குழந்தைகளின் வளர்ச்சியில் எலும்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்புகள் வலுவாக இருந்தால் மட்டுமே உங்கள் குழந்தைகள் நன்கு ஆக்ட்டிவாக இருக்க முடியும். அதுமட்டுமின்றி குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் அவர்களின் எலும்பு ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், அவர்களின் எலும்புகள் வலுவாகவும் இருக்க, அவர்களின் தினசரி உணவில் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் உணவுகளை சேர்ப்பது அவசியம்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்க அவர்களது டயட்டில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி அளவை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
உங்கள் குழந்தையின் எலும்புகள் வலுவாக இருக்க நீங்கள் அவர்களுக்கு தவறாமல் கொடுக்க வேண்டிய சில முக்கிய உணவுகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
எலும்பு வளர்ச்சியில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அளவு கால்சியத்தை வழங்குகின்றன. பால் பொருட்களில் கால்சியம் மட்டுமல்லாமல் வைட்டமின் டி-யும் உள்ளது. இது உடலுக்கு தேவையான கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது.
கீரை வகைகள், கடுகு கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சையிலை காய்கறிகளில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே அதிகம் காணப்படுகிறது. மேலும் இவை உங்கள் குழந்தைகளின் எலும்புகளை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இவற்றில் இருக்கும் வைட்டமின் கே சத்தானது குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
பாதாம்கள் எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. பாதாம்களில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் ப்ரோட்டீன் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. சிட்ரஸ் வகை பழங்களை குழந்தைகளுக்கு வழக்கமான அடிப்படையில் கொடுப்பதால், அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதோடு, அவர்களின் எலும்புகள் வலுவாக இருக்கும். சிட்ரஸ் பழங்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. எலும்பு திசு (bone tissue) உருவாவதற்கு கொலாஜன் மிக அவசியம்.
- சோயாபீன்ஸ் மற்றும் சோயா சீஸ் போன்ற பொருட்களை குழந்தைகளின் டயட்டில் சேர்ப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் புரதத்தை வழங்குகிறது. இவை குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
No comments:
Post a Comment