TNPSC EXAM - கல்வித் தகுதி மாற்றியமைப்பு - Agri Info

Adding Green to your Life

August 31, 2024

TNPSC EXAM - கல்வித் தகுதி மாற்றியமைப்பு

 

1303187

இதுவரை சிறப்புத் தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு, குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு அடிப்படை கல்வித்தகுதியும் மாற்றப்பட்டு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்) டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர் , கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இதே அந்தஸ்துள்ள உதவி வனப்பாதுகாவலர் பணிக்கு குரூப்-1-ஏ தேர்வும், இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவிக்கு குரூப்-1-பி தேர்வும், மாவட்ட  கல்வி அதிகாரி பணிக்கு குரூப்-1-சி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகின்றன. இவை தவிர, குரூப்-1 அந்தஸ்துடைய தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு சிறப்புத் தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு தொழிலாளர் சட்டம் தொடர்பான முதுகலை படிப்பு அல்லது பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தொழிலாளர் சட்டம் தொடர்பான டிப்ளமா அல்லது முதுகலை டிப்ளமா படித்திருக்க வேண்டும். அதேசமயம் குரூப்-1 தேர்வெழுத ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தாலே போதும்.இந்நிலையில், இதுவரை சிறப்புத் தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு, குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் கொ.வீரராகவ ராவ் இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த அரசாணையின்படி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வுக்கு தற்போது நடைமுறையில் இருந்து வரும் அடிப்படை கல்வித் தகுதி (தொழிலாளர் நலன் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தொழிலாளர் நலன் டிப்ளமா படிப்பு) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்படுவதால் இதற்கும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும்.

மேலும், முன்பு பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 30 ஆக இருந்தது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு கிடையாது. ஆனால், தற்போது குரூப்-1 தேர்வுடன் இத்தேர்வு இணைக்கப்பட்டுள்ளதால் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு கட்டுப்பாடு இதற்கும் பொருந்தும். குரூப்-1 தேர்வில் வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




தேர்வர்கள் வேண்டுகோள்: டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு இடம்பெற்றும் பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டு தேர்வு நடத்தப்படவில்லை. இத்தேர்வை எதிர்பார்த்து தொழிலாளர் சட்டம் தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்களும், தொழிலாளர் சட்டம் தொடர்பான டிப்ளமா படிப்பை படித்த பட்டதாரிகளும் படித்து வருகின்றனர். இந்நிலையில், இத்தேர்வு திடீரென குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டு வயது வரம்பும் கொண்டுவரப்பட்டிருப்பதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.




இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “உதவி ஆணையர் தேர்வை எதிர்பார்த்து கடந்த 2 ஆண்டுகளாக படித்து வருகிறோம். முன்பு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. தற்போது வயது வரம்பு 39 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் 39 வயது கடந்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. தொழிலாளர் சட்டம் படித்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வயது வரம்பு தளர்வை குறைந்தபட்சம் ஒருமுறையாவது வழங்க வேண்டும். நாங்கள் எங்களுக்கு வேலை கேட்கவில்லை. வேலைக்கான தேர்வை எழுதுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். எனவே, எங்களின் நியாயமான கோரிக்கையை தொழிலாளர் நலத்துறை கனிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறோம்,” என்றனர்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment