தொழில்நுட்பமும் அறிவியலும் வளர வளர அதோடு சேர்த்து அழிவும் மாசுபாடும் அதிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். நமது உணவு மற்றும் தண்ணீரில் காணப்படும் சிறிய பிளாஸ்டிக் துகள்களாக மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு மூலங்களிலிருந்து நமது பூமி தொடர்ந்து மாசடைந்து வருகிறது.
இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. இதய பிரச்சனைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் புற்றுநோய் ஆகியவற்றுக்கும் இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில், பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பதால், நம் ரத்த ஓட்டத்தில் நுழையும் மைக்ரோபிளாஸ்டிக் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஆஸ்திரியாவில் உள்ள டான்யூப் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவத் துறை நடத்திய ஆய்வில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றவர்களிடம் பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படாத திரவங்களை பருகுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் வழங்கினர். இப்போது அவர்களின் ரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறைவைக் கண்டனர்.
“குறிப்பிடத்தக்க போக்குகள் காணப்பட்டன. முதன்முறையாக, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகிறது. அநேகமாக ரத்த ஓட்டத்தில் பிளாஸ்டிக் துகள்களின் அளவு குறைவதால் கூட இது நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது” என்று ஆய்வுக் குழு கூறியுள்ளனர்.
“மேலும் பிளாஸ்டிக் நுகர்வு குறைவதால் ரத்த அழுத்தம் குறைவதைக் குறிக்கும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ரத்த ஓட்டத்தில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் உயர் இரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கக்கூடும் என்று நாங்கள் கருதுகிறோம்" என இவர்கள் அனுமானித்துள்ளார்கள்.
ஆகவே பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற பரிந்துரையுடன் இந்த ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் நிறைவு செய்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள திரவங்களை குடிப்பதன் மூலம் மனிதர்கள் வாரந்தோறும் சுமார் 5 கிராம் அளவிற்கு மைக்ரோ பிளாஸ்டிக் உட்கொள்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உடலுக்குள் நுழைவதைத் தடுக்க என்னதான் செய்ய வேண்டும்? இனிமேல் பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிப்பதற்கு பதிலாக வீட்டு குழாயில் வரும் நீரை கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்க வேண்டும் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. இந்த முறைகள் மூலம் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் நானோபிளாஸ்டிக்ஸ் இருப்பதை கிட்டத்தட்ட 90 சதவிகிதம் குறைக்கலாம்.
இறுதியாக, இதய செயல்பாட்டில் பாலின வேறுபாடுகள் மற்றும் குறைந்த பித்தலேட் வெளிப்பாட்டின் சாத்தியமான தாக்கம் போன்ற காரணிகள் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இதுகுறித்த மேலதிக விவரங்கள் ஆராயப்பட வேண்டும்.
0 Comments:
Post a Comment