நடப்பாண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2-வது கட்டமாக 55,478 கையடக்கக் கணினிகள் (டேப்லெட்) வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மாறி வரும் கற்றல் - கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதையடுத்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலமாக டேப்லெட் கொள்முதல் செய்யப்பட்டு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கடந்த கல்வியாண்டில் (2023-24) முதல்கட்டமாக ஆரம்பப் பள்ளிகளில் பணிபுரியும் 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.101.48 கோடியில் டேப்லெட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் பரவலாக நல்வரவேற்பு கிடைத்தது. தற்போதைய தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்ப தங்கள் திறன்களை மெருகேற்றிக் கொள்ளவும், சிறந்த கற்பித்தல் பணிகளுக்கும் இது வழி செய்வதாக ஆசிரியர்கள் கூறினர்.
இந்நிலையில், தொடர்ந்து 2-வது கட்டமாக நடப்பு கல்வியாண்டில் (2024-25) அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 55,478 ஆசிரியர்களுக்கு டேப்லெட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான கொள்முதல் சார்ந்த பணிகள் பாடநூல் கழகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தச் செயல்பாடுகளை துரிதமாக முடித்து ஆசிரியர்கள் பயன்பாட்டுக்கு விரைவில் டேப்லெட்கள் வழங்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment