ஒரு நாட்டின் வருங்கால தூண்களை உருவாக்க ஆசிரியர்கள் வெளிப்படுத்தும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் இந்த சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்புகளை போற்றும் வகையில் பல நாடுகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
நம் நாட்டை பொறுத்த வரை சிறந்த அறிஞராகவும் ஆசிரியராகவும் இருந்த இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த நாளன்று மாணவர்கள் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவிக்கும் சந்தர்ப்பமாக ஆசிரியர் தினம் இருக்கிறது. தங்கள் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளை பல நிகழ்வுகள் நடத்தி மற்றும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாணவர்கள் மதிக்கிறார்கள்.
ஆசிரியர் தினம் வரலாறு:
நம் நாட்டின் கல்வித் துறையில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் அவரது பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1962-ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் நாட்டின் இரண்டாவது குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது இந்த ஆசிரியர் தின கொண்டாட்டம் நாட்டில் தொடங்கப்பட்டது.
ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்த்தை பெற்று குடியரசு தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட, அவரது முன்னாள் மாணவர்கள் மற்றும் நண்பர்களில் சிலர் அவரை அணுகினர். ஆனால் அவரோ செப்டம்பர் 5-ஐ தனது பிறந்தநாளாக கொண்டாடுவதற்குப் பதிலாக அந்த நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கடைப்பிடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பணிவுடன் பரிந்துரைத்தார்.
சமுதாயத்தில் ஆசிரியர்கள் வகிக்கும் முக்கிய பங்கையும், எதிர்கால இளைஞர்களை வளர்ப்பதில் அவர்கள் ஏற்றுள்ள மகத்தான பொறுப்பையும் அங்கீகரிப்பதற்காக தந்து பிறந்த நாள் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று அவர் நினைத்தார். இவரது பரிந்துரையை உற்சாகமாக ஏற்று கொண்டது நம் தேசம், அப்போதிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி நாட்டின் கல்வியாளர்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சிக்காக ஆசிரியர் தினத்தில் கௌரவிக்கப்படுகிறார்கள்.
ஆசிரியர் தினத்தின் முக்கியத்துவம்:
மாணவர்களின் மேம்பாட்டிற்காக ஆசிரியர்கள் வெளிப்படுத்தும் அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் நாளாக இருப்பதால் ஆசிரியர் தினம் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவத்தை வகிக்கிறது. மாணவர்கள் பொறுப்புள்ள குடிமக்களாக மாற, அவர்களுக்கு அறிவு மற்றும் திறன்களை கற்பிப்பதன் மூலம் தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றனர் ஆசிரியர்கள். சமூக முன்னேற்றம் மற்றும் தனிமனித மேம்பாடு ஆகிய இரண்டிற்கும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கும் நிலையில், ஆசிரியர் தினம் அவர்களின் மகத்தான பொறுப்பை அங்கீகரிக்க மற்றும் அவர்களை கவுரவிக்க வாய்ப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் ஒரு நாளாக இருக்கிறது.
ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ள சில வாழ்த்து செய்திகள்…
உங்கள் முடிவில்லா பொறுமை மற்றும் ஊக்கத்திற்கும் நன்றி. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
எனக்குப் பிடித்த ஆசிரியராகிய நீங்கள் வழிகாட்டும் விளக்காக இருப்பதற்கு நன்றி
என் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது. அற்புதமான கல்வியாளராக இருப்பதற்கு நன்றி. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
உங்கள் ஞானம் என் வாழ்க்கை பாதையை ஒளிரச் செய்கிறது. நீங்கள் சொல்லி கொடுக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
சிறந்த ஆசிரியரே உங்கள் ஊக்கம் தான் எங்களுக்கு உலகம். ஆசிரியர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்.
ஆசிரியர் தின கொண்டாட்ட யோசனைகள்:
கல்வி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆற்றி வரும் சிறப்புமிக்க பணிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கலாம்.
தங்கள் ஆசிரியர்களை போலவே ஆடை அணிந்து மாணவர்கள், சில சிறப்பு நினைவுகள் அல்லது செயல்களை செய்வதன் மூலம் ஆசிரியர்களுக்கு சிறப்பு உணர்வை ஏற்படுத்தலாம்.
மாணவர்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ ஆசிரியர்களுக்கு பரிசுகள், வாழ்த்து அட்டைகள் அல்லது பூக்களை வழங்கலாம்.
ஆசிரியர்களை கெளரவப்படுத்தும் வகையில் ஆன்லைன் கேதரிங் மற்றும் விரிச்சுவல் ஈவன்ட்ஸ்களை நடத்தலாம்.
இதனிடையே நாளை (செப்டம்பர் 5) அன்று அனுசரிக்கப்பட உள்ள ஆசிரியர் தினத்திற்காக பல பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களை கௌரவிக்க சிறப்பு நிகழ்வுகள், நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் விழாக்களை ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்வுகளில் மாணவர்களின் நிகழ்ச்சிகள், உரைகள் மற்றும் பாராட்டு விருதுகள் வழங்குவது உள்ளிட்டவை அடங்கும்.
ஆசிரியர் தினம் உலகளவில் எப்போது, எப்படி கொண்டாடப்படுகிறது?
இந்தியா: ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் ஆசிரியர்களுக்க நன்றி தெரிவிக்கும் விதமாக பால் திட்டமிட்ட விழாக்களை நடத்துகின்றன.
அமெரிக்கா: இங்கு ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை தேசிய ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் அங்கீகாரம், சிறிய பரிசுகள் மற்றும் நன்றி செய்திகள் போன்ற பல செயல்பாடுகளுடன் அந்த முழு வாரமும் ஆசிரியர்களை பாராட்டும் வாரமாக கொண்டாடப்படுகிறது.
சீனா; செப்டம்பர் 10 அன்று,சீனாவில் ஆசிரியர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் விழாக்கள் மற்றும் விருதுகளுடன் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
மெக்சிகோ; இந்த நாட்டில் மே 15 அன்று விழாக்கள் மற்றும் கலாச்சார விழாக்களுடன் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அங்கே குறிப்பிட்ட சில பகுதிகளில், இந்த நாள் ஒரு பொது விடுமுறை. எனவே ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து ஓய்வெடுக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா: இந்நாட்டில் சில மாநிலங்களில், அக்டோபர் மாதத்தின் கடைசி வெள்ளி ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. காலை தேநீர் போன்ற நடவடிக்கைகள் மூலம் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் இருக்கும்.
தாய்லாந்து: தாய்லாந்தில் ஆண்டுதோறும் ஜனவரி 16 அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களை கௌரவிக்கும் மற்றும் ஆசிரியர் ஒற்றுமையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் விழாக்களை ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் உள்ளடக்கியது.
ரஷ்யா: இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் 5 அன்று ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் குறிப்பிடத்தக்க பங்கை அங்கீகரிக்க, பாராட்ட இந்த நாளை ரஷ்யர்கள் அனுசரிக்கிறார்கள்.
தென் கொரியா: கிங் செஜாங் தி கிரேட் (1397-1450) பிறந்தநாளுடன் இணைந்து, தேசிய ஆசிரியர் தினம் மே 15 அன்று தென் கொரியாவில் அனுசரிக்கப்படுகிறது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment