பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. இதில் 45 பாடங்களில் 22,920 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு ‘பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு’ எனும் கியூட் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 261 மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த முன்வந்தன. அதன்படி 15 பாடங்களுக்கு பேப்பர்-பேனா முறையிலும் 48 பாடங்களுக்கு கணினி வழியிலும் என மொத்தம் 63 பாடங்களுக்கு கடந்த மே மாதம் கியூட் நுழைவுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த கியூட் தேர்வு நாடு முழுவதும் 13 மொழிகளில் 28 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 379 நகரங்களில் நடைபெற்றது. 13.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 11,13,610 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீட், நெட் தேர்வு பிரச்சினைகளால் கியூட் தேர்வு முடிவுகள் தாமதம் ஆனது.
இந்நிலையில் கியூட் தேர்வு முடிவு நேற்று முன்தினம் மாலை வெளியானது.
இதில் 45 பாடங்களில் 22,920 மாணவர் கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதில் வணிகப் படிப்புகளில் அதிகபட்சமாக 8,024 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதையடுத்து அரசியல் அறிவியலில் 5,141 மாணவர்கள், இதற்கடுத்து வரலாற்றில் 2,520 மாணவர்கள் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தேர்வு நடைபெற்ற 33 மொழித்தாள்களில் 18-ல் 1,904 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 200 பெற்றுள்ளனர். ஆங்கில தேர்வில் பங்கேற்ற 8.2 லட்சம் மாணவர்களில் 1,683 பேர் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சம்ஸ்கிருதம், பஞ்சாபி ஆகிய இரண்டு மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கடந்த 2023-ல் மொத்தம் 22,836 பேரும், 2022-ல் 21,159 பேரும் 100 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தனர்.
கடந்த 2023-ல் வணிகப் படிப்புகளில் 2,357 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு இப்பாடத்தில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர் எண்ணிக்கை 8,024 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்வி நிலையங் களில் வணிகவியல் போன்ற பாடங்களுக்கு போட்டி அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
அதேவேளையில் பொருளாதாரம்/ வணிகப் பொருளாதாரத்தில் ஹானர்ஸ் படிப்புக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளதால் இந்தப் படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இந்த ஆண்டு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment