சூப்பர் திட்டம்.! இரண்டு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கும் தமிழக அரசு.! விண்ணப்பிக்க தேவையான ஆவணம்.?
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும் மற்றும் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டிற்குள் கீழ் கண்டுள்ள அரசு விதிகளின் படி 2024-25 ஆம் நிதியாண்டிற்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டிற்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 25000/-க்கான வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படும். தாயின் வயது மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வயது வரம்பு விண்ணப்ப நாளன்று 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் 40 வயதிற்குள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000-க்குள் மிகாமல் இருக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லை என்ற சான்று அதற்கென வட்டாட்சியரிடம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள்/ ஒருவேளை இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு முதல் குழந்தையோ அல்லது இரண்டாவது குழந்தையோ இறந்திருப்பின் அவர்களின் இறப்பு சான்று இணைக்க வேண்டும்.
தாய் மற்றும் தந்தையின் வயது சான்று (பள்ளி மாற்று சான்றிதழ் அல்லது அரசு மருத்துவரிடமிருந்து பெற்ற சான்று), இருப்பிட சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ், மருத்துவரிடமிருந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கான சான்றிதழ் (தாய் அல்லது தந்தை), ஒரு வேளை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கலாம்.
முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து, இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 25000/-க்கான வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படும். முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைக்கு ரூபாய்.50000/-க்கான வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படும்.
குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் ஆகியவற்றுடன் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய பெண்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்த பின் அதன் நகல் ஒன்றினை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group
No comments:
Post a Comment