தொழில்நுட்பவியல் என்பதை அடிப்படையாக (core subject) கொண்ட பிற பாடப் பிரிவுகள்*


பாலிமர் பொறியியல், பிளாஸ்டிக்/ரப்பர் தொழில்நுட்பவியல், வேதியியல் மற்றும் மின்வேதிப் பொறியியல், பெட்ரோலியப் பொறியியல், பெட்ரோகெமிகல் பொறியியல், செராமிக் பொறியியல், டெக்ஸ்டைல் தொழில்நுட்பவியல், டெக்ஸ்டைல் ஃபேஷன் தொழில்நுட்பவியல், டெக்ஸ்டைல் வேதியியல், கார்பெட் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பவியல், மெட்டலர்ஜிகல் பொறியியல், மெட்டலர்ஜி மற்றும் மெட்டீரியல்ஸ் பொறியியல், மரக்கூழ் மற்றும் காகிதத் தொழில் நுட்பம், பயோகெமிகல் பொறியியல், மருத்துவத் தொழில்நுட்பவியல், உணவுத் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் ஆகியவை.



தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் தோன்றிய வேங்கடராமன் ராமகிருஷ்ணன் 2009ல் நோபல் பரிசு பெற்றது வேதியியலில்தான் என்பது கவனிக்கத் தக்கது. வேதிப்பொறியாளர்களுக்கு, ஆராய்ச்சி, கிரிஸ்டலாகிராஃபி, சாயங்கள், தொழிற்கூட/ஆய்வுக்கூட மேலாண்மை, வேதிய மனிதநலம், தர உறுதி, டாக்சிகாலஜி, தகவல் பரிமாற்றம், ப்ராசஸ் கெமிஸ்ட்ரி ஆகிய துறைகளில் பணிகள் காத்திருக்கின்றன. பாலிமர்கள் சமையல் பாத்திரங்கள் முதல் விண்வெளி ஓடங்கள், தானூர்திகள், மின்தளவாடங்கள் எனப் பலவற்றில் பயன்படுவது. பாலிமர் படிப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலை வாய்ப்பைத் தரவல்லது. வேதியியல் மற்றும் மின்வேதிப்பொறியியலில் வேதிப்பொருட்களின் தொகுப்பு, உலோகங்களைத் தூய்மைப்படுத்துதல், எரிசெல்கள், உணர்பொறிகள், மின்படிவு, துரு முதலிய மின்வேதி வினைகளின் தொழில்நுட்பப் பயன்பாடுகள் முதலியவை கற்பிக்கப்படும். இப்படிப்பை முடித்தவர்கள், உயிரி-மின் மருத்துவம், பாட்டரி ஆய்வு மற்றும் விரிவாக்கப் பொறியாளர், ஆற்றல் சேமிப்பு அறிவியலாளர், நீர் சுத்திகரிப்புப் பொறியாளர் முதலிய பணிகளை ஏற்கலாம். பெட்ரோலியப் பொறியியலை மேலொழுக்கப் பகுதி, கீழொழுக்கப் பகுதி என இரண்டாகப் பிரிக்கலாம். இப்பொறியாளர்களுக்கு, பெட்ரோலியச் சுத்திகரிப்பு ஆலைகள், R & D நிறுவனங்கள், பெட்ரோலியம் ஜியாலஜிஸ்ட்டுகள், உற்பத்தி நீர்த்தேக்கப் பொறியாளர்கள் எனப் பல பணிகளில் உலக அளவில் வாய்ப்பு உண்டு


.உணவுத் தொழில்நுட்பத்தில் உணவு நுண்ணியரியல், உணவுச் செப்பமும் பயன்படுத்தலும், மரபணு மாற்றம் முதலியன கற்பிக்கப்படும். இதில் பயின்றவர்கள் உணவுத் தரக்கட்டுப்பாடு, வினியோகம், நுண்ணுயிரி ஆய்வு, டயடடிக்ஸ் முதலிய துறைகளில் பணியாற்றலாம். டெக்ஸ்டைல் டெக்னாலஜி, மற்றும் அத்துடன் இயைந்த ஃபாஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு தர/தயாரிப்பு மேலாளர், மருத்துவ/கட்டுமானத் துகில் பொறியாளர், தரக்கட்டுப்பாடுகள்/விற்பனை மேலாளர், பாணி வடிவமைப்பாளர் முதலிய வேலைகள் பொருந்தும். மரக்கூழ் மற்றும் காகித த் தொழில்நுட்பம் பயின்றவர்களுக்கு மத்திய மரக்கூழ் மற்றும் காகித ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் துறைகளில் ஆராய்ச்சி அறிவியலாளர், ப்ராசஸ் பொறியாளர் மதலிய பணிகள் உண்டு. தோல் தொழில்நுட்பம் நம் நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணி பெற்றுத்தரும் துறைகளில் ஒன்று. தோல் தயாரிப்பு, ஏற்றுமதி, ஃபாஷன் துறை, பாதுகாப்புப் பொருட்கள் தயாரிப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் உள்நாட்டிலும் சீனா, இந்தோனேசியா, ஜெர்மனி, இதாலி முதலிய வெளிநாடுகளிலும் நல்ல பணி வாய்ப்பு உண்டு.



*குடிமைப் (சிவில்) பொறியியல்*



இது மற்ற எல்லாப் பொறியியல் பிரிவுகளுக்கும் முந்தையது மட்டுமல்ல; ஆரம்பத்தில் எல்லாப் பிரிவுகளையும் உள்ளடக்கியதும்கூட. 18ஆம் நூற்றாண்டில் ராணுவப்பொறியியலிலிருந்து பிரித்தறியப்பட்டது என்பதுதான் இதன் பெயருக்குக் காரணம். புவித்தகவலியல், சுற்றுச்சூழல் பொறியியல், வேளாண்பொறியியல், ஆரகிடெக்சர், நகர் மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல், மண்ணியல், கடல் மற்றும் கடற்கரைப் பொறியியல் முதலியவை இந்த அடிப்படைப் பிரிவைச் சார்ந்தவை எனக்கொள்ளலாம். சிவில் பொறியாளர்களுக்குக் கட்டடக்கலை கட்டுமானத்துறை உள்பட்ட பல துறைகளில் தளப் பொறியாளர், மேலாளர், தரக்கட்டுப்பாட்டாளர், திட்டப் பொறியாளர், விற்பனை அதிகாரி, QS/QA/QC பொறியாளர், Networking IT Field Engineer முதலிய பணிகள் காத்திருக்கின்றன. புவித்தகவலியல் (Geoinformatics) என்ற பாடப்பிரிவில், புவியியல், நிலப்படவியல் (Cartography) முதலிய நில அறிவியல் துறைப் பிரச்சினைகளுக்குத் தகவல் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி விடை காணப்படும். நேஷனல் ரிமோட் சென்சிங் ஏஜன்சி, ISRO, DRDO, Forest Survey of India, சுற்றுலாத்துறை முதலியவற்றில் பல்வகைப் பணிகள் இவர்களுக்கு ஏற்றவை. சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பொதுத்துறை மற்றும் தனியார்நிறுவனங்களில் போக்குவரத்து மாசு ஆய்வாளர், நீர்வளப் பொறியாளர், சுகாதார வடிவமைப்பாளர், பாதுகாப்பு அலுவலர், R&D பொறியாளர் முதலிய பணிகளைப்பெறலாம்.


வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனப் பொறியியலில் நில அளவியல், மண்/நீர் வளம், உணவுத் தொழில்நுட்பம், பண்ணைக் கருவிகள், பால்பண்ணை முதலியன கற்பிக்கப்படும். இதைப் படித்தவர்கள் வேளாண்எந்திர விற்பனை, தரக்கட்டுப்பாடு, வங்கி வேளாண்கடன் மேலாளர், வேளாண் அலுவலர் உள்படப் பல பணிகள் ஆற்றலாம். ஆர்கிடெக்சர் பிரிவில் ஆர்கிடெக்சர் வரைகலை, கட்டுமான இயல், நகர்ப்புறத் திட்டமிடல், நில இயற்கை வனப்பு, பேரிடர் மேலாண்மைமுதலியன இடம் பெறும்.



*கணினிப் பொறியியல்*



கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல்  (CSE) என்ற அடிப்படைப் பிரிவில் கம்ப்யூட்டர் ஆர்கிடெக்சரில் துவங்கி, Theory of Computation,..,Parallel programming முதலியன கற்பிக்கப்படும். இப்படிப்பை முடித்தவர்கள் பல தனியார் நிறுவனங்களில் மட்டுமின்றி, அரசுத் துறைகளான CDAC, NIC, ERNET, STPI முதலியவற்றில் Software/Web development, Data base/IT Infrastructure Management, Information Scientist, System Analyst/Administrator எனப் பல பணிகள் புரியலாம். வெளிநாடுகளிலும் நல்ல வாய்ப்பு உண்டு என்பது பலரும் அறிந்ததே. அடுத்து, தகவல்தொழில்நுட்பவியல் (IT) பாடப்பிரிவும் வேலை வாய்ப்பிலும், ஊதியத்திலும், வெளிநாட்டு வாய்ப்பிலும் கவர்ச்சி மிகுந்ததே. CSE யிலிருந்து கிளைத்த மற்ற பிரிவுகளாக Communication and Computer Engg., Computer Science and Information Tech., Computer Software Engg., Information and Communication Tech., Information Tech. and Management முதலிய படிப்புகளைச் சொல்லலாம்.



*மின் மற்றும் மின்னணுப் பொறியியல்*


ரேடியோ, ஆம்ப்ளிஃபையர், கணினி, டிரான்சிஸ்டர், பவர் அண்ட் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ், மைக்ரோ/நேனோ எலக்ட்ரானிக்ஸ், அரைக்கடத்திகள், தொலைத்தொடர்பு, கருவிப்பொறியியல் எனப் பலவற்றிற்கும் அடிப்படையாக இத்துறை விளங்குகிறது. மெக்கட்ரானிக்ஸ், தன்னியக்கம், குளிர்பதனம், பயோமருத்துவப் பொறியியலில் வென்டிலேட்டர், MRI Scanner, ECG கருவிகள், செயற்கை இதயம், ரோபோடிக்ஸ், விண்வெளிப் பயணம் ஆகிய பலவும் மின்னியலின் பல்வேறு பயன்பாடுகள்தான். EEE முடித்தவர்கள் மோட்டார், ரேடார், கடல்பயண/தொலைத்தொடர்பு மின்பொறிகள் வடிவமைத்தல், உயிரி மருத்துவம், கணினி வன்/மென்பொருள், காப்புரிமை, தரக்கட்டுப்பாடு, மின்பகிர்மானம் மதலிய பணிகளை ஏற்கலாம். சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகளிலும், HMT, ISRO, DRDL, DRDOவிலும் ஆராய்ச்சிப்பணிகளும் உண்டு. பணிப்பயிற்சியும் இணைந்த EEE (Sandwich) படிப்பு (5 ஆண்டுகள்), வேலைக்கு 100 சதவீதம் உத்தரவாதமே அளிக்கிறது.



கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுப் பொறியியல் (ICE), ஆற்றல் பொறியியல் (Energy Engineering) ஆகியவற்றை EEE-ன் கிளைப்பிரிவுகள் எனலாம். சில NIT, IIT களில் Electrical Engineering, Electrical Engineering - Power என்ற பிரிவுகளும் வழங்கப்படுகின்றன.



*மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல்*



ECE எனப்படும் இதன் கிளைப்பிரிவுகளாக Electronics and Instrumentation, Applied Electronics and Instrumentation, Electronics, Electronics and Telecommunication, Electronics and Electrical Communication முதலியவற்றைச் சொல்லலாம். சென்னை IIT உள்ளிட்ட சிலவற்றில் இது Electrical Engineering  துறையின் பகுதியாகவே கருதப்படுகிறது. ECE பாடதிட்டத்தில் Signals and Systems, Communication Theory, Control Systems, Transmission Lines, Digital VLSI, Optical/Wireless Communication ஆகியவை அடங்கும். இப்படிப்பை முடித்தவர்களுக்கு பயன்பாட்டு மின்னணுவியல், விமானப் போக்குவரத்து, விண்வெளி, மின்உற்பத்தியும் பகிர்மானமும், தொலைத்தொடர்பு, வானொலி, தொலைக்காட்சி, கணினி, மருத்துவப் பயன்பாட்டுக் கருவிகள், ஆழ்கடல் பணிகள் முதலிய துறைகளில் வரவேற்பு இருக்கும்.


Electronics and Instrumentation என்ற பாடப் பிரிவு, இயக்கங்களை அளத்தல், கட்டுப் படுத்துதல், தானியக்கமாக்குதல் பற்றியது. மெக்கட்ரானிக்ஸ், ரோபோடிக்ஸ் துறைகளுக்கு அடிப்படையானது. இரும்பு, எண்ணெய், பெட்ரோகெமிகல்ஸ், மின் மற்றும் பாதுகாப்பு எனப் பல துறைக் கருவிகளை இவர்கள் இயக்குகிறார்கள். கணினி வன்/மென்பொருள் பணிகளிலும் சிறக்கிறார்கள். CDAC, HAL, BEL, Telecom Authority of India, TANGEDCO முதலிய பல வற்றில் இவர்கள் பணியாற்றலாம்.



*எந்திரப் பொறியியல்*



தானூர்திகள், விமானங்கள், விண்வெளி ஓடங்கள், செயற்கை உடலுறுப்புகள், ரோபோக்கள், ஆட்டோமேஷன் முதலிய பல துறைகளும் எந்திரவியல் பொறியாளர்களின் பங்களிப்போடுதான் இயங்குகின்றன. இந்த அடிப்படைப் பிரிவிலிருந்து கிளைத்தவையாக, Aeronautical, Automobile, Industrial, Manufacturing, Marine, Mechanics and Automation, Mechatronics, Mining, Mining Machinery, Production, Robotics, Mechanical(Sandwich) ஆகியவற்றைச் சொல்லலாம். சுத்திகரிப்பு/எரிவாயு பராமரிப்புப் பொறியாளர், Turbine Technician, Design/QC/Project/Automotive/CNC-VMC பொறியாளர்கள் முதலிய பொறுப்புகளுக்கு ஆஸ்திரேலியா, குவைத், கனடா போன்ற வெளிநாடுகளிலும், புனே, சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களிலும் எந்திரப் பொறியாளர்கள் பெருமளவில் தேவைப் படுகிறார்கள். இப்படிப்புடன் AutoCAD, Solid works, Ansys, Unigraphics, Catia முதலிய பயிற்சியும் இருந்தால் பணி வாய்ப்பு அதிகமாகும்.



இதன் ஒரு கிளைப்பிரிவான Aeronautical Engineering, விமானங்களையும் அதன் பகுதிகளையும் வடிவமைத்தல், பழுது பார்த்தல் பற்றியது. விமான இஞ்சின்கள், ஏவுகணை அமைப்புகள், ராணுவ விமானங்கள், பயண விமானங்கள் என்ற நான்கு பிரிவுகளில் இவர்கள் பணி அடங்கும். விமானப் பராமரிப்புப் பொறியாளர், தொழில்நுட்பப் பதிவுப் பொறியாளர், வானூர்தி வடிவமைப்புப் பொறியாளர், விமானப் பாதுகாப்பு அலுவலர், Short Service Commission (Technical) in Army/Navy, R&D போன்ற பணிகள் இப்படிப்பை முடித்தவர்களுக்குக் காத்திருக்கின்றன. NASA விலும் நம் பொறியாளர்கள் பணியாற்றுகிறார்கள்.


Automobile Engineering துறையின் நிலையைக் கொண்டு ஒரு நாட்டின் பொருளாதார நிலையையே அளந்துவிடலாம் என்பார்கள். ஆடி, ரெனால்ட், ஃபோக்ஸ்வாகன் முதலிய பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடும் இருப்பது நம் நாட்டில் இத்துறை சிறக்க வழிவகுத்திருக்கிறது. Marine Engineering என்ற கிளைப்பிரிவில் படிக்கக் கூடுதல் படிப்பு/உடல் தகுதிகளை மத்திய அரசின் கப்பல் துறை விதித்திருக்கிறது. கட்டணமும் சற்றுக் கூடுதல். ஆயினும், நிறைவான ஊதியமும் உலகம் சுற்றும் வாய்ப்பும் இருப்பதால் இப்படிப்பு மாணவர்களை ஈர்க்கிறது. Mining Engineering பிரிவு, நிலத்தடிக் கனிமவளங்களைப் பற்றியது. சில ஆண்டுகளாகத்தான் பெண்கள் இப்படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள். தரை மட்டத்திற்கு மேலுள்ள சுரங்கப்பகுதியில் மட்டுமே, அதிலும் காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணி வரை மட்டுமே வேலை பார்க்கலாம் என்ற நிபந்தனை பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.



Mechatronics பிரிவு, மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், டெலிகம்யூனிகேஷன், கண்ட்ரோல், கம்ப்யூட்டர் ஆகிய பொறியியல்களைச் சார்ந்தது. இத்துறைப் பொறியாளர்களுக்கு Product Engineer, Robotic Control Engineer, Design and Development, SCADA, Industrial Automation முதலிய  பணிகள் பொருந்தும். Industrial / Manufacturing / Production Engineering படிப்புகள் சில கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இப்பொறியாளர்களுக்கு ரோபோடிக்ஸ், தானியக்கம்,7 ஆலைக்கருவிகள், தளவாடங்களின் தயாரிப்பு, மூலப்பொருட்கள், தொழிலாளர் மேலாண்மை முதலிய பல துறைகளில் பணி வாய்ப்பு உண்டு. புரொடக்‌ஷன் பிரிவில் சில கல்லூரிகளில் 5 ஆண்டு சாண்ட்விச் படிப்பம் உண்டு...



தகவல்


R. மகேந்திரன், M.SC, M.Phil,B.Ed.


PG TEACHER IN MATHS 


    ( கல்வி ஆலோசகர் )


Carrier Guidance Expert & Analyst


MNMC GIRLS HIGHER SECONDARY SCHOOL


         TIRUPPUR 


📱9943412346, 9751233445




No comments:

Post a Comment