நம்முடைய சரிவிகித டயட்டின் ஒரு பகுதியாக சில குறிப்பிட்ட வைட்டமின்களை எடுத்துக்கொள்வதன் மூலம் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ முடியும். இந்த வைட்டமின்களை மருந்து மாத்திரைகள் மூலம் எடுத்துக்கொள்ள வழி இருந்தாலும், இதை பல்வேறு வகையான உணவுகளின் மூலம் பெறுவது நம் ஒட்டுமொத்த உடல் நலனையும் மேம்படுத்தும். நம் ஆயுளை நீட்டிக்கக் கூடிய 5 வைட்டமின்கள் இதுதான்.
வைட்டமின் டி
சூரிய ஒளி வைட்டமின் என அழைக்கப்படும் வைட்டமின் டி, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுவதற்கும், எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், மனநிலையை கட்டுப்படுத்தவும் மிகவும் அவசியமாகும். உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இல்லையென்றால், ஆட்டோ இம்முயூன் கோளாறுகள், புற்றுநோய் மற்றும் இதய நோய் வரும் ஆபத்து அதிகமாகும். உடலில் சூரிய வெளிச்சம் படுவது, கொழுப்பு நிறைந்த மீன்கள் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்கள் மூலம் வைட்டமின் டி-யை பெற முடியும்.
வைட்டமின் சி
ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்த வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி ஃப்ரீ ரேடிக்கல்ஸிடமிருந்து செல்கள் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்கிறது. மேலும் நம் உடலில் கொலஜன் உற்பத்தியவதற்கும் காயங்களை குணப்படுத்தவும் இரும்புச்சத்தை உறிஞ்சவும் இது உதவியாக இருக்கிறது. வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு வகையான புற்றுநோய்கள், இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. ப்ரோகோலி, குடை மிளகாய், கிவி பழம், சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
வைட்டமின் இ
ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நிறைந்த வைட்டமின் இ, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து நமது செல்களை காக்கிறது. இந்த இரண்டும்தான் நாள்பட்ட நோய்களுக்கும் முதுமைக்கும் காரணமாக இருக்கிறது. வைட்டமின் இ நமது சருமத்தை ஆரோக்கியமாக்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வயது சார்ந்த அறிவாற்றல் குறைபாடு மற்றும் அல்சைமர் நோய் வரும் ஆபத்தை வைட்டமின் இ குறைக்கிறது. நட்ஸ், விதைகள், கீரைகள், காய்கறி எண்ணெய் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்கள் மூலம் நமக்கு தேவையான வைட்டமின் இ கிடைக்கிறது.
வைட்டமின் பி12
நமக்கு வயதாகும் போது சிவப்பு ரத்த அனுக்கள் உருவாவதற்கும் டின்ஏ சிந்தெஸிஸ் ஆவதற்கும், நரம்புகளின் செயல்பாடுகளுக்கும் வைட்டமின் பி12 அவசியம் தேவைப்படுகிறது. வைட்டமின் பி12-யை போதுமான அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் ரத்தசோகை, இதய நோய்கள், அறிவாற்றல் குறைபாடு போன்ற ஆபத்துகள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும். இறைச்சி, கடல் உணவுகள் முட்டைகள், பால் பொருட்கள், வலுவூட்டப்பட்ட தானியங்களில் வைட்டமின் பி12 அதிகளவு உள்ளது. வீகன் மற்றும் சைவ உணவுப் பிரியர்கள் இந்த வகை வைட்டமின் குறைபாட்டால் பெரிதும் அவதிப்படுவார்கள். ஆகவே அவர்கள் மருந்து வடிவத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.
வைட்டமின் கே2
இதய ஆரோக்கியம், எலும்புகள், ரத்தம் உறைதல் ஆகியவற்றுக்கு வைட்டமின் கே2 அவசியமாகும். நமது தமனி மற்றும் திசுக்களில் சேகரமாகும் கால்சியத்தை பற்களுக்கும் எலும்புகளுக்கும் அளித்து, எலும்புப்புரை மற்றும் இதய நோய் வரும் ஆபத்தைக் குறைக்கிறது வைட்டமின் கே2. சீஸ், முட்டையின் மஞ்சள் கரு, நொதித்த உணவுகள், புற்களில் வளர்க்கப்பட்ட விலங்கின் பொருட்களில் இந்த வைட்டமின் கே2 அதிகமாக இருக்கிறது.
நாம் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமென்றால், அதற்கு நம்முடைய வாழ்க்கைமுறை தெரிவுகளான மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, சீரான உடற்பயிற்சி, நல்ல தூக்கம், புகையிலை மற்றும் குடிப்பழக்கம் இல்லாமை, ஆரோக்கியமான எடையை பராமரித்தல் போன்றவையும் முக்கிய பங்காற்றுகிறது.
No comments:
Post a Comment