கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா பிரச்சனை உருவெடுத்துள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த 14 வயதான மிருதுல் ஒரு குளத்தில் குளித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த அந்த சிறுவன் தலைவலி மற்றும் வாந்தி பிரச்சனையால் அவதியடைந்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு primary amoebic meningoencephalitis எனப்படும் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் அந்த சிறுவனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன் கிழமை சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தக்ஷினா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகியோர் இந்த அமீபா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தாக்ஷினா மூணாறுக்கு பள்ளி சுற்றுலா சென்று அங்கு நீச்சல் குளத்தில் குளித்தபோது இந்த அமீபா தொற்று ஏற்பட்டதாகவும், ஃபட்வா தனது வீட்டின் அருகே உள்ள ஆற்றில் உறவினர்களுடன் குளித்த போது தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மற்றொரு சிறுவனும் இந்த தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமையன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்கவும், நீச்சல் குளங்களில் குளோரினேஷன் செய்யப்படுவதை உறுதி செய்யவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (primary amoebic meningoencephalitis - PAM) என்றால் என்ன?
முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது அரிதான மத்திய நரம்பு மண்டல தொற்று ஆகும், இது நன்னீர், ஏரிகள் மற்றும் ஆறுகளில் காணப்படும் அமீபாவால் ஏற்படுகிறது. அமீபிக் என்செபாலிடிஸ் எனப்படும் நோயின் வகைகளில் பிஏஎம் ஒன்றாகும். PAM இன் ஆரம்ப அறிகுறிகள் பாக்டீரியா மூளைக்காய்ச்சலைப் போலவே இருக்கும்.
பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையத்தின் அறிக்கையின்படி, இந்த தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 90% க்கும் அதிகமாக உள்ளது. இது மூளை செல்கள் மற்றும் திசுக்களை நேரடியாக பாதிக்கிறது என்பதால் இது மூளை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
இந்த தொற்றானது மூக்கு வழியாக உடலில் நுழைந்து நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. மேலும் மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும். இது பொதுவாக நீச்சல், டைவிங் அல்லது மற்ற நீர் விளையாட்டு பயிற்சி செய்யும் போது நிகழலாம். இந்த அரிய நோய் முக்கியமாக இளம் வயதுடையவர்களை பாதிக்கிறது.
அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், தலைவலி, கழுத்து விறைப்பு, குமட்டல் போன்ற பொதுவான மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் உண்டாகும் என அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) அளித்த தகவலில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த அறிகுறிகள் தோன்றிய 1 முதல் 18 நாட்களுக்குள் இறப்பு நேரிடலாம்.
சிகிச்சை :
இந்த நோய்த்தொற்று அரிதாக இருப்பதால் குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் பிழைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment