லேப்டாப்புகளில் நீண்ட நேரம் செலவிடும் நபர்கள் அல்லது வெப்பத்தை வெளியிடும் சாதனங்களை தங்களுடைய மடி அல்லது கால்களில் நேரடியாக வைக்கும் நபர்களை தற்போது மிகவும் வித்தியாசமான ஒரு சரும பிரச்சனை தாக்கி வருகிறது. அது டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான பிரச்சனை தோலில் சிவத்தல், எரிச்சல் அல்லது தடிப்புகளை ஏற்படுத்துகிறது.
நவீன தொழில்நுட்பம் மூலமாக இயங்கிக் கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கை முறை காரணமாக இந்த சரும பிரச்சனை ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் தோலானது சிவப்பு-பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. நீண்ட நாட்களுக்கு மிதமான அளவு வெப்பம் வெளிப்படுத்தப்படும் பொழுது இது ஏற்படுகிறது. ரத்த நாளங்கள் மற்றும் தோல் செல்கள் பாதிக்கப்படுவதன் விளைவாக இந்த கோளாறு உருவாகிறது.
டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் :
சமீப சில வருடங்களாகவே டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதற்கு பின்னணியில் உள்ள முக்கியமான காரணங்கள் நவீன வாழ்க்கை முறை மற்றும் அதிகப்படியாக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகும். பலர் தங்களுடைய லேப்டாப்புகளை மடியில் வைத்து பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் ஹீட்டிங் பேடுகளை அதிக அளவில் உபயோகிக்கிறார்கள். இதன் விளைவாகவே இந்த டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் ஏற்படுகிறது.
தொடர்ச்சியாக வெப்பத்தை வெளியிடப்படுவதால், நாளடைவில் சருமத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் உருவாகிறது.
டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் உண்டாவதில் நவீன வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்ப பழக்கவழக்கங்களின் பங்கு என்ன?
இந்த கோளாறு அதிகரித்ததற்கு முக்கியமான காரணம் நம்முடைய தற்போதைய வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள். நம்மில் பெரும்பாலானவர்கள் நீண்ட நேரம் லேப்டாப்பில் வேலை செய்வது மட்டுமல்லாமல் அவற்றை நமது மடியிலேயே வைத்து வேலை செய்வதை பழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இதனால் நமது தோல் தொடர்ச்சியான வெப்பத்திற்கு வெளிப்படுத்தப்படுகிறது.
அதே நேரத்தில் நாள்பட்ட வலி நிவாரணம் அல்லது சௌகரியத்திற்காக நாம் பயன்படுத்தும் ஹீட்டிங் பேடுகள் மற்றும் குளிர்கால மாதங்களில் நாம் தினசரி பயன்படுத்தும் கார் இருக்கை வெப்பப்படுத்திகள் (Car seat warmer) நமது உடலில் ஒரு சில உறுப்புகளுக்கு தொடர்ச்சியாக வெப்பம் வெளிப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாகவும், வெப்பத்தை வெளியிடும் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு காரணமாகவும் டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் ஏற்படுகிறது.
தடுப்பு முறைகள் :
டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் ஏற்படாமல் தடுப்பதற்கு நீங்கள் பின்வரும் குறிப்புகளை பின்பற்றலாம்:-
லேப்டாப் ஸ்டாண்ட் பயன்படுத்தவும் :
லேப்டாப்பை நேரடியாக உங்கள் மடியில் வைப்பதற்கு பதிலாக ஒரு ஸ்டாண்ட் பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது உங்கள் தோலுக்கும் வெப்பத்திற்கும் இடையில் ஒரு தடையை உருவாக்கும் வகையில் கூலிங் பேட் பயன்படுத்துவதன் மூலமாகவோ நீங்கள் டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் வராமல் தடுக்கலாம்.
ஹீட்டிங் பேட் பயன்பாட்டை குறைக்கவும் :
ஒருவேளை நீங்கள் அடிக்கடி ஹீட்டிங் பேட் பயன்படுத்தக் கூடியவர் என்றால் அதன் பயன்பாட்டை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதனை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பேடு மற்றும் உங்களுடைய தோலுக்கு இடையில் ஒரு துணி அல்லது துண்டு வைப்பதை உறுதிப்படுத்துங்கள்.
கார் சீட் வாமர்கள் :
கார் இருக்கை வெப்பப்படுத்திகளை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவும். உங்களுக்கு ஏற்கனவே டோஸ்டட் ஸ்கின் சிண்ட்ரோம் அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் கவனித்தால் உடனடியாக அதற்கான சிகிச்சை பெறுவது அவசியம்.
உங்கள் தோலை வெப்பத்திற்கு வெளிப்படுத்துவதை நிறுத்தவும். மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் கற்றாழை அல்லது கார்டிகோஸ்டிராய்டுகள் அடங்கிய கிரீம்களை பயன்படுத்தி தோலை ஆற்றலாம்.
No comments:
Post a Comment