மார்பக புற்றுநோய் என்பது இந்தியாவில் பெரும்பாலான நபர்களை தாக்கும் ஒரு பொதுவான வகை புற்றுநோயாக அமைகிறது. இதன் காரணமாக இதற்கான தடுப்பு முறைகளை நாம் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வழக்கமான பரிசோதனைகள் மற்றும் பிற ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளுடன் சேர்ந்து உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை காரணிகளும் மார்பக புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது.
உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு கொண்டிருக்கும் பொழுது, அவை மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதற்கும் காரணமாகிறது. 30 முதல் 35 வயதிலான பெண்கள் பெரும்பாலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை காரணமாக சிறுவயதிலேயே பூப்படையும் பெண்கள் மற்றும் தாமதமாக நடைபெறும் மெனோபாஸ் போன்றவை மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் உடலுக்கு போதிய செயல்பாடு அளிக்காமல் இருத்தலும், புகைப்பிடித்தல் அல்லது பிற எந்த வடிவத்திலாவது புகையிலை பயன்படுத்துவதாலும் ஏற்படுகிறது. மேலும் 35 வயதிற்கு பிறகு தாமதமாக கர்ப்பம் தரிப்பதாலும் மார்பக புற்றுநோய் உண்டாகலாம். அதோடு தாய்ப்பால் ஊட்டாமல் இருப்பது, மார்பகத்தின் மரபணு சார்ந்த வரலாறு அல்லது கருப்பை புற்றுநோய் போன்றவை மார்பக புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
இறுதியாக பெண்களில் மலட்டுத்தன்மையை சரி செய்வதற்கு வழங்கப்படும் ஹார்மோன் ஊக்க மருந்துகள் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது. மார்பக புற்றுநோயானது மரபணு, ஹார்மோன், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் ஆகிய அனைத்தின் விளைவாக தூண்டப்படுகிறது.
மார்பக புற்றுநோயை தடுப்பதில் உணவின் பங்கு :
சரிவிகித ஊட்டச்சத்து மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலமாக ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது அவசியம். உடல் பருமன் மற்றும் அதிகமான உடல் எடை ஆகிய இரண்டும் மெனோபாஸுக்கு பிறகு கொழுப்பு செல்கள் உற்பத்தி செய்யும் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் காரணமாக மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. ஆகவே உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த உணவை தினமும் சாப்பிடுங்கள்.
காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய உணவை தினமும் சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் குறையும் என்று ஒரு சில ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
மது அருந்துவது மார்பக புற்றுநோய் உண்டாவதற்கான அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே முடிந்த அளவு மது அருந்துவதை குறைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இது ஹார்மோன் அளவுகளை அதிகரித்து மார்பக புற்றுநோயை உண்டாக்கலாம்.
நட்ஸ் வகைகள், விதைகள், அவகாடோ பழம் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை தேர்ந்தெடுப்பது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது.
சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் உள்ள உணவை சாப்பிடுவது மார்பக புற்றுநோயை ஏற்படுத்தலாம். பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் அடங்கிய டோஃபு, சோயா பால் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஹார்மோன் அளவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, செரிமான ஆரோக்கியத்திற்கு ஆதரவு தருவதன் மூலமாக மார்பக புற்று நோய்க்கு எதிரான விளைவுகளை வெளிப்படுத்துகிறது.
மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதில் உடற்பயிற்சியின் தாக்கம் :
விறுவிறுப்பான நடை பயிற்சி, ஜாகிங், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை வழக்கமான முறையில் செய்வது ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்து மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. மார்பக புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புள்ள ஈஸ்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் அளவுகளை உடற்பயிற்சி குறைக்க உதவுகிறது.
மேலும் உடற்பயிற்சியானது வீக்கத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மனநலனை மேம்படுத்துவதால் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு பங்களிக்கிறது. இந்த காரணிகள் அனைத்தும் மறைமுகமாக மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகின்றன. நீங்கள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வரும் பொழுது உங்களுடைய ஹார்மோன் அளவுகள் சமநிலை அடைந்து புற்றுநோய் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
- எனவே புற்றுநோயை தடுப்பதற்கு மட்டுமல்லாமல் உங்களுடைய ஒட்டுமொத்த நல்வாழ்வை கருதி ஆரோக்கியமான உணவையும் உடற்பயிற்சியையும் உங்களது அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள தவறாதீர்கள்.
0 Comments:
Post a Comment