இன்றைய நவீன காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது. எந்த வயதினருக்கும், பாலினத்தவருக்கும் மாரடைப்பு வரும். மாரடைப்பின் சில அறிகுறிகளை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தாலும், இளம் தலைமுறையினரை அமைதியான முறையில் தாக்கும் மாரடைப்பு (சைலன்ட் ஹார்ட் அட்டாக்) குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.
இது எந்த நேரத்திலும் ஒருவரை தாக்கலாம். மாரடைப்பு வரும் பெரும்பாலானோருக்கு நெஞ்சு வலி, சுவாசப் பிரச்சனை, தலைசுற்றல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியான முறையில்தான் தாக்குகிறது. வழக்கமான மாரடைப்பு போல் இதற்கு நெஞ்சு வலி ஏற்படாது என்பதால் உடலில் ஏற்படும் சின்னச்சின்ன அறிகுறிகளுக்கும் நாம் கவனம் கொடுக்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். சைலன்ட் ஹார்ட் அட்டாக்கின் 5 அறிகுறிகள் பற்றி பிரபல கார்டியாலஜிஸ்ட் டாக்டர் ரவீந்தர் சிங் ராவ் கூறியுள்ளதை பற்றி இங்கே பார்ப்போம்.
காரணமில்லாத சோர்வு: காரணமே இல்லாமல் தொடர்ச்சியாக களைப்பாக, சோர்வாக இருப்பது போல் உணர்ந்தால், அது அமைதியான மாரடைப்பின் அறிகுறிகளாக கூட இருக்கலாம். பலவீனமான இதயம், தனது ஆற்றலை உடலிலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்வதால் இவ்வாறு களைப்பு உண்டாகிறது.
மூச்சுவிடுவதில் சிரமம்: எந்தவித உடல் இயக்கம் இல்லாத நேரத்திலும் கூட மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால், அது அமைதியான மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். இதயத்தின் செயல்பாடு குறையும்போது உடலுக்கு தேவையான ஆக்சிஜன் குறைவாக கிடைக்கிறது. இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
உடலின் மேற்பகுதியில் அசௌகர்யம்: கைகள், கழுத்து, தாடை அல்லது முதுகு போன்ற உடலின் மேற்பகுதியில் வலியோ அசௌகரியமோ இருந்தாலும் கூட, அது சைலன்ட் அட்டாக்கிற்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த வலி மிதமாக இருப்பதால் இதை பெரிதாக நாம் கண்டுகொள்வதில்லை.
குமட்டல் மற்றும் தலைச்சுற்றல்: தொடர்ச்சியான குமட்டல், தலைவலி அல்லது தலைச்சுற்றல் வந்தால் இதயத்தின் செயல்பாட்டில் பிரச்சனை இருப்பதாக அர்த்தம். இதயத்தால் ரத்தத்தை ஒழுங்காக பம்ப் செய்ய முடியாதபோது ரத்த அழுத்தம் குறைந்து தலைச்சுற்றல் உண்டாகிறது.
அதிகபடியான வியர்வை: நாம் வெப்பமான சுழலில் வாழ்ந்து வந்தாலும், எதுவும் செய்யாமல் ஓய்வாக இருக்கும்போது கூட வழக்கத்தை விட அதிகமாக வியர்வை வந்தால், இதயத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதன் வெளிப்பாடாகும். இதயத்தில் அழுத்தம் ஏற்பட்டால் உடலில் வியர்வை அதிகமாகும். இவற்றோடு மற்ற அறிகுறிகளும் சேரும்போது நாம் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்.
அமைதியான மாரடைப்பிற்கு இது மட்டுமே அறிகுறிகள் இல்லையென்றாலும் இவற்றில் எந்த அறிகுறிகளாவது உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மேலும் இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் டயட் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.
Search
Home »
Health Tip
» சைலன்ட் ஹார்ட் அட்டாக்... இந்த அறிகுறிகளை கண்டிப்பா கவனியுங்க..!
0 Comments:
Post a Comment