நாம் கடையில் பொருட்கள் வாங்கும் போது, அதன் பாக்கெட்டில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதியை கண்டிப்பாகப் பார்ப்போம். இன்றைக்கு நாம் வாங்கும் பெரும்பாலான பொருட்கள் பேக்கேஜ் வடிவத்தில் தான் கிடைக்கின்றன. இதன் பாக்கெட்டின் மேல் இரண்டு தேதிகள் எழுதப்பட்டிருக்கும். ஒன்று இந்த பொருள் இந்த மாதத்தில் அல்லது இந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என்றும், இன்னொன்று இந்த தேதிக்குப் பிறகு காலாவதியாகும் என்பதையும் குறிக்கும். காலாவதி தேதிக்குப் பிறகு அந்த உணவை சாப்பிடலாமா?
ஆனால் பால், ரொட்டி, நம்கீன், மசாலா, கிரீம், பவுடர் போன்ற அனைத்து பேக் செய்யப்பட்ட பொருட்களின் பாக்கெட்டுகளிலும் ஏன் காலாவதி தேதி மற்றும் இந்த தேதிக்கு முன் பயன்படுத்துவது நல்லது என எழுதப்பட்டுள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்தத் தேதி கடந்துவிட்டால், அந்தப் பொருள் உண்மையில் கெட்டுப்போய் சாப்பிடுவதற்கு தகுதியற்றதாக மாறிவிடுமா? காலாவதியான பிறகு எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதில் ஏதேனும் தீங்கு உண்டா? FSSAI-ன் தேசிய உணவு ஆய்வகத்தின் இயக்குநர் ஏ.கே.அதிகாரி இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தருகிறார்.
உற்பத்தி மற்றும் காலாவதி தேதி என்றால் என்ன?
FSSAI விதிகளின்படி உணவு, அழகுசாதனப் பொருட்கள், பானங்கள் அல்லது நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களின் பாக்கெட்டில் அதன் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி எழுதப்பட்டிருக்க வேண்டும். உற்பத்தித் தேதி என்பது பொருள் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட தேதியாகும். அதேசமயம் காலாவதி தேதி என்பது இந்த தேதிக்குப் பிறகு பொருளைப் பயன்படுத்த வேண்டாம் என்று குறிப்பதற்கான தேதியாகும். அதையும் மீறி பயன்படுத்தினால் ஆபத்துகள் வருவதற்கும் வாய்ப்புள்ளது.
காலாவதி தேதி முடிந்தவுடன் பொருட்கள் கெட்டுப் போகுமா?
எந்தவொரு பொருளும் அதன் காலாவதி தேதி வந்தவுடனோ அல்லது அதற்கடுத்த நாட்களிலிலோ அதை தூக்கி எறிய வேண்டும் என உணவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனென்றால் அதன் சுவை, வாசனை ஆகியவற்றில் சில வேறுபாடுகள் இருக்கலாம். துர்நாற்றம் வீசலாம்; பாலாக இருந்தால் திரிந்து போகலாம். தயிரின் சுவையில் வித்தியாசம் இருக்கலாம்.
மசாலா, உலர் பழங்கள், பிற உணவுப் பொருட்கள், எண்ணெய்கள், ஷாம்புகள், கிரீம்கள் போன்றவற்றை அவை காலாவதியான பிறகும் 8-10 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இதனை உடனடியாக தூக்கி எறிய வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் இதற்கும் ஒரு வரம்பு இருக்கிறது.
இந்த விவகாரம் சட்ட நடவடிக்கையுடன் தொடர்புடையது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோன்ற காலாவாதியான ஒரு பொருளை உட்கொண்டதால் மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி வழக்கு ஒன்று நீதிமன்றத்திற்கு வந்தது. அவர்கள் சம்மந்தபட்ட நிறுவனம் மீது வழக்கும் பதிவு செய்தனர். ஆனால் காலாவதி தேதியை கடந்த பிறகும் அந்த நபர்கள் பொருட்களை பயன்படுத்தியுள்ளது அதன்பிறகே தெரிய வந்தது. அதன் காரணமாகவே இதை சாப்பிட்ட நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் அந்த நிறுவனத்தின் மீது எந்த தவறு இல்லாத காரணத்தினால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
எனவே, காலாவதி தேதி பிரச்சனை சட்ட நடவடிக்கைகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவேளை தயாரிப்பு தேதி காலாவதியாகாத போதிலும் பொருளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், அதன் உற்பத்தியாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment