காலாவதியான மாத்திரைகளை சாப்பிட்டால் என்ன ஆகும்..? கட்டுக் கதைகளும், உண்மைகளும்! - Agri Info

Adding Green to your Life

July 2, 2024

காலாவதியான மாத்திரைகளை சாப்பிட்டால் என்ன ஆகும்..? கட்டுக் கதைகளும், உண்மைகளும்!

 நம் அனைவரது வீட்டிலுமே பெரும்பாலும் மருந்து பெட்டி அல்லது ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வைத்திருப்போம் அதிலுள்ள மாத்திரைகளை நாம் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றின் காலாவதி தேதியை கட்டாயமாக சரி பார்ப்போம். ஆனால் ஒருவேளை மாத்திரைகள் காலாவதி ஆகிவிட்டால் அவை பிரயோஜனம் இல்லாமல் போகுமா? அல்லது அவை விஷமாக மாறுமா? என்பதை என்றைக்காவது நீங்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா. காலாவதியான மாத்திரைகள் பற்றிய ஒரு சில கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு மருந்தின் காலாவதி தேதி எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது?

ஒரு மருந்தின் காலாவதி தேதியானது குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அதன் பாதுகாப்பு செயல்திறன் மற்றும் தரம் போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அது சேமிக்கப்படும் இடத்தை பொறுத்து அதன் தரம் சோதிக்கப்படுகிறது. இதில் மாத்திரைகள் சேமிக்கப்படும் வெப்பநிலை, ஈரப்பதம், வெளிச்சம் மற்றும் ஆக்ஸிஜன் அளவுகள் போன்றவை கருத்தில் கொள்ளப்படும். பல்வேறு விதமான தர கட்டுப்பாட்டு சோதனைகளை மேற்கொண்ட பிறகு மாத்திரைகளுக்கான காலாவதி தேதி முடிவு செய்யப்பட்டு அச்சிடப்படுகிறது.

News18

காலாவதியான மாத்திரைகளை சாப்பிட்டால் என்ன ஆகும்?

காலாவதியான மாத்திரைகளை சாப்பிடுவதால் பல்வேறு அபாயங்கள் மற்றும் விளைவுகள் ஏற்படலாம். இது குறிப்பிட்ட அந்த மருந்து மற்றும் அது எவ்வளவு நாட்களுக்கு முன்பு காலாவதியானது என்பதை பொறுத்து அமைகிறது. மாத்திரைகளை சாப்பிடுவதால் அலர்ஜி அல்லது எதிர்பாராத பக்க விளைவுகள் ஏற்படலாம். ஒரு சில காலாவதியான மாத்திரைகளில் பாக்டீரியா வளர்ச்சி ஏற்பட்டு இருந்தால், அதனை சாப்பிடும் பொழுது அதனால் நமக்கு தொற்றுகள் அல்லது பிற உடல் உபாதைகள் ஏற்படலாம்.

இன்சுலின் மற்றும் ஹார்மோன் மருந்துகள் காலாவதி ஆகும் பட்சத்தில் அவற்றின் செயல்திறன் குறைந்து அதனால் ரத்த சர்க்கரை அல்லது ஹார்மோன் அளவுகள் தாறுமாறாக ஏற்றத்தாழ்வுக்கு ஆளாகி மோசமான சிக்கல்கள் ஏற்படலாம். இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அளிக்கப்படும் நைட்ரோகிளசரின் போன்றவற்றை காலாவதி ஆகிய பிறகு பயன்படுத்தினால் அதனால் ஹார்ட் அட்டாக், பக்கவாதம் அல்லது மேலும் ஒரு சில இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். காலாவதியான கண் மருந்துகள் மற்றும் காது மருந்து சொட்டுகள் தொற்றுகள் அல்லது எரிச்சல் போன்றவற்றை உண்டாக்கும்.

காலாவதி தேதிக்குப் பிறகு ஒரு சில நாட்களுக்கு மருந்துகளை பயன்படுத்தலாமா?

ஒரு குறுகிய காலகட்டத்திற்கு அந்த மருந்துகளின் செயல்திறன் இருக்கும் என்றாலும் கூட அவற்றை பயன்படுத்துவது சரியானது அல்ல. ஏனெனில் காலாவதியான மருந்துகள் எப்போது, எப்படி, என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நம்மால் சொல்ல முடியாது. எனவே மருந்துகள் காலாவதி ஆகிவிட்டால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தவும்.

ஹெர்பல் அல்லது நேச்சுரல் சப்ளிமெண்டுகள் காலாவதியான பிறகு பாதுகாப்பானதா?

ஹெர்பல் மற்றும் நேச்சுரல் சப்ளிமெண்டுகளும் காலாவதி தேதிக்கு பிறகு அதன் செயல்திறன் குறைந்து அது தயாரிக்கப்பட்டதன் நோக்கத்தை பூர்த்தி செய்யாது. எனவே இவற்றை பயன்படுத்தும் பொழுதும் கட்டாயமாக காலாவதி தேதியை பின்பற்றுவது அவசியம்.

மருந்துகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால் அவை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்குமா?

குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் மருந்துகள் கெட்டுப் போகும் செயல்முறை தாமதப்படுத்தப்படலாம். எனினும் காலாவதி தேதிக்குப் பிறகு அதனை பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே காலாவதியான மருந்துகளை பாதுகாப்பான மற்றும் சரியான முறையில் அப்புறப்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்.

காலாவதியான மருந்துகளை மறுசுழற்சி செய்ய முடியுமா?

காலாவதியான மருந்துகளை வழக்கமான வீட்டு உபயோக கழிவுகளுடன் சேர்த்து மறுசுழற்சி செய்ய பரிந்துரைக்கப்படவில்லை. அதற்கு சரியான கையாளுதல் மற்றும் அப்புறப்படுத்தும் முறைகள் அவசியம்.

காலாவதியான மருந்துகள் பார்ப்பதற்கும் முகரும் பொழுது வழக்கமான வாசனையை கொண்டிருந்தால் அவற்றை நாம் பயன்படுத்தலாமா?

காலாவதியான மருந்துகளின் பாதுகாப்பை அதன் தோற்றம் மற்றும் வாசனை முடிவு செய்யாது. ஒரு சில காலாவதியான மருந்துகள் எந்த ஒரு வெளிப்புற அறிகுறியையும் ஏற்படுத்தாமல் மோசமான விளைவுகளை உண்டாக்கலாம். ஆகவே ஒருபோதும் காலாவதியான மருந்துகளை சாப்பிடாதீர்கள்.

தவறுதலாக நான் காலாவதியான மருந்துகளை சாப்பிட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்?

காலாவதியான மருந்துகளை நீங்கள் சாப்பிட்டுவிட்டால் முதலில் அமைதியாக இருந்து, பதட்டப்படாமல் அதனால் ஏதேனும் விளைவுகள் அல்லது அறிகுறிகள் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்கவும். அடுத்து மருத்துவரை அணுகி விவரத்தை கூறி அதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

காலாவதியான மருந்துகளை என்ன செய்ய வேண்டும்?

காலாவதியான மருந்துகளை சரியான முறையில் நீங்கள் அப்புறப்படுத்த வேண்டும். மருந்துகளை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள். சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் அவற்றை நாம் அப்புறப்படுத்த வேண்டும். கழிப்பறைகள் அல்லது சாக்கடைகளில் ஒருபோதும் மருந்துகளை அப்புறப்படுத்தாதீர்கள். மேலும் பிற வீட்டு உபயோக கழிவுகளோடு சேர்த்து மருந்துகளை அப்புறப்படுத்த கூடாது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment