Search

அடிக்கடி காரணமே இல்லாமல் உங்க மனநிலை மாறுதா..? இந்த விட்டமின் குறைபாடா கூட இருக்கலாம்.!

 நம்முடைய மனநிலை மற்றும் மூளையின் பிற செயல்பாடுகளை பாதிக்கும் மூளை ரசாயனங்களை உற்பத்தி செய்வதில் வைட்டமின் பி-12 முக்கிய பங்கு வகிக்கிறது. சிவப்பு இரத்த அணுக்கள், செல் வளர்சிதை மாற்றம், நரம்பு செயல்பாடு மற்றும் டிஎன்ஏ உற்பத்தி ஆகியவற்றில் இந்த வைட்டமின் பி-12 (கோபாலமின் என்றும் அழைக்கப்படுகிறது) முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் பி12 குறைபாடு உடையவர்களுக்கு விசித்திரமான உணர்வுகள், உணர்வின்மை அல்லது கை, கால்கள் அல்லது கால்களில் கூச்ச உணர்வு, நடப்பதில் சிரமம் (தடுமாற்றம், சமநிலைப் பிரச்சனைகள்), ரத்த சோகை, சிந்தனைத்திறன் (அறிவாற்றல் குறைபாடுகள்), நினைவாற்றல் இழப்பு, பலவீனம் அல்லது சோர்வு போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்படும்.

News18

நமது மனநிலையை வைட்டமின் பி-12 எவ்வாறு பாதிக்கிறது?


நம்முடைய மனநிலை மற்றும் மூளையின் பிற செயல்பாடுகளை பாதிக்கும் மூளை ரசாயனங்களை தயாரிப்பதில் வைட்டமின் பி-12 மற்றும் பிற பி வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறைந்த அளவு பி-12 மற்றும் வைட்டமின் பி-6, ஃபோலேட் போன்ற பிற பி வைட்டமின்கள் குறைவாக இருப்பதற்கும் மன அழுத்தம் ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


மோசமான டயட் அல்லது நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் வைட்டமின்களை உறிஞ்சுவதில் சிரமம் காரணமாக இந்த குறைபாடுகள் ஏற்படலாம். ஆகவே நம்முடைய மனநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் போதுமான பி-12 அளவைப் பராமரிப்பது அவசியமாகும். சிக்கன், இறைச்சி, மீன் மற்றும் பால் பொருட்களில் வைட்டமின் பி-12 அதிகமாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி மாத்திரைகளாகவும், ஊசி அல்லது நாசி ஸ்ப்ரேயாகவும் இது கிடைக்கிறது.

வைட்டமின் பி-12 குறைபாட்டால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?

சைவம் அல்லது வீகன் உணவை உட்கொள்பவர்கள் வைட்டமின் பி-12 குறைபாட்டிற்கு ஆளாகலாம். வயதானவர்கள் மற்றும் செரிமான பாதை பிரச்சனை உள்ளவர்களும் வைட்டமின் பி-12 குறைபாட்டிற்கு ஆளாகின்றனர். செரோடோனின் போன்ற முக்கியமான மூளை இரசாயனங்களை உற்பத்தி செய்வதில் வைட்டமின் பி 12 முக்கிய பங்கு வகிக்கிறது, இது நமது மனநிலையை சீராக்க உதவுகிறது. வைட்டமின் பி12 அளவுகள் குறையும் போது, ​​இந்த இரசாயனங்கள் சமநிலையற்று, மனநிலை மாற்றங்கள், எரிச்சல் மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலினத்தவருமே வைட்டமின் பி12 குறைபாட்டால் மனநிலை மாற்றங்களை அனுபவிக்கிறார்கள்.

வைட்டமின் பி12 குறைபாட்டிற்கும் மனச்சோர்விற்கும் தொடர்புள்ளதாக ஆய்வுகள் கூறினாலும், ஒருவருக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். இதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா அல்லது பி12 குறைபாடு காரணமாக இப்படி ஏற்படுகிறதா என்பதை அறிய மருத்துவரை அணுக வேண்டும்.

ஆரம்பத்திலேயே நோயை கண்டறிதல் மற்றும் உடனடி சிகிச்சையைத் தொடங்குவது மூலம் நோயாளியின் அறிகுறிகளை விரைவாக மேம்படுத்த முடியும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்தல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதலை கைவிடுதல், உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருத்தல், போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.




Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment